Published : 11 Dec 2013 12:00 AM
Last Updated : 11 Dec 2013 12:00 AM
நாட்டில் கார், வர்த்தக வாகன விற்பனை விற்பனை பொதுத் தேர்தலுக்குப் பிறகுதான் அதிகரிக்கும் என்று இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் சங்கம் (எஸ்ஐஏஎம்) தெரிவித்துள்ளது.
நவம்பர் மாதத்தில் கார்களின் விற்பனை 8.15 சதவீதம் சரிந்தது. மொத்தம் 1,42,849 கார்கள் விற்பனையாயின. கடந்த ஆண்டு இதே காலத்தில் 1,55,535 கார்கள் விற்பனையாகியிருந்தன.
வர்த்தக வாகனங்களின் விற்பனை 28.78 சதவீதம் குறைந்தது. மொத்தம் 43,730 வாகனங்கள் விற்பனையாகியிருந்தன. கடந்த ஆண்டு இதே காலத்தில் மொத்தம் 61,430 வாகனங்கள் விற்பனையாகியிருந்தன
இருப்பினும் இருசக்கர வாகன விற்பனை நவம்பர் மாதத்தில் 5.55 சதவீதம் அதிகரித்து 12,40,732 வாகனங்கள் விற்பனையாகியிருந்தன. கடந்த ஆண்டு இதே காலத்தில் விற்பனையான இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை 11,75,441 ஆக இருந்தது..
பண்டிகைக் காலம் முடிந்த பிறகு நவம்பர் மாதத்தில் வாகன விற்பனை குறையும் என்று எதிர்பார்த்தோம் என்று சியாம் துணை இயக்குநர் ஜெனரல் சுகதோ சென் தெரிவித்தார். இப்போதைய பொருளாதார தேக்க நிலைச் சூழலில் பண்டிகைக் காலத்தில் ஏற்படும் அதிகபட்ச விற்பனை ஸ்திரமானதல்ல என்பது அனைவரும் அறிந்ததே என்று அவர் குறிப்பிட்டார்.
இவற்றையெல்லாம் விட கடனுக்கான வட்டி விகிதம் அதிகரிப்பு, எரிபொருள் விலையேற்றம் ஆகியனவும் விற்பனை சரிவுக்குப் பிரதான காரணங்கள் என்று அவர் சுட்டிக் காட்டினார். இவையெல்லாவற்றுக்கும் மேலாக நாட்டில் நிலவிவரும் பொருளாதார தேக்க நிலை வாகனம் வாங்கும் எண்ணத்தை பொதுமக்களிடையே தள்ளிப்போட வைத்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இப்போது நிலவும் சூழ்நிலை அடுத்து வரும் பொதுத்தேர்தல் வரை நீடிக்கும் என்றே தோன்றுகிறது. நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு மத்தியில் புதிய அரசு அமைந்தவுடன் நிலைமை மாறும் என்றே தோன்றுவதாக அவர் கூறினார்.
இப்போதைய சூழலில் இந்த அரசு எத்தகைய மாற்றத்தையும் எதிர்பார்க்கவில்லை என்று அவர் கூறினார்.
நவம்பர் மாதத்தில் மாருதி கார் விற்பனை 4.22 சதவீதமும், ஹூன்டாய் நிறுவன கார் விற்பனை 3.66 சதவீதமும் சரிந்துள்ளது. இதேபோல டாடா நிறுவன கார் விற்பனை 41 சதவீதம் சரிந்துள்ளது. ஹோண்டா கார்களின் விற்பனை 150.87 சதவீதம் உயர்ந்தது. மஹிந்திரா நிறுவன கார் விற்பனை 30 சதவீதம் சரிந்துள்ளது.
சுரங்கத்துறை மற்றும் கட்டுமானத்துறை சார்ந்த தொழில் நடவடிக்கைகள் அதிகரிக்கும் பட்சத்தில்தான் கடுமையான சரிவைச் சந்தித்துள்ள வர்த்தக ரக வாகன விற்பனை அதிகரிக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT