Published : 03 Oct 2013 06:32 PM
Last Updated : 03 Oct 2013 06:32 PM

அமெரிக்க அரசின் நிலையால் தொடரும் ரூபாய் மதிப்பின் உயர்வு

கடந்த சில மாதங்களாக சரிந்துவந்த டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்தது.

குறிப்பாக இன்று ஒரு சதவிகிதத்துக்கு மேல் இந்திய ரூபாய் மதிப்பு உயர்ந்தது. அன்னிய செலாவணி சந்தையில் இன்று வர்த்தகம் நிறைவடைந்தபோது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 73 பைசா உயர்ந்து 61.73 ரூபாயாக இருந்தது.

ரூபாய் மதிப்பு உயர என்ன காரணம், அடுத்த சில நாட்களுக்கு எப்படி இருக்கும் என்பது குறித்து ஆனந்தரதியின் சீனியர் கரன்ஸி அனலிஸ்ட் சிவசுப்ரமணியத்திடம் பேசியபோது, ரூபாய் மதிப்பு இன்னும் சில நாட்களுக்கு உயர வாய்ப்பு இருக்கிறது. ஒரு டாலர் 60.40 ரூபாய் வரை உயர வாய்ப்பு இருக்கிறது.

இதற்கு அமெரிக்க அரசு அலுவலகங்கள் மூடப்பட்டதுதான் காரணம். மேலும், இன்னும் சில வாரங்களுக்குத்தான் அமெரிக்க அரசிடம் பணம் இருக்கிறது. அதற்குள்ளாக கடன் அளவை அமெரிக்க அரசாங்கம் உயர்த்தியாக வேண்டும். அதனால் அங்கு நிலவும் ஸ்திரமல்ல நிலை காரணமாக டாலர் மதிப்பு சரிந்துகொண்டே வருகிறது. அதனால் யூரோ உள்ளிட்ட மற்ற நாணயங்களின் மதிப்பு உயர்ந்துவருகிறது.

மேலும், இதுபோன்ற நிலைமையில் கியூ.இ.-யை (80 பில்லியன் டாலர் பணப்புழக்கத்தை) நிறுத்த வாய்ப்பு இல்லை. இந்த பிரச்னைகள் காரணமாக அமெரிக்க டாலர் வலுவிழந்து இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வதற்குதான் வாய்ப்பு அதிகம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x