Published : 15 Dec 2013 12:00 AM
Last Updated : 15 Dec 2013 12:00 AM
பங்குச்சந்தைகள் புதிய உச்சத்தைத் தாண்டி வர்த்தகமாகிக் கொண்டிருந்த சமயத்தில் இந்தியா இன்ஃபோலைன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆர்.வெங்கட்ராமனை சென்னையில் இருக்கும் அலுவலகத்தில் சந்தித்தோம். பங்குச்சந்தைகளின் எதிர்காலம், சிறுமுதலீட்டாளர்களுக்கான முதலீட்டு வாய்ப்புகள் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து அவரிடம் பேசினோம்.
பங்குச்சந்தைகள் குறித்து பார்ப்பதற்கு முன்பு அவரது ஆரம்ப காலம் குறித்து அவரிடமே கேட்போம்.!
என்னுடைய தாய் மொழி தமிழாக இருந்தாலும் வளர்ந்தது எல்லாமே ராஞ்சியில்தான். ஐ.ஐ.டி. கரக்பூரில் எலெக்ட்ரிக்கல் என்ஜீனியரிங் படித்தேன். அதன் பிறகு ஐ.ஐ.எம். பெங்களூருவில் நிர்வாகப்படிப்பு படித்தேன். படித்து முடித்த பிறகு ஐ.சி.ஐ.சி.ஐ.யில் வேலை பார்த்தேன். நான் வேலை செய்த இடத்துக்கு அருகில்தான் நிர்மல் ஜெயின் (இந்தியா இன்ஃபோலைன் நிறுவனத்தின் தலைவர்) அலுவலகமும் இருந்தது. இருவரும் நண்பர்கள் ஆனோம். 1994-ம் ஆண்டு இந்தியா இன்ஃபோலைன் நிறுவனத்தை ஆரம்பித்தார். நான் 1999-ம் ஆண்டு இந்தியா இன்ஃபோலைன் நிறுவனத்தில் இன்னொரு புரமோட்டராக இணைந்தேன்.
ஐ.சி.ஐ.சி.ஐ. போன்ற முக்கியமான நிறுவனத்தில் வேலை பார்த்தக் கொண்டிருக்கும் போது இன்னொரு புரமோட்டராக ஏன் இணைய வேண்டும்?
இந்தியா இன்ஃபோலைன் இப்போதுதான் ஸ்டாக் புரோக்கிங் நிறுவனம். ஆனால் அப்போது இன்டர்நெட் மூலம் ஆராய்ச்சி கட்டுரைகள் மட்டும் கொடுத்துக் கொண்டிருந்தது. மேலும் இன்டர்நெட் மிகப்பெரிய அளவில் உலகத்தை மாற்றப்போகிறது என்று பல கட்டுரைகள், பலர் பேசிக்கொண்டிருந்தார்கள். அமெசான் நிறுவனத்தின் சி.இ.ஓ. Jeffrey P. Bezos-ம் இணையத்தைப் பற்றி முக்கியமான பேட்டி கொடுத்திருந்தார். அப்போது இணையம் சார்ந்து எதாவது செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தேன். ஏற்கெனவே நிர்மல் ஜெயினை தெரியும் என்பதால் அவருடன் இணைந்தேன்.
இப்போதே ஆராய்ச்சிக் கட்டுரைகளை (Research Reports) யாரும் பணம் கொடுத்து வாங்காதபோது 2000-களின் ஆரம்பத்தில் எப்படி உங்களது ஆராய்ச்சிக் கட்டுரைகளை விற்பனை செய்தீர்கள்?
நாங்கள் மியூச்சுவல் ஃபண்ட்கள், பெரிய முதலீட்டு நிறுவனங்கள் உள்ளிட்டவர்களை சந்தித்துதான் விற்றோம். இருந்தாலும் ஆராய்ச்சிக் கட்டுரைகள் மட்டும் விற்பது அவ்வளவு ஒன்றும் எளிது கிடையாது.
நீங்களே ஆராய்ச்சிக் கட்டுரைகளை தயாரிக்கிறீர்கள்.? ஏன் நீங்களே முதலீடு செய்ய வேண்டியதுதானே என்று யாராவது கேட்டிருக்கிறார்களா?
நாங்களே ஆராய்ச்சிக் கட்டுரை தயாரிக்கும்போது நாங்களே முதலீடு செய்வது சரியாக இருக்காது. அப்படி செய்யும்போது அது என்னுடைய முதலீட்டுக்கு சார்பான அறிக்கையாக அது மாறிவிடும்.
5paisa.com என்று புரோக்கிங் துறையில் புதுமையை படைத்தவர்கள் நீங்கள்? அந்த சமயத்தில் மற்ற புரோக்கிங் நிறுவனங்கள் அதிக கமிஷன் வாங்கிக்கொண்டிருந்த போது உங்களால் எப்படி இது சாத்தியமானது?
ஆன்லைன் மூலம் புரோக்கிங் சேவையைக் கொண்டுவந்ததில் நாங்கள் இரண்டாவது நிறுவனம். மேலும் அந்த சமயத்தில் மற்ற நிறுவனங்கள் 'மேனுவலாக' வர்த்தகம் செய்து கொண்டிருந்தார்கள். அதனால் ஒவ்வொரு வர்த்தகத்துக்கும் அவர்களுக்கு அதிக செலவு இருந்தது. ஆட்கள் தேவைப்பட்டார்கள். எங்களிடத்தில் ஆன்லைன் மூலம் வர்த்தகம் செய்வதால் எவ்வளவு எண்ணிக்கையிலான பங்குகளின் வர்த்தகமும் செய்ய முடியும். அதனால் துணிந்து செலவுகளைக் குறைத்தோம்.
சந்தையில் இருந்து சிறுமுதலீட்டாளர்கள் வெளியேறி வருகிறார்கள் என்ற செய்தி அடிக்கடி வருகிறதே ஏன்? அவர்கள் என்ன செய்யலாம்?
கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு இருந்த நிலையில்தான் முக்கிய குறியீடுகளாக சென்செக்ஸும் நிஃப்டியும் இருக்கிறது. சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகியவை லார்ஜ் கேப் பங்குகள். ஆனால் பெரும்பாலான சிறுமுதலீட்டாளர்கள் மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் பங்குகளில் முதலீடு செய்திருக்கிறார்கள்.
இந்த இரண்டு குறியீடும் ஆறு வருடங்களுக்கு முன்பு இருந்ததை விட குறைவாக இருக்கிறது. இதனால் இதில் முதலீடு செய்த சிறு முதலீட்டாளர்கள் மிகவும் பாதிப்பு அடைந்திருப்பார்கள். பங்குச்சந்தை முதலீட்டில் நஷ்டம் வரும்போது யாராக இருந்தாலும் பதற்றம் அடையத்தான் செய்வார்கள். நஷ்டம் அடைந்த முதலீட்டாளர்கள் வேறு வழி இல்லாமல் பங்குச்சந்தையை விட்டு வெளியேறி வருகிறார்கள்.
என்னைக்கேட்டால் சிறுமுதலீட்டாளர்கள் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளில் முதலீடு செய்வதுதான் இப்போது இருக்கும் வழிகளில் சிறந்ததாக இருக்க முடியும்.
அப்படி என்றால் சிறுமுதலீட்டாளர்களை பங்குச்சந்தைக்கு வரவேண்டாம் என்று சொல்கிறீர்களா?
இதற்கு அர்த்தம் பங்குச்சந்தைக்கு வரவேண்டாம் என்பதல்ல, மியூச்சுவல் ஃபண்ட் மூலமாக பங்குச்சந்தைக்கு வரலாம் என்றுதான் சொல்கிறேன். மேலும் பத்திருபதாயிரம் ரூபாய்களை வைத்துக்கொண்டு எவ்வளவு பங்குகளை வாங்க முடியும், எவ்வளவு தூரம் பங்குச்சந்தையை சரியாகக் கணிக்கமுடியும்.
உங்களுடைய வருமானத்திலும் சிறுமுதலீட்டாளர்களின் பங்கு கடுமையாக சரிந்திருக்கிறதே? செட்டில்மெண்ட் தினத்தை டி+2 என்பதை டி+1 என்று அல்லது விதிமுறைகளை மாற்றினால் அதிகரிக்குமா?
நாங்கள் என்.பி.எஃப்.சி. உள்ளிட்ட இதர துறைகளில் கவனம் செலுத்தி வருகிறோம். மேலும் செட்டில்மெண்ட் தினத்தை குறைப்பதன் மூலம் வருமானம் அதிகரிக்கும் என்று நினைக்கவில்லை.
சில வருடங்களுக்கு முன்பு புதிய பங்கு வெளியீடுகள் (ஐ.பி.ஓ) தொடர்ந்து வெளியாகும். ஆனால் சமீப காலமாக ஐ.பி.ஓ.கள் ஏதும் வரவில்லையே?
ஆமாம், ஆனால் 2014-ம் ஆண்டில் நிறைய ஐ.பி.ஓ.க்கள் வரும் என்று எதிர்பார்க்கிறேன்.
தற்போது புதிய உச்சத்தை சந்தை தொட்டிருக்கிறது. இந்திய சந்தையின் எதிர்காலம் எப்படி இருக்கும்?
இந்தியப் பொருளாதாரம் தன்னுடைய அடியை தொட்டுவிட்டது. இனி பொருளாதாரம் மேலே செல்லதான் வாய்ப்பு அதிகம். மேலும் பருவமழை நன்றாக பொழிந்திருக்கிறது.
அதனால் 2015-ம் ஆண்டு மார்சுக்குள் சென்செக்ஸ் 24,000 புள்ளிகளுக்கு மேலே செல்லும். ஆனாலும் வரும் தேர்தல் வரைக்கும் சந்தையில் எந்த பெரிய ஏற்றமும் நடக்க வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை. தேர்தல் சமயத்தில் சந்தையில் ஒர் ஏற்றம் இருக்கும்.
இருந்தாலும் டிசம்பர் 18-ம் தேதி நடக்க இருக்கும் கூட்டத்தில் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்த வாய்ப்பு இருக்கிறது என்று எதிர்பார்க்கப்படுகிறதே?
ஒருவேளை வட்டி விகிதம் உயர்த்தப்பட்டால் கூட, 0.25 சதவிகிதம் உயர்த்தப்படலாம். ஆனால் அதுதான் கடைசி வட்டி விகித உயர்வாக இருக்கும். அதற்கு மேலும் வட்டி விகிதம் உயர்த்தப்பட வாய்ப்பு இல்லை.
அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் தன்னுடைய ஊக்க நடவடிக்கைகளைக் குறைக்கும், அன்னிய முதலீட்டாளர்களை நம்பி இருக்கும் இந்த சந்தைகள் சரிவடையுமே?
கண்டிப்பாக.. ஃபெடரல் ரிசர்வ் ஊக்க நடவடிக்கைகளைக் குறைக்கும்போது இந்திய சந்தைகள் சரிவடையத்தான் செய்யும். ஆனால் அது ஒரு குறுகிய கால நிகழ்வாகத்தான் இருக்கும். ஃபெடரல் ரிசர்வ் குறைக்கும் ஊக்க நடவடிக்கைகளை பெரிய நெகட்டிவாக நான் பார்க்கவில்லை.
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு எப்படி இருக்கும்.?
அடுத்த ஆறு மாதங்களில் 60-65 ரூபாய்க்கு இடையே வர்த்தகமாகும்.
அடுத்த 6 மாதங்களுக்கு முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய துறைகள், பங்கு என்ன?
ஐ.டி., பார்மா மற்றும் கிராமப்புற பொருளாதாரத்தைச் சேர்ந்த துறைகளையும் அதில் இருக்கும் பங்குகளையும் கவனிக்கலாம். டி.சி.எஸ்., இன்போஸிஸ், ஹெச்.சி.எல். மைண்ட் டீரி, சன் பார்மா, டாரண்ட் பார்மா, ஐ.டி.சி., ராலிஸ் இந்தியா, இமாமி மற்றும் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா ஆகிய பங்குகளை கவனிக்கலாம்.
தவிர்க்க வேண்டிய துறைகள்?
நீங்கள் கேட்டதால் சொல்கிறேன். கட்டுமானம் மற்றும் கேபிடல் குட்ஸ் துறை பங்குகளை இப்போதைக்கு தவிர்ப்பது நல்லது.
அனைத்து முதலீட்டாளர்களுக்கும், பெரிய நிறுவனங்களுக்கும், மியூச்சுவல் ஃபண்ட்களுக்கு பிடித்த துறை வங்கி! வங்கித்துறை எப்படி இருக்கும்?
நாட்டின் பொருளாதாரமே வங்கித் துறையில்தான் இருக்கிறது. வாராக்கடன் போன்ற பிரச்சினைகள் இருந்தால் கூட, வங்கித் துறையை நான் நெகட்டிவாக பார்க்கவில்லை.
வங்கி துவங்குவற்கு நீங்களும் விண்ணப்பித்திருக்கிறீர்கள்? ஆனால் சமீபத்தில் டாடா நிறுவனம் வங்கி ஆரம்பிக்கும் திட்டத்திலிருந்து விலகி விட்டதே? உங்கள் திட்டம் என்ன?
டாடா நிறுவனம் விலகியதைப் பற்றி நான் ஏதும் சொல்ல முடியாது. ஆனால் நாங்கள் வங்கி ஆரம்பிக்கும் திட்டத்திலிருந்து விலகப்போவதில்லை. ஆர்பிஐ லைசென்ஸ் கொடுக்கும் பட்சத்தில் வங்கி தொடங்குவதற்கு தயாராகவே இருக்கிறோம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT