Published : 23 Feb 2014 12:00 AM
Last Updated : 23 Feb 2014 12:00 AM

ரகசிய புதையல்

அதிகம் விற்ற, அதிகம் மொழிபெயர்க்கப்பட்ட (தமிழிலும் கிடைக்கிறது) Secret புத்தகத்தின் சாரம் இதுதான்.

இந்த கவர்ச்சி விதி பற்றி விரிவாக விளக்கியபோது, ஒரு பங்கேற்பாளர் கேட்டார் : “எப்படி சார் இது சாத்தியம்? நானும் கொஞ்சம் காசு சேர்க்கலாம், இந்த தரித்திர நிலை போகும், பண நெருக்கடி இல்லாம வாழ்லாம்னுதான் தினம் சாமியை கும்பிடறேன்... அப்புறம் ஏன் சார் இந்த நிலை நீடிக்குது?”

“நீங்க சொன்ன வார்த்தைகளை பாருங்க. உங்க focus புரியும். கொஞ்சம் பணம், தரித்திர நிலை, பண நெருக்கடி. இவை தான் பிரதான எண்ணங்கள். அதற்கேற்ற விளைவுகள் தான் நிகழும்” என்றேன்.

எது கூடாது என்று நினைக்கிறோமோ அதுதான் கூடுகிறது. உள் மனதின் இயக்கம் அப்படி. இது ஏன் என்று எளிமையாக சொல்கிறது இந்த புத்தகம்.

Loiuse Hay என ஆதர்ஷ எழுத்தாளர். என் 10 வருட உளவியல் கல்வியும் ஆராய்ச்சியும் சொல்லித்தராத சூட்சமத்தை எனக்கு கற்று தந்தவர். உடல் உபாதைகளும் நோய்களும் மன மாற்றங்களால் குணமாகும் என்பதை உணர்த்தியவர். ரெய்கி, பேச் மலர் மருத்துவம் (Bach flower remedies) என பல மாற்று சிகிச்சைகள் கற்றுத் தந்த என் குரு பாலகுமார் அவர்களின் அறிமுகம் தான் லூயிஸ் ஹேவும் அஃப்ர்மேஷன்ஸ் எனும் நேர்மறை சுய வாக்கியங்களும்.

பல நோய்களையும் உறவுச்சிக்கல்களையும் அஃப்ர்மேஷன்ஸ் கொண்டு மட்டுமே குணப்படுத்தலாம் என்றால் நம்புவதற்கு சிரமமாக இருக்கலாம். என் பயிற்சி வகுப்பிலேயே இந்த அதிசயங்கள் நிகழ்ந்த போது இது நூற்றுக்கணக்கான மக்களை போய் சேர்ந்தது. இந்த அனுபவ பின்னணியில் ரொண்டா பைர்ன் எழுதிய புத்தகம் படிக்கையில் மிக எளிமையாகவும் கவர்ச்சிகரமாகவும் ஆழ்மன இயக்கத்தை உலகமறிய செய்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.

புத்தகத்தின் வடிவமைப்பு மிகுந்த நுட்பத்துடன் செய்யப்பட்டுள்ளது. கடின அட்டை, முகப்பின் தொன்மையான தோற்றம், உலகின் தற்போதைய 25 முக்கிய நூலாசிரியர்களின் மேற்கோள்கள், எளிமையான நடை, சிரமமில்லாத மொழி, ஒவ்வொரு பகுதி முடிந்ததும் மையக் கருத்துகள் பட்டியலிடப்படுகின்றன. எல்லா கருத்துகளுக்கும் சான்றுகள் கொடுக்கப்படுகின்றன. ஒரு ரகசிய புதையலை எடுத்து படிப்பது போன்ற உணர்வை நூல் நெடுக நமக்கு கிடைக்கச் செய்வது ஆசிரியரின் சாமர்த்தியம்.

ஒரு நூலை உலக சந்தையில் எப்படி விற்க வேண்டும் என்பதை இவர்களைப் பார்த்து தான் கற்றுக்கொள்ள வேண்டும். வியாபார சூட்சமம் ஒரே கருத்தை புத்தகம் முழுவதும் திறமையாக சாமர்த்தியமாக ரொண்டா பைர்ன் விளக்குகிறார்.

புத்தகத்தின் சில மையக்கருத்துக்களைப் பார்க்கலாம்:

* கவர்ச்சி விதி என்பது, புவி ஈர்ப்பு விதி போல. அனைவருக்கும் பொது.

* அனுபவங்கள் எண்ணத்தினால் மட்டுமே ஏற்படுபவை.

* சிந்தனைகளை அறிய உங்கள் உணர்வுகளை அறியுங்கள். நேர்மறையான உணர்வும் நேர்மறையான சிந்தனையும் தொடர்பு கொண்டவை.

* உங்கள் சிந்தனைகள்தான் உணர்வுகளை நிர்ணயிக்கின்றன.

* எண்ணங்களை மாற்ற உங்கள் உணர்வுகளை மாற்றுங்கள். அது சுலபமான வழி. எந்த செயல்கள் உங்கள் உணர்வுகளை மாற்றுகின்றனவோ அவை தான் Secret Shifters. நல்ல இசை, நல்ல நினைவு, பிடித்த மனிதர்கள் - உணர்வுகளை மாற்ற உதவும்.

* உலகின் மகா சக்தி அன்பு

* உங்கள் வாழ்க்கை எனும் கரும்பலகையில் உங்கள் எண்ணங்கள் தான் அனுபவங்களாய் எழுதப்படுகின்றன. உங்கள் எண்ணங்களை பராமரியுங்கள்.

* உங்கள் வாழ்க்கைக்கு தேவையான அத்தனை சக்தியும் உங்களுக்கு உள்ளே உள்ளது.

* எவ்வளவு சக்தியை உள்ளுக்குள் உணர்கிறீர்களோ அவ்வளவு சக்திகளை வெளியிலிருந்து கவர்வீர்கள்.

* உங்கள் முக்கிய பணி நல்ல உணர்வுடன் இருப்பது.

* சிறந்த தருணம்: இப்பொழுது.

*எது உங்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சியையும் மன அமைதியையும் தருகிறதோ தொடர்ந்து செய்வது.

இது தான் வாழ்க்கையின் ரகசியம்.

அட, இது எங்களுக்கு தெரிந்தது தானே? ஆனால் நடைமுறைப் படுத்துவது தானே சிரமம் என்கிறீர்களா?

கவர்ச்சி விதியை எப்படி பயன் படுத்துவது என்று ஒரு உதாரணம் கொண்டு பார்க்கலாம்.

நீங்கள் ஹாலில் உட்கார்ந்து ஹாயாக டி.வி. பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் 4 வயது மகள் (அல்லது பேத்தி) ஒரு பெரிய கண்ணாடி டம்ளரில் வழிய வழிய தண்ணீர் எடுத்தவாறு உங்களை நோக்கி வருகிறாள். அதைக் கணடவுடன் பதட்டமாக “பாத்து பாத்து கீழ போட்டுரப் போறே!” என்று அலறுகிறீர்கள்! கலவரமாக குழந்தை அழுத்தி பிடிக்க நினைத்து டம்ளரை தவறவிடுகிறது.

“நான் சொன்னேன்ல...உன்னை யார் இதை எடுக்கச்சொன்னா? எனக்குத் தெரியும் நீ கீழ போடுவேன்னு!!”

குழந்தை டம்ளரை போட்டதற்கு யார் காரணம்? குழந்தை காயப்பட்டுவிடும் என்கிற உங்கள் பயம் “எதிர் மறை செய்தி” (கீழ போட்டுரப் போறே) சொல்கிறது. குழந்தையும் அதை காட்சிப்படுத்தி நினைக்கையில் எதிர் மறை சிந்தனை எதிர் செயலாக மாறி, நீங்கள் எது கூடாது என்று நினைத்துச் சொன்னீர்களோ, அது நடக்கிறது. பின்னர் அதற்கு நீங்கள் உங்கள் குழந்தையை காரணம் சொல்வது தான் உச்சபட்ச குற்றம்.

என்ன சொல்லியிருக்கலாம்? குழந்தை என்ன செய்ய வேண்டும். ஜாக்கிரதையாக பிடிக்கணும்; அவ்வளவு தானே? “டம்ளர ஒரு கையில கீழ பிடி கண்ணு. பத்திரமா மெதுவா வா!” என்றால் போதுமே!

ஆரோக்கியமோ, உறவுகளோ, செல்வமோ, வேலையோ எங்கு சிக்கல் இருந்தாலும் உங்கள் எண்ண ஓட்டத்தை கண்காணியுங்கள். எது வேண்டாம் என்பதை நினைப்பதை விட எது வேண்டும் என்று நினைத்தால் நினைப்பது நடக்கும்!

gemba.karthikeyan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x