Published : 07 Jan 2014 12:09 PM
Last Updated : 07 Jan 2014 12:09 PM
அடுத்த கட்ட அன்னிய நேரடி முதலீட்டுக் கொள்கை வரைவு மார்ச் 31-ம் தேதி வெளியாகும் என்று தொழில் கொள்கை முதலீட்டு மேம்பாட்டு வாரியம் (டிஐபிபி) அறிவித்துள்ளது. அடுத்தகட்ட வெளிநாட்டு நிறுவன முதலீட்டுக் கொள்கைக் கான வரைவு மார்ச் 31-ம் தேதி வெளியாகும். இது மே 1-ம் தேதி முதல் செயல்படுத்தப்படும் என்று டிஐபிபி தெரிவித்துள்ளது.
இதற்கு முன்பு 6-வது பதிப்பு எப்டிஐ 2013-ம் ஆண்டு ஏப்ரலில் வெளியிடப்டப்டது.
மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் டிஐபிபி, அன்னிய நேரடி முதலீட்டுக் கொள்கையை வகுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரே ஆவணத்தில் அன்னிய முதலீடுகளை அனுமதிப்பது தொடர்பான விதிமுறைகளையும் இது வகுத்தாக வேண்டும். அன்னிய முதலீட்டாளர்கள் எளிதில் முதலீடு செய்யும் வகையில் இந்த விதிமுறைகள் இருக்க வேண்டியது அவசியமாகும்.
அதேசமயம் இந்தியாவில் கடைப்பிடிக்கப்படும் விதிமுறைகள் தெளிவாக புரியும்படி இருத்தல் வேண்டும்.
டிஐபிபி வெளியிட உள்ள வரைவு கொள்கை அறிக்கையில் சேர்க்க வேண்டிய விதிமுறைகள் குறித்து பொதுமக்கள் இம்மாதம் 17-ம் தேதி வரை இணையதளத்தில் கருத்துகளை பதிவு செய்யலாம். இந்தியாவில் அன்னிய நேரடி முதலீடு மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. அன்னிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக கொள்கைகளில் பல தளர்வுகள் செய்யப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு 12-க்கும் மேற்பட்ட துறைகளில் அன்னிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக விதிமுறைகளை மத்திய அரசு தளர்த்தியது. தொலைத் தொடர்பு, ராணுவம், எண்ணெய் சுத்திகரிப்பு, பொருள்கள் சந்தை, எரிசக்தி, பங்குச் சந்தை உள்ளிட்டவற்றில் நேரடி அன்னிய முதலீட்டுக்கு அனுமதி அளிக்க்படப்டது.
நடப்பு நிதி ஆண்டில் ஏப்ரல் முதல் நவம்பர் வரையான காலத்தில் அன்னிய நேரடி முதலீடு 15 சதவீதம் சரிந்து 1,260 கோடி டாலராக உள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் அன்னிய முதலீடு 1,470 கோடி டாலராகும். இந்தியாவில் 12-வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் (2012-13) கட்டமைப்பு, துறைமுகம், விமான நிலையம், நெடுஞ்சாலை உள்ளிட்டவற்றின் மேம்பாட்டுக்கு ஒரு லட்சம் கோடி டாலர் தேவைப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT