Last Updated : 28 Mar, 2014 09:34 AM

 

Published : 28 Mar 2014 09:34 AM
Last Updated : 28 Mar 2014 09:34 AM

தேர்தல் நேரப் பணப்பறிமுதல் - ஒரு பார்வை

“ரொக்கப்பணம் பறிமுதல்” என்கிற செய்தி இல்லாத நாட்கள் இல்லை. தேர்தல் தேதி அறிவித்த நாள் முதல் ரூ.50,000-க்கு மேல் ஆவணங்கள் இல்லாமல் ரொக்கமாக எடுத்துச் செல்லப்படும் பணம் இதுவரை சுமார் ரூ.18 கோடிக்கு மேல் தேர்தல் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

உரிமம் கோராத ரூ. 7 கோடி

பறிமுதல் செய்யப்பட்ட பணத்தில் சுமார் ரூ.7 கோடிக்கு உரிமம் கோருவதற்கு யாரும் முன்வரவில்லை. போதிய ஆவணங்கள் இல்லாதது கூட காரணமாக இருக்கலாம். பணப்பறிமுதலில் பெரும்பான்மையான தொகை வியாபாரிகளிடமிருந்து பறிமுதல் செய்ததால் வியாபாரிகளிடையே கடும் எதிர்ப்பு இருந்து வருகிறது. இதனால் வியாபாரம் பெரும் நெருக்கடியை சந்திப்பதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.

மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் தேர்தல் அதிகாரிகள் அதிக அளவு சுறுசுறுப்பு காட்டுகின்றனர். தற்போது பிடிப்பட்ட தொகை அனைத்தும் ஆவணங்கள் இல்லாத காரணத்தினால் பிடிப்பட்டுள்ளதே தவிர, அரசியல் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக எந்தவித செய்திகளும் இல்லை.

நடைமுறைச் சிக்கல்

இந்த பறிமுதல்களால் நடைமுறை சிக்கல் மற்றும் சிரமங்கள் அதிகரித்துள்ளன. ஏ.டி.எம் நிரப்புதலுக்காக எடுத்து செல்லப்பட்ட பணம் பறிமுதல் மற்றும் பொது மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் மற்ற பல சம்பவங்களை தொடர்ந்து, “இந்த சட்டம் அரசியல் பணத்தை பறிமுதல் செய்வதற்காக மட்டுமே கொண்டுவரப்பட்டதே தவிர மற்றவர்களுக்கு எந்த விதத்திலும் பாதிப்பு ஏற்படுத்தக் கூடாது. மேலும் வாகனச் சோதனையின்போது ரூ.10 இலட்சத்திற்க்கு மேல் பணம் கிடைத்தால் உடனடியாக வருமானவரி துறையினருக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்”, என்ற அறிக்கையை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

பறிமுதலின் நோக்கம்

இந்த பறிமுதலின் நோக்கம் தேர்தல் பணப்புழக்கத்தை கட்டுப்படுத்துவது மட்டுமே என்றாலும் இந்த பறிமுதல் நடவடிக்கை மூலம் வெடி மருந்து, தங்கம்,வெள்ளி, வெண்கல சாமி சிலைகள் மற்றும் புடவைகள் போன்ற பொருட்களும் பறிமுதல் செய்யப் பட்டுள்ளன. மேலும் தேர்தல் தேதி அறிவித்த சில நாட்களுக்கு முன்னதாகவே அரசியல்வாதிகள் பணத்தை எடுத்துச் சென்றதாகவும், மீதத்தை ஆம்புலன்ஸ் மற்றும் அரசு வாகனங்கள் மூலமாக பிரயாணப்படுத்துவதாகவும் அரசியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

தற்போது நடைபெறும் வாகனச்சோதனையில் கிடைக்கும் பணம் பெரும்பங்கு வியாபாரிகள் மற்றும் சிறு தொழில் அமைப்பினர் தங்களது அன்றாடச் செலவுகளுக்காக போதுமான ஆவணங்கள் இல்லாமல் எடுத் துச் செல்லப்படும் பணம்தான்.

தேவையான ஆவணங்கள்

வங்கி சலான், காசோலை நகல், ஏ.டி.எம் பில், பொருட்களின் பில்கள் அல்லது மற்ற விபரங்கள் போன்ற ஆவணங்கள் மற்றும் தொழிலாளர்களூக்கு தருவதற் காக எடுத்து செல்லப்படும் சம்பளம் பணத்திற்க்கு Self Declaration என்கிற சுய உறுதிமொழி போதுமான ஆவணமாக கருதப்படுகிறது.

இருப்பினும் நடைமுறையில் அதிகாரிகள் இதை ஏற்க மறுக்கின்றனர். பறக்கும் படை என்று அழைக்கப்படும் குழுவில் பெரும்பாலும் போலீஸ் மற்றும் தேர்தல் அதிகாரிகள் மட்டுமே இருப்பதால் இந்த ஆவண விவரங்களை துல்லியமாகப் பார்த்து முடிவெடுக்கும் அனுபவம் வித்தியாசப்படுகிறது. இதனால் வியாபாரிகளின் அன்றாட செலவுக்கான பணத்தையும் அதிகாரிகள் கைப்பற்றி வரும் நிலை உள்ளது. இந்தக் குழுவில் வருமானவரி அதிகாரிகள் யாரும் இருப்பதில்லை. பொதுவாக வருமானவரி அதிகாரிகள் எத்தகைய ஆவணங்கள் போதுமானவை என்று கூறுகிற அனுபவம் பெற்றவர்கள்.

திரும்பப் பெறுவதில் சிரமம்

பணத்தை பறிமுதல் செய்த பின்னர்தான் வருமானவரி துறையிடம் இந்தப்பணம் கொடுக்கப்படுகிறது. ரொக்கத்தைப் பறிமுதல் செய்து வருமானவரித் துறையிடம் கொடுத்து விட்டால் பின்னர் ஒரு நீண்ட நடைமுறைக்கு பின்தான் அந்தப்பணத்தை திரும்பப் பெறமுடியும். வருமானவரி அதிகாரி அந்தப் பணத்தை முன்கூட்டிய வரியாக (Advance Tax) கருதி, அந்த ஆண்டிற்கான வரிவிதிப்பு (Assessment) முடிந்தபின்தான் பொதுவாக திரும்பத்தருகின்றனர். உடனடியாக ஆவணங்களைக் காட்டி திரும்பக் கொடுப்பது நடைமுறையில் மிகவும் குறைவாக உள்ளது.

வருமானவரிச் சட்டத்தின் படி ரூ.20,000 க்கு மேல் கடனாகவோ மற்றும் செலவாகவோ கொடுக்கக் கூடாது என்ற விதி நடைமுறையில் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. இருப்பினும், ஏன் பணப்பரிமாற்றம் நடைபெறுகிறது என்று வரி அதிகாரிகள் கேட்கின்றனர்.

ஆனால் வரிச்சட்டத்தில் ரொக்கமாக மூலதன செலவு செய்ய அனுமதி உண்டு. திருமணச்செலவு, நகை வாங்க எடுத்துச் செல்லும் பணத்தை எந்தத் தொந்தரவுக்கும் ஆளாக்காமல் பொதுமக்களை விடுவிப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

கடந்த தேர்தலில்..

கடந்த தேர்தலின்போது பறிமுதல் செய்யப்பட்ட பணம் சுமார் ரூ.30 கோடியை திரும்பி பெற யாரும் விண்ணப்பிக்கவில்லை. இதற்கான ஆவணங்கள் போதுமானவையாக இல்லை என்றே கருதலாம். இந்தியாவில் கணக்கில் காட்டப்படாத பணத்தை இத்தகைய சோதனைகளை ஆண்டு முழுவதும் நடத்துவதன் மூலம் குறைக்கலாம் என்று ஒரு சாரர் கூறினாலும்,நடைமுறையில் பல சிரமங்களுக்கும்,லஞ்ச ஊழலுக்கும் இது வழி வகுக்கும்.

karthikeyan.auditor@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x