Published : 23 Dec 2013 03:32 PM
Last Updated : 23 Dec 2013 03:32 PM
வீடு கட்டுவதற்காக வங்கியில் கடன் வாங்கி, மாதாமாதம் இ.எம்.ஐ. செலுத்திக் கடனை அடைக்கும் திட்டம் பற்றி எல்லோரும் அறிந்ததுதான். ஆனால், வீட்டை அடமானம் வைத்து மாதாமாதம் வங்கியிடம் இருந்து பணம் பெறும் திட்டம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அப்படியொரு திட்டம் பொதுத்துறை வங்கிகளில் செயல்பாட்டில் உள்ளது உங்களுக்குத் தெரியுமா? அந்தத் திட்டத்தின் பெயர் ரிவர்ஸ் மார்ட்கேஜ் கடன் திட்டம்.
சமூகப் பாதுகாப்பு
ரிவர்ஸ் மார்ட்கேஜ் கடன் என்பது வீட்டுக் கடனுக்கு எதிர்மறையான கடன் திட்டம். இது 60 வயதைக் கடந்த மூத்த குடிமக்களுக்கான திட்டம். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா போன்ற வளர்ந்த நாடுகளில் மட்டுமே செயல்படுத்தப்பட்டுள்ள இந்தத் திட்டம், இந்தியாவில் 2007ஆம் ஆண்டு அறிமுகமானது. மூத்த குடிமக்களுக்குச் சமூகப் பாதுகாப்பு அளிக்கும் வகையில் இத்திட்டம் கொண்டு வரப்பட்டது.
தன் பெயரில் வீடு இருக்கும் பட்சத்தில் யார் தயவையும் எதிர்பார்க்காமல் வீட்டை அடமானம் வைத்து ரிவர்ஸ் மார்ட்கேஜ் திட்டத்தின் மூலம் மாதந்தோறும் பணத்தை வாங்கி மூத்த குடிமக்கள் செலவு செய்யலாம். எந்தத் தேவைக்கு வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
மாற்றியமைக்கப்பட்ட திட்டம்
முன்பு இந்தத் திட்டத்திற்கான கால அளவு அதிகபட்சம் 15 முதல் 20 ஆண்டுகளாக வரையறுக்கப்பட்டிருந்தன. ஆனால் இப்போது வாழ்நாள் முழுவதும் மாதந்தோறும் வங்கி பணம் அளிக்கும் படி திட்டம் மாற்றியமைக்கப்பட்டு விட்டது என்கிறார் சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியாவின் ஓய்வு பெற்ற துணைப் பொதுமேலாளர் கோபாலகிருஷ்ணன். ‘’ரிவர்ஸ் மார்ட்கேஜ் லோன் படி முதலில் 15 முதல் 20 சதவீதத் தொகையை வங்கிகள் வீடு அடமானம் வைக்கும் மூத்த குடிமக்களிடம் கொடுத்து விடும். கடன்தாரர் விருப்பத்திற்கு ஏற்ப மாதந்தோறும் குறிப்பிட்ட தொகையை வங்கிகள் வழங்கும். கணவனுக்குப் பிறகு மனைவிக்கும் தொகை கிடைக்கும். அவரது மறைவுக்குப் பிறகு வீட்டை விற்று, வங்கிகள் வழங்கிய பணத்தை எடுத்துக்கொள்ளும். மீதி பணம் இருந்தால் அதை வாரிசுகளிடமோ அல்லது மூத்த குடிமக்கள் விரும்பியபடி வங்கிகள் வழங்கி விடும்’’ என்கிறார் கோபாலகிருஷ்ணன்.
ஆரம்பக் காலத்தில் இந்தக் கடன் திட்டத்தில் வங்கிகள் வழங்கும் தொகைக்கு வருமான வரி வசூலிக்கப்பட்டது. மூத்த குடிமக்கள் பயன் பெறும் வகையில் அண்மையில் வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுவிட்டது. தற்போது ரிவர்ஸ் மார்ட்கேஜ் அடிப்படையிலான இந்தத் திட்டம் பாதுகாப்பு அளிக்கும் திட்டமாகவும் (ஆயுட்காலத் திட்டம்) மாற்றப்பட்டுள்ளது. பொதுத்துறை வங்கிகளும் இன்சூரன்ஸ் நிறுவனமும் இணைந்து இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தி வருவது மூத்த குடிமக்களுக்கான சமூகப் பாதுகாப்பை அதிகரித்துள்ளது.
வீட்டை மீட்க முடியுமா?
சரி.. ஒருவேளை ரிவர்ஸ் மார்ட்கேஜ் கடன் திட்டப்படி பெற்றோர்கள் கடன் வாங்கியிருந்ததால், வாரிசுகள் கடனை அடைத்து வீட்டை மீட்க முடியுமா? ‘ ‘நிச்சயம் முடியும். உடனடியாக சம்பந்தப்பட்ட வங்கியை அணுகினால், அவர்கள் அளிக்கும் காலக் கெடுவுக்குள் வீட்டை வாரிசுதாரர்கள் திருப்பிக் கொள்ள முடியும். இந்தக் கடன் திட்டத்தின் மூலம் வங்கிகளுக்கு எந்த பலனும் கிடையாது. ஆனால், சமூக கடமைக்காகவே வங்கிகள் இதைச் செய்து வருகின்றன. கடைசி காலத்தில் பிள்ளைகளால் கைவிடப்பட்டாலோ, பராமரிப்பு செலவின்றி தவித்தலோ, பிள்ளைகளுக்கு திருமணம் செய்ய பணம் இன்றி கஷ்டப்பட்டாலோ, மருத்துவ சிகிச்சைக்கு பணமில்லாமல் வருந்தினாலோ இந்த கடன் திட்டம் மூத்த குடிமக்களுக்கு நிச்சயம் கைகொடுக்கும்’’ என்கிறார் கோபாலகிருஷ்ணன்.
சொந்த வீடு இருந்தால் என்றைக்கும் கவலை இல்லை என்று சொல்வது இதற்குத்தானா..?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT