Published : 24 Mar 2014 09:57 PM
Last Updated : 24 Mar 2014 09:57 PM
திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்பது பழமொழி. தற்போதைய சூழலில் இப்போது குறைந்தபட்சம் 10 வீடுகளில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவராவது வெளிநாடுகளில் பணிபுரிவது அதிகரித்துவிட்டது. முன்பெல்லாம் வெளிநாடுகளில் சம்பாதித்த பணத்தை ஆண்டுக்கு ஒரு முறை தாயகம் திரும்பும்போதுதான் கொண்டு வரும் வசதி இருந்தது. நவீன உலகில் சம்பாதிக்கும் பணத்தை ஆயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்தாலும், குக்கிராமத்தில் தன்னைச் சார்ந்தவர்களுக்கு அனுப்பும் வசதி வந்துவிட்டது.
தகவல் தொழில்நுட்ப வசதி, உலகையே சிறிய கிராமமாக சுருக்கி விட்டது. பல மைல்களுக்கு அப்பாலிலிருந்து அனுப்பிய பணம் அடுத்த நிமிஷமே குறிப்பிட்ட நாடுகளுக்கு அனுப்பும் வசதியை பல சர்வதேச நிறுவனங்கள் செய்து வருகின்றன. சமீபத்தில் துபாயில் எக்ஸ்பிரஸ் மணி நிறுவனம் நடத்திய கருத்தரங்கில் அதன் துணைத் தலைவர் சுதேஷ் கிரியானை சந்தித்துப் பேசும் வாய்ப்புக் கிடைத்தது. இனி அவருடனான உரையாடலிலிருந்து…
உங்களுடைய ஆரம்ப காலம் குறித்து…?
பிறந்தது கர்நாடக மாநிலத்தில். மெக்கானிக்கல் இன்ஜினீயரிங்கில் பொறியியல் பட்டம். பின்னர் பெங்களூர் ஐஐஎம்மில் நிர்வாகவியலில் முதுகலைப் பட்டம். இதைத் தொடர்ந்து நிர்வாகவியல் மேம்பாட்டு திட்ட வகுப்பையும் வெற்றிகரமாக முடிந்தேன்.
ஆரம்ப காலத்தில் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றியபோதிலும், குறிப்பாக எம்ஆர்எப் குழும நிறுவனத்தில் சில காலம் பணியாற்றியது முக்கியமான மாற்றத்தை ஏற்படுத்தியது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்நிறுவனத்தில் பல்வேறு பொறுப்புகளிலிருந்து இப்போது துணைத் தலைவராக ஒட்டுமொத்தமாக உத்திகள் வகுப்பதிலும், செயல்பாடுகளைக் கண்காணிப்பதிலும், லாபகரமாக செயல் படுத்துவதிலும் கவனம் செலுத்துகிறேன்.
பணப் பரிவர்த்தனை என்பது கடந்த 20 ஆண்டுகளாக மிகப் பெரும் வளர்ச்சியை எட்டியுள்ளது. இதன் தற்போதைய நிலை என்ன?
தாராளமயமாக்கலுக்குப் பிறகு நாடுகளை விட்டு வெளியேறி பணி புரிவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. உலக மக்கள் தொகையில் 3 சதவீதம் பேர் தங்கள் சொந்த நாட்டை விட்டு வெளி நாடுகளில் குடியேறி பணி புரிகின்றனர். இந்தியாவிலிருந்து மொத்தம் 2.5 கோடி மக்கள் வெளி நாடுகளில் பணி புரிகின்றனர். இவர்களில் 80 சதவீதம் பேர் உடலுழைப்பு சார்ந்த தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களாவர்.
இதில் பெரும்பாலானவர்கள் மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரிகின்றனர். இவர்கள் மாதத்துக்கு சராசரியாக ரூ. 18 ஆயிரத்தை இந்தியாவுக்கு அனுப்புகின்றனர்.
வெளிநாடுகளிலிருந்து இந்தியர்கள் எவ்வளவு பணம் அனுப்புகின்றனர். இதில் தமிழகத்துக்கு எவ்வளவு தொகை வருகிறது.?
இந்தியாவுக்கு ஆண்டுக்கு 7,100 கோடி டாலர் பணப் பரிவர்த்தனை மூலமாக வருகிறது. இதில் தமிழகத்துக்கு மட்டும் 800 கோடி டாலர் பணம் வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் பண வரவு 8 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது. இந்தியா வுக்கு அடுத்தபடியாக சீனாவுக்கு 6,000 கோடி டாலர் பணம் வருகிறது.
இந்தியாவில் எந்த மாநிலத்துக்கு அதிக அளவில் வெளிநாட்டில் வசிப்போரிடமிருந்து பணம் வருகிறது?
இந்த வகையில் கேரள மாநிலம் முதலிடத்தில் உள்ளது. அம்மாநில ஜிடிபி-யில் வெளிநாட்டில் வசிப்போரின் பங்களிப்பு 31.2 சதவீதமாக உள்ளது. கேரளத்துக்கு அடுத்தபடியாக தமிழகமும் அதைத் தொடர்ந்து பஞ்சாப், ஆந்திர மாநிலங்கள் வருகின்றன.
சமீப ஆண்டுகளாக வேறெந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர்?
உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளுக்கு பணி புரியச் செல்கின்றனர். எனவே இந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் தங்களது உறவினர்களுக்குப் பணம் அனுப்புகின்றனர்.
பணம் அனுப்புவதில் இருக்கும் ஒழுங்குமுறைகள் என்னென்ன?
நவீன தொழில்நுட்பம் பணப் பரிவர்த்தனையை மிகவும் எளிமையாக்கி உள்ளது. வெளிநாட்டில் வசிக்கும் ஒருவர் எந்த ஒரு பணப் பரிவர்த்தனை நிறுவனத்துக்கும் சென்று பணத்தை அனுப்ப முடியும். அவ்விதம் பணம் அனுப்பிய தகவலை இந்தியாவில் உள்ள உறவினருக்குத் தெரிவிப்பர்.
அந்த உறவினர் அருகிலுள்ள மையத்துக்கு அடையாள அட்டையுடன் சென்ற பின்னர், உறவினர் அனுப்பிய சங்கேத எண்ணைக் குறிப்பிட்டு பணத்தைப் பெற்றுச் செல்லலாம். இதற்காக 16 இலக்க சங்கேத எண் ஒவ்வொரு பரிவர்த்தனையின் போதும் அளிக்கப்படுகிறது.
வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்புவோரும் அதைப் பெறுவோரும் கட்டணம் செலுத்த வேண்டுமா? அதை எப்படி நிர்ணயிக்கிறீர்கள்?
பணம் அனுப்புபவர் மட்டுமே கட்டணம் செலுத்தினால் போதுமானது. இந்திய மதிப்பில் ரூ. 50 ஆயிரம் வரை அனுப்புவதற்கு ஒரு முறை 4 டாலர் கட்டணமே வசூலிக்கப்படுகிறது. பணத்தைப் பெறுபவர் கட்டணம் எதையும் செலுத்தத் தேவையில்லை. மறு முனையில் பணம் பெற்றுக்கொண்ட பிறகு பணம் அனுப்பியவருக்கு அதுகுறித்த தகவல் குறுஞ் செய்தியாக (எஸ்எம்எஸ்) செல்போனில் தெரிவிக்கப்படும்.
நாட்டின் எந்தப் பகுதியில் உள்ளவருக்கும் பணம் அனுப்ப முடியுமா?
அனுப்பலாம். பணம் பெறுபவர் அருகிலுள்ள பணப் பட்டுவாடா மையம் அல்லது ஏஜென்ட் அலுவலகத்துக்குச் சென்று சங்கேத எண்ணை தெரிவித்து, உரிய அடையாள அட்டை நகலை சமர்ப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.
தமிழகத்தில் எந்தெந்த பகுதிகளில் உள்ளவர்களுக்கு பணம் அனுப்பப்படுகிறது?
தமிழகத்தில் சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம் ஆகிய பகுதிகளில் உள்ளவர்களுக்கு பணம் அனுப்பப்படுகிறது.
எக்ஸ்பிரஸ் மணி நிறுவனம் எத்தகைய சேவை மூலம் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொண்டுள்ளது? பிற நிறுவனங்களைக் காட்டிலும் அளிக்கப்படும் மேம்பட்ட சேவை என்ன?
பணத்துக்கு பணம், பணத்தை வங்கிக் கணக்கில் செலுத்தும் வசதி, செல்போன் மூலம் பணம் செலுத்தும் வசதி, ஆன்லைன் பணப் பரிவர்த்தனை, வங்கி அட்டைக் கணக்கில் பணம் செலுத்தும் வசதி, வீட்டுக்கு பணம் பட்டுவாடா செய்யும் வசதி உள்ளிட்ட சேவைகளை அளிக்கிறது. ஆன்லைன் பணப் பரிவர்த்தனை மூலம் 24 மணி நேரத்தில் எப்போது வேண்டுமானாலும் பணத்தை அனுப்ப முடியும்.
இது தவிர இந்தியாவில் பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் இணைந்து கோ-பிராண்டட் அட்டைகளை இந்நிறுவனம் அளித்துள்ளது. இதன்படி இந்தியாவில் உள்ளவர்கள் அந்த அட்டையைப் பயன்படுத்தி பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம். கடந்த ஆண்டு ஜூலை மாதம் எஸ்பிஐ-யுடன் இணைந்து கோ-பிராண்டட் அட்டை அறிமுகப்படுத்தப்பட்டது.
வங்கதேசம், பிலிப்பைன்ஸ், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் வீடுகளுக்குச் சென்று பணம் அளிக்கும் வசதி செய்து தரப்பட்டுள்ளது.
செல்போன் மூலம் பணம் அனுப்பும் வசதி ஆப்பிரிக்க நாடுகளில் மிகவும் பிரபலமாக உள்ளது. எந்த இடத்திலிருந்தும் பணம் பெறும் வசதியை 62 நாடுகளில் எக்ஸ்பிரஸ் மணி நிறுவனம் செயல்படுத்துகிறது. மறைமுகக் கட்டணங்கள் எதுவும் வசூலிக்கப்படுவதில்லை.
இது தவிர பாரத ஸ்டேட் வங்கி மற்றும் அதன் துணை வங்கிகள், சௌத் இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இந்தியன் வங்கி, கரூர் வைஸ்யா வங்கி, தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி, லட்சுமி விலாஸ் வங்கி, சிட்டி யூனியன் வங்கி ஆகியவற்றுடனும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
மேலும், வங்கியல்லாத தனியார் நிதி நிறுவனங்களான முத்தூட் ஃபைனான்ஸ் லிமிடெட், முத்தூட் பின்கார்ப், மணப்புரம் ஃபைனான்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களுடனும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் ஒரு லட்சம் வரை ஏடிஎம்களிலும் பணத்தைப் பெறலாம்.
வேறு என்ன சிறப்பு வசதிகள் செய்து தரப்படுகின்றன?
பணப் பரிவர்த்தனையில் ஈடுபடும் எந்த நிறுவனமும் அளிக்காத இலவச காப்பீட்டுத் திட்டமும் அளிக்கப்படுகிறது. இதன்படி பணம் அனுப்பும் வாடிக்கையாளருக்கு 15 ஆயிரம் திர்ஹாமுக்கு (ரூ. 2.5 லட்சம்) 30 நாள்களுக்கு காப்பீடு வசதி அளிக்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் அவர் தொடர்ந்து அனுப்பும்போது இந்த வசதி அவர்களுக்குத் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
இதுதவிர, குடிபெயர்வோர் விழிப்புணர்வு மையங்களை இந்நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. இங்கு வெளிநாடு செல்வோர் எந்தெந்த வழிகளில் பணம் அனுப்பலாம். அது பத்திரமாக உறவினர்களைச் சென்றடைகிறதா என்பதை கண்காணிப்பது எப்படி என்பது குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்தியாவுக்கு பணம் அனுப்புவோர் அந்த சேவையை திரும்பப் பெற விரும்பி ரத்து செய்தால், அனுப்பிய பணத்துடன் அவர்கள் செலுத்திய சேவைக் கட்டணம் எவ்வித பிடித்தமும் இன்றி திருப்பி அளிக்கப்படும்.
இந்தியாவுக்கு எந்தெந்த நாடுகளிலிருந்து பணம் வருகிறது. இந்தியாவிலிருந்து வெளிநாட்டில் வசிக்கும் உறவினருக்கு இதுபோல் பணம் அனுப்ப முடியுமா?
ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சிங்கப்பூர், கத்தார், மலேசியா ஆகிய நாடுகளிலிருந்து அதிக அளவில் பணம் அனுப்பப்படுகிறது. இந்தியாவில் உள்ளவர்களுக்கு இந்த நாடுகளிலிருந்து பணம் அனுப்ப முடியும். இந்தியாவிலிருந்து அனுப்புவதற்கு கட்டுப்பாடுகள் அதிகம். பொதுவாக அவ்விதம் அனுப்புவோர் எண்ணிக்கை குறைவு.
பணம் அனுப்புவதில் ஏதேனும் கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி விதித்துள்ளதா?
பண மாற்ற சேவை திட்டத்தின்கீழ் (Money Transfer Service Scheme) அதிகபட்சமாக ரூ. 50 ஆயிரம் வரை ரொக்கமாகப் பெற முடியும். ஒரு வருடத்துக்கு 30 முறை பணம் பெறலாம். ஒரு தடவைக்கு அதிகபட்சம் 2,500 டாலர் அனுப்பலாம்.
உலக அளவில் பணப் பரிமாற்றம் எந்த அளவுக்கு மேற்கொள்ளப்படுகிறது?
அதிகாரபூர்வ வழிமுறைகளில் ஆண்டுக்கு 14,000 கோடி டாலர் பணம் பரிமாற்றப்படுகிறது.
உங்களுக்கு போட்டியாக எந்தெந்த நிறுவனங்கள் உள்ளன?
போட்டி என்று கருதவில்லை. ஆனாலும் 163 ஆண்டுகளாக செயல்படும் வெஸ்டர்ன் யூனியன் மற்றும் 25 ஆண்டுகளாக செயல்படும் மணி கிராம் ஆகிய நிறுவனங்கள் தத்தமது சிறப்பான செயல்பாடுகள் மூலம் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொண்டுள்ளன.
11 ஆண்டுகளாக இந்தியாவில் எக்ஸ்பிரஸ் மணி நிறுவனத்துக்கு சந்தை பரிவர்த்தனையில் 12 சதவீத பங்களிப்பு உள்ளது. ஆண்டுக்கு 10 சதவீத வளர்ச்சியை எட்ட இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
இதை எட்டுவதற்கு பல்வேறு புதிய வழிமுறை களைச் செயல்படுத்த உள்ளோம். வங்கிக் கணக்கில் பணம் செலுத்துவது, பணத்தை எடுக்கும் ஒப்பந்தம் (Cash Drawing Agreement) மேற்கொள்வற்கு லைசென்ஸ் பெறுவது உள்ளிட்டவை இதில் அடங்கும்.
ஹவாலா பணம் இந்த வழிகளில் பரிமாற வாய்ப்புள்ளதா?
நிச்சயமாக இல்லை. பணம் அனுப்புவர், அதைப் பெறுபவர் விவரம் கண்காணிக்கப்படுகிறது. ஓராண்டில் எவ்வளவு பணம் பெறுகின்றனரோ அது கணக்கிடப்பட்டு வருமான வரித்துறையினரால் வரி விதிப்புக்கு உள்ளாக்கப்படும்.
இத்துறை வளர்ச்சி எந்த அளவுக்கு இருக்கும்?
வெளிநாடுகளுக்குச் செல்வோர் இருக்கும் வரை இத்துறை வளர்ச்சியானது தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். வாடிக்கையாளர்கள் அதிகரிக்க அதிகரிக்க அவர்களுக்கு சிறப்பான சேவையை எந்த வழியில் அளிக்கலாம் என்பதற்கான தேடலும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.
ramesh.m@kslmedia.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT