Published : 06 Mar 2014 11:56 AM
Last Updated : 06 Mar 2014 11:56 AM
வங்கிகள் பல விதமான வைப்புக் கணக்குகளை ஏற்றுக்கொள்கின்றன. சேமிப்பு/நடப்புக் கணக்குகளில் உள்ள பணத்தை எப்போது வேண்டுமானாலும் காசோலை மூலமாக எடுக்கலாம். கால வைப்பு (term deposit) என்பது 30 நாட்கள் முதல் 5 வருடம் வரையான காலத்தில் பணத்தை வங்கியில் வைப்பது ஆகும். கால வைப்பில் உள்ள பணத்தை காசோலை மூலமாக எடுக்க முடியாது.
ஆனால் முன்னறிவிப்பு மூலமாக கால வைப்பு தொகையை எடுத்து சேமிப்புக் கணக்கில் மாற்றலாம், அவ்வாறு மாற்றும்போது வட்டித்தொகை முழுவதும் கிடைக்காது. வங்கி பெறுகின்ற வைப்புத் தொகைகள் எல்லாம் அதனின் கடன் (liability) ஆகும்.
கடன் உருவாக்குவது (credit creation)
வங்கிகள் கடன் உருவாக்குவது என்பது பணத்தை உருவாக்குவதற்கு சமம். இதனால்தான் வங்கிகள் கடன் உருவாக்கம் மத்திய வங்கி கட்டுப்படுத்த முயற்சிக்கின்றது. கடன் உருவாக்குவது ஒரு புறம் வங்கியின் சொத்தின் அளவை அதிகப்படுத்துவதாக எடுத்துக்கொண்டாலும், மற்றொருபுறம் அது வங்கியின் வைப்புத் தொகையை அதிகப்படுத்தி, அதனின் கடன் அளவை அதிகப்படுத்தும்.
ஒரு வங்கியில் நீங்கள் ரூ.100 சேமிப்பு கணக்கில் செலுத்தியுள்ளீர்கள். வங்கியை பொறுத்தவரை இது அதனின் கடன் (-100). வங்கிக்கு தெரியும் நீங்கள் ஒரு நேரத்தில் 10% விட அதிகமாக பணத்தை எடுக்கமாட்டீர்கள் என்று. எனவே, ரூ10ஐ தன்னிடம் வைத்துக்கொண்டு மீதமுள்ள ரூ90ஐ ஒருவருக்குக் கடன் கொடுக்கிறது. இப்போது அந்த ரூ.90 வங்கியை பொறுத்தவரை சொத்து (+90).
அதே நேரத்தில் அவர் வைப்பு கணக்கில் ரூ.90 அதிகரித்துள்ளதால் வங்கியின் கடனும் (-90) அதிகரித்துள்ளது. இவ்வாறு வங்கிகள் தொடர்ந்து கடன் உருவாக்கி, தங்களின் சொத்தை அதிகரிப்பதுபோல் தங்களின் கடன் அளவையும் அதிகரிக்கின்றன. இதனால் நாட்டில் பண அளவு அதிகரித்து பணவீக்கம் ஏற்படும். இந்த கடன் உருவாக்கம் கட்டுப்படுத்த முடியாமல் போகாதவாறு மத்திய வங்கி (ரிசர்வ் வங்கி) பார்த்துக்கொள்வது முக்கியம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT