Published : 02 Dec 2013 10:20 AM
Last Updated : 02 Dec 2013 10:20 AM
அதிகரித்து வரும் உணவுப் பொருள் விலைவாசி உயர்வு காரணமாக வீட்டு உபயோகப் பொருள் வாங்கும் அளவு 40 சதவீத அளவுக்குக் குறைந்துள்ளது. தொழில் வர்த்தக சபை அமைப்பான அசோசேம் நடத்திய சமீபத்திய ஆய்வு இத்தகவலை வெளியிட்டுள்ளது.
பொதுவாக சிறிதளவு விலை உயர்ந்தாலே கூடுதல் செலவுகளைக் குறைப்பது மத்திய தர குடும்பத்தினரின் வழக்கம். ஆனால் இப்போது தினசரி பொருள்களின் விலை உயர்ந்து வருவதால், வீட்டில் உபயோகிக்கும் பொருள்களின் அளவைக் கணிசமாகக் குறைத்துள்ளனர். இதனால் வாங்கும் அளவு 40 சதவீத அளவுக்குக் குறைந்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் இப்போது பெரும்பாலான பொருள்களின் விலை உயர்ந்துள்ளதாக அசோசேம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
காய்கறிகள், பழங்கள், பருப்பு வகைகள் ஆகியவற்றின் நுகர்வு பெருமளவு குறைந்துள்ளது. சத்து நிறைந்த பொருள்களை வாங்குவது, பழங்கள் வாங்குவது, பாதாம், பிஸ்தா, முந்திரி போன்றவற்றை உபயோகிப்பது ஆகியன பெருமளவு குறைந்துள்ளது.
நடுத்தர மற்றும் நடுத்தர வர்கத்துக்கும் கீழ் நிலையிலான 72 சதவீத குடும்பத்தினரிடையே இந்த ஆய்வு நடத்தப்பட்டது. விலைவாசி உயர்வு காரணமாக தங்களது நுகர்வைக் குறைத்துக் கொள்ளும் கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டதாக பெரும்பாலான குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இரண்டு மாதங்களில் 3,000 பேரிடம் கருத்து கேட்டறியப்பட்டது. இந்த ஆண்டு அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. தலைநகர் டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, புணே ஆகிய பெருநகரங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
உணவுப் பொருள் விலையேற்றம் தவிர, அத்தியாவசிய தேவைகளான கல்வி, போக்குவரத்து, மருத்துவம் ஆகியவற்றுக்கான செலவுகளும் அதிகரித்துள்ளன. இது அவர்கள் ஈட்டும் வருமானத்தை விட அதிகரித்ததால் செலவுகளைக் குறைக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக பெரும்பாலான குடும்பத்தினர் தெரிவித்தனர். இந்த விலை ஏற்றத்தால் நடுத்தர, ஏழை குடும்பத்தினர் மட்டுமின்றி நடுத்தர குடும்பத்தினரும் பெருமளவு பாதிக்கப்பட்டதாக அசோசேம் இயக்குநர் செயலர் டி.எஸ். ரவாத் தெரிவித்துள்ளார்.
சமையலறையில் அன்றாடம் பயன்படுத்தும் பாரம்பரிய காய்கறிகளான தக்காளி, வெங்காயம், உருளைக் கிழங்கு ஆகியவற்றின் விலைகள் அதிகரித்துள்ளன. இது நடுத்தர மக்களால் வாங்க முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக பலரும் தெரிவித்துள்ளனர்.
போதிய மழையின்மை காரணமாகவும், இந்தக் காய்கறிகளின் விளைச்சல் குறைந்ததாலும் இவற்றின் விலைகள் உயர்ந்துள்ளன. காய்கறிகளில் மிக அதிகமாக விலை உயர்ந்தது வெங்காயம்தான். இதனால் உணவுப் பணவீக்கம் 10.09 சதவீத அளவுக்கு உயர்ந்தது. 7 மாதங்களுக்குப் பிறகு கடந்த அக்டோபரில் உணவுப் பணவீக்கம் இரட்டை இலக்க நிலையை எட்டியதற்கு வெங்காயத்தின் விலை உயர்ந்ததே பிரதான காரணமாகும்.
இதனால் ஏழை, நடுத்தர வர்க்கத்தினர் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிக்கை யில் கூறப்பட்டுள்ளது.
மாதாந்திர சம்பளம் பெறும் குடும்பத்தினர் ஒரு மாதத்துக்கு ரூ. 4 ஆயிரம் முதல் ரூ. 6 ஆயிரம் வரை காய்கறிகள் மற்றும் பழங்களுக்குச் செலவிட வேண்டியுள்ளதாகத் தெரிவித்தனர். இதனால் தினசரி தங்களது உணவுத் தேவையைக் குறைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டதாக அறிக்கை தெரிவிக்கிறது.
பொருள்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அசோசேம் வலியுறுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT