Published : 12 Dec 2013 12:00 AM
Last Updated : 12 Dec 2013 12:00 AM

விலைவாசி உயர்வுதான் தோல்விக்கு முக்கியக் காரணம்: ப. சிதம்பரம்

விலைவாசி உயர்வுதான் நடந்து முடிந்த மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி யடைந்ததற்குப் பிரதான காரணம் என்று மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் ஒப்புக் கொண்டார்.

நடந்து முடிந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்த தற்கு விலைவாசி உயர்வும் ஒரு காரணம் என்று டெல்லியில் புதன்கிழமை நடைபெற்ற பொருளா தார மாநாட்டில் சிதம்பரம் கூறினார்.

பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதற்கு விலைவாசி உயர்வு முக்கியக் காரணம். இதன் எதிரொலியாக மத்தியில் ஆளும் கட்சியான காங்கிரஸ் நடந்து முடிந்த மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் தோல்வியைச் சந்தித்துள்ளது.

வேளாண் விளை பொருள்களுக் கான ஆதார விலை அதிகரித்தது, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் பிரதான திட்டமான கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டம் மூலம் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தியது உள்ளிட்ட வாதங் கள் ஏழை மக்களிடம் எடுபடவில்லை என்று அவர் கூறினார்.

பணவீக்கம் மற்றும் விலை உயர்வுக்கு அரசுதான் காரணம் என்ற பொதுவான அபிப்ராயத்தின் எதிரொலிக்கான விலையை ஆளும் மத்திய அரசு கொடுத்துள்ளது என்று மாநாட்டின் தொடக்க உரையில் சிதம்பரம் குறிப்பிட்டார்.

விலைவாசி உயர்வுதான் காங்கிரஸ் தோல்விக்கு முக்கியக் காரணம் என்று கட்சியின் தலைவர் சோனியா காந்தி குறிப்பிட்டதையும் சிதம்பரம் சுட்டிக் காட்டினார்.

இருப்பினும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதுதான் அரசின் பிரதான நோக்கமாகும். இந்த விஷயத்தில் அரசு புத்திசாலித்தனத் துடன் நடந்து கொள்ள வேண்டி யுள்ளது. அறுவடை, சந்தைப்படுத் தல் ஆகிய விஷயங்ளில் பதுக்கல் காரர்கள் மீது கடுமையான நட வடிக்கை எடுக்க வேண்டியுள்ளது.

வேளாண் பொருள்களை அதா வது அத்தியாவசியப் பொருள்ளை வாங்குவது அதை சந்தைப்படுத் துவது உள்ளிட்டவை தொடர்பான சட்ட விதிகள் அனைத்தும் மாநில அரசுகளின் கையில்தான் உள்ளது. இவை தொடர்பான அறிக்கை வெளியிடுவது அதை அமலாக்கம் செய்வது உள்ளிட்டவை மாநில அரசுகளின் கடமையாகும். ஆயினும் மாநில அரசுகள் இந்த சட்ட விதிகளின் கீழ் நடவடிக்கை எடுப்பதில் தயக்கம் காட்டுகின்றன என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

இந்த விஷயத்தில் மாநில அரசுகளின் செயல்படாத நிலையை வெளிப்படுத்த வேண்டியது அவசியம் என்று தெரிகிறது. மத்திய அரசு தனது அதிகாரத்துக்குட்பட்டு பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.

அத்தியாவசியப் பொருள்களின் விலை ஏற்றம் அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. வெங்காயம் விலை கிலோவுக்கு ரூ. 100 உயர்ந்துள்ளதையும் அவர் குறிப்பிட்டார்.

நிதிப் பற்றாக்குறை எல்லை மீறாது

நடப்பு நிதி ஆண்டில் நிதிப் பற்றாக்குறை அரசு நிர்ணயித்துள்ள எல்லையை மீறாது என்று திட்டக்குழு துணைத் தலைவர் மான்டெக் சிங் அலுவாலியா உறுதியாகக் கூறினார்.

நிதிப் பற்றாக்குறை தொடர்பாக மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் அளித்த உறுதிமொழியைக் காப்பாற் றுவார் என்ற நம்பிக்கை தமக்கு நிச்சயம் உள்ளதாக அவர் கூறினார்.

இந்த விஷயத்தில் நிதியமைச் சரை நம்புகிறேன், நிச்சயம் நிதிப் பற்றாக்குறை நிர்ணயித்த அளவைத் தாண்டிப் போகாது என்று மாநாட்டில் பேசிய மான்டெக் உறுதிபடத் தெரிவித்தார்.

மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக அரசு கொண்டு வரும் மக்கள் நலத் திட்டங்களால் பற்றாக்குறை அதிகரிக்கும் எனக் கூறப்படுவது குறித்து கேட்டதற்கு, இந்த விஷயத்தில் நிதியமைச்சர் தான் அளித்த வாக்குறுதியை மீற மாட்டார் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளது என்று குறிப்பிட்டார்.

செவ்வாய்க்கிழமை தரச்சான்று நிறுவனமான ஃபிட்ச் வெளியிட்ட அறிக்கையில், நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்தது. இதைத் தொடர்ந்து பொதுத் தேர்தலுக்காக அரசு கூடுதலாக செலவிடும். இதனால் நிதிப் பற்றாக்குறை அதிகரிக்கும் என்று குறிப்பிட்டிருந்தது.

மாநில சட்டப்பேரவைத் தேர்தல் எதிரொலியாக நிதிப் பற்றாக்குறையைக் கட்டுக்குள் வைப்பதை விட பொதுத் தேர்தலை எதிர்கொள்வதில் காங்கிரஸ் அரசு தீவிரம் காட்டும் என்றும் குறிப்பிட்டிருந்தது. நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், தில்லி ஆகியவற்றில் காங்கிரஸ் கட்சி தோல்வியைத் தழுவியது குறிப்பிடத்தக்கது.

தங்கம் இறக்குமதி

பணவீக்கம் குறையும் போது ஆண்டுக்கு 3,000 கோடி டாலர் அளவுக்கு தங்கத்தை இறக்குமதி செய்தாலும் அதைத் தாங்கும் நிலையில் இந்தியப் பொருளாதாரம் இருக்கும் என்று பிரதமரின் பொருளா தார ஆலோசனைக் குழுத் தலைவர் சி. ரங்கராஜன் தெரிவித்தார்.

கடந்த நிதி ஆண்டில் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை அதிகரித்ததற்கு அதிக அளவில் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டதும் ஒரு காரணம் என்று மாநாட்டில் பேசிய ரங்கராஜன் குறிப்பிட்டார்.

கடந்த நிதி ஆண்டில் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை 8,800 கோடி டாலராக உயர்ந்தது. கடந்த ஆண்டு 845 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டது. இதனால் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ரூ. 68.85 என்ற அளவுக்குச் சரிந்தது.

இதைத் தொடர்ந்து தங்கம் இறக்குமதிக்கு அரசு சில கட்டுப் பாடுகளை விதித்தது. இதன் விளை வாக நவம்பர் மாதத்தில் தங்கம் இறக்குமதி 105 கோடி டாலராகக் குறைந்தது. கடந்த ஆண்டு இதே காலத்தில் தங்கம் இறக்குமதி அளவு 540 கோடி டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

தங்கம் இறக்குமதி குறைந்ததால் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை குறையும் என்று மாநாட்டில் பேசிய ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனும் தெரிவித்தார். குறுகிய காலத்துக்கு இந்த நடவடிக்கை அவசியமானது என்று அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x