Published : 01 Jan 2014 11:54 AM
Last Updated : 01 Jan 2014 11:54 AM

நம்பி(க்)கை வைப்போம்

புது வருஷம் என்ன ரெசல்யூஷன் எடுக்கப்போகிறீர்கள் என்று கேட்டார் நண்பர். வருடம் புதிதாவதை விட நாம் தான் புதிதாக வேண்டும் என்று சொல்ல நினைத்தேன்!

எத்தனையோ சபதங்கள் எடுக்கலாம். துவங்க, குறைக்க, தவிர்க்க ஏராளம் உள்ளன. புத்தாண்டு தினம் இவற்றையெல்லாம் கொஞ்சம் நினைவுப்படுத்துகிறது. அவ்வளவு தான். தவிர, என் கடந்த கால ரெக்கார்டுகள் அவ்வளவு கௌரவமாக இல்லை. பல சின்ன சின்ன சபதங்களைக் கூட சில நாட்களிலேயே முறித்திருக்கிறேன். இனி புத்தாண்டு ரெசல்யூஷன்ஸ் எதுவும் எடுப்பதில்லை என்று கூட ரெசல்யூஷன் எடுத்துப்பார்த்தேன். ம்ஹூம்..அதை கூட நிறைவேற்ற முடியவில்லை!

இருந்தும் வாழ்த்து அட்டைகள், குறுந்தகவல்கள், மின்னஞ்சல்கள், பரிசுகள் அனுப்புவது, கடந்த ஆண்டின் முக்கிய நிகழ்வுகள் பற்றிப் பேசுவது, அடுத்த ஆண்டுக்கான ஆருடம் சொல்வது என சில சடங்களுடன் புது வருடம் துவங்குகிறது.

தொழில் துறையில் சற்று தேக்க நிலை காரணமாக உரத்த கொண்டாட்டம் இல்லை. வேலை இழப்பு, சம்பளம் குறைப்பு, புதிய திட்டங்கள் முடக்கம் என ஸ்ருதி குறைந்து காணப்படுகிறது. இருந்தும் புதிய தொழில் முதலீடுகளும் திட்டங்களும் வராமல் இல்லை.

நெருக்கடியில் ஒரு நிறுவனம் என்ன செய்கிறது என்பதுதான் அதன் வளர்ச்சியை நிர்ணயிக்கிறது. எம்.டி.ஆர் அதற்கு ஒரு நல்ல உதாரணம்.

மாரவள்ளி டிபன் ரூம் (எம்.டி.ஆர்) பழைய பெங்களூரின் தொன்மையான உணவகம். லால் பாக் கேட்டெதிரே உள்ள இந்த ஓட்டலின் வெண்ணெய் போட்ட மசால் தோசைக்கும் டிகிரி காபிக்கும் பல பிரபலங்கள் அடிமை. காபிக்கு தனி வரிசையில் நின்று கூட்டம் டோக்கன் போடும். பெங்களூரைத் தெரிந்தால் எம்.டி.ஆரைத் தெரியும் என்ற அளவிற்கு பெரிய பெயர்.

1977ல் அதற்கு ஒரு சோதனை வந்தது. அன்று மத்தியில் ஆட்சிக்கு வந்த ஜனதா அரசு ஓட்டல்களை 1 ரூபாய்க்கு முழு சாப்பாடு போடச்சொல்லி சட்டம் கொண்டு வந்தது. எல்லா உணவுகளுக்கும் விலையை நிர்ணயம் செய்தது. எம்.டி.ஆருக்கு பெரும் சிக்கல். அந்த விலைக்கு அந்த ருசியும் தரமும் கொடுக்க முடியாது. விலையையும் தரத்தையும் குறைத்தால் வாடிக்கையாளர்களிடம் பெயர் கெட்டு வியாபாரமும் பாதிக்கப்படலாம். என்ன செய்ய?

துணிந்து ஓட்டலை மூடுகிறார் முதலாளி. சட்டம் திரும்ப பெறும் வரை இதுதான் சரி என்கிறார். தொழிலாளர்கள் குடும்பங்கள் அவதிப்படுவதைப் பார்த்து அவர்களுக்கு சிறு ஊதியமாவது கொடுக்க சமையலுக்கு தேவையான பொடிகளை தயாரித்து சிறு அளவில் விற்க ஆரம்பிக்கிறார். ஒரு வருடத்தில் மைசூரில் உள்ள அந்த மத்திய அரசு நிறுவனம் ராணுவத்தினருக்கு பொட்டலமிட்ட உணவுகள் தயாரித்து தர முடியுமா எனக்கேட்டு வந்தது. தொழில்நுட்பம் கற்று அந்த ஆர்டரை பெறுகிறார். அந்த சின்ன வெற்றி தான் விதை. அடுத்த 20 ஆண்டுகளில், பதப்படுத்தப்பட்ட இந்திய தயார் உணவு என்றால் எம்.டி.ஆர் தான் என்று உலகளாவிய பெயரையும் பல நூறு கோடிகள் வியாபாரத்தையும் ஈட்டியது.

1980ல் மத்தியில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்து ஜனதா சாப்பாட்டை நிறுத்தியவுடன் மீண்டும் ஓட்டல் திறக்கப்பட்டு இன்று வரை சக்கை போடு போட்டுக் கொண்டிருப்பது தனிக்கதை!

ஒரு பொருளின் திடம் அசாதரண சோதனையில் தான் வெளிப்படுகிறது. இரும்பின் திடம் அறிய உடைத்தும், நெருப்பில் காய்ச்சியும், ரசாயனம் கொட்டியும் ஆய்வு செய்கிறோம். அது போலத்தான் மனிதர்களும் நிறுவனங்களும் அசாதாரண சூழலில் தங்கள் திடத்தை நிரூபிக்கிறார்கள். நெருக்கடிகள் தான் மனிதர்களை புதிய செயல்கள் செய்யத் தூண்டியிருக்கின்றன. மூக்கு சொறிந்து கொண்டு குப்புற படுத்த காலங்களில் மனிதன் எதையும் கண்டு பிடிக்கவில்லை.

அட்ரினலின் சுரக்க சிக்கலில் மாட்டிக்கொள்ளும் காலங்களில் தான் அவன் தன் அடுத்த கட்ட சிந்தனையை நோக்கி நகர்ந்திருக்கிறான். சொகுசான வாழ்க்கை நம் போராட்ட உணர்வையும் ஆக்க சிந்தனையையும் மழுங்கடிக்கூடியவை. நெருக்கடிகளை அது தரும் பாடங்களுக்காக நம்பிக்கையுடன் எதிர்கொள்வோம். எதிர்பாராது வரும் சிக்கல் இன்னமும் விசேஷம். அப்படி எனக்கு ஒரு சிக்கல் வந்தது 2003ல்.

“வியாழக்கிழமை தேதி உள்ளதா? கடைசி நேரத்தில் கேட்பதற்கு மன்னிக்கவும். ஹைதராபாத்தில் ப்ரொக்ராம். ஏற்கனவே முடிவாகியிருந்தவர் வர முடியாத நிலை. உங்களால் நடத்த முடியுமா?”

ஒப்புக்கொண்டேன். “எது பற்றி பயிற்சி? யாருக்கு?” என்று கேட்டவுடன் நண்பர் அதெல்லாம் புது ஜி.எம். பேசுவார். நான் காலை ஃப்ளைட் அவருடன் போடுகிறேன். மார்கெடிங் ஆளுங்க. உங்க எனர்ஜிக்கு பிச்சு உதறிடலாம்” என்று பொத்தாம் பொதுவாக சொல்லி போனை வைத்தார்.

பயண நாள் வரை பயிற்சி பற்றி எந்தத் தகவலும் வரவில்லை. “எந்த தலைப்பு கொடுத்தாலும் உங்க இஷ்டத்துக்கு தானே ஏதோ ஒண்ணு பேசுவீங்க. என்னமோ எப்பவும் ப்ரிப்பேர் பண்ற மாதிரி என்ன புதுக் கவலை?” என்று மனைவி கேட்டதில் உண்மை இருந்தாலும் முகம் தெரியாத ஆளுடன் இருட்டில் சண்டை போட போவதை உணர்ந்தேன்.

ஜி.எம் என்னுடன் ஹைதராபாத் வரும் வரை பேசினார். கிரிக்கெட், செவ்வாய் தோஷம், ஷேர் மார்க்கெட், மாம்பலம் கொசு, ரஜினிகாந்த், 72ல் பாகிஸ்தான் யுத்தம், சைக்காலஜி, தமிழ் நாடு காங்கிரஸ் கோஷ்டிகள் என அனைத்தையும் பேசினார். அந்த நாளின் நிகழ்ச்சி நிரல் பற்றி வாயைக்கூடத் திறக்கவில்லை. கடைசியில் நான் சிறு முயற்சி செய்த போது, “சார், ஸ்பேர் பார்ட்ஸ் ஆளுங்க சார். உங்களப் பத்தி தெரியும். ஜமாயுங்க!” என்றார்.

அட்டகாசமாய் அறிமுகம் செய்து வைத்தார். நான் பேச ஆரம்பித்து 30 வினாடிகளுக்குள் ஏதோ ஒன்று சரியில்லை என்று புரிந்தது. நகைச்சுவை முயற்சிகள் முழுத் தோல்வியை சந்தித்தன. “பேசறது புரியுதா கனவான்களே?” என்று கேட்டேன்.

“தெலுகுலு மாட்லாடண்டி. நோ இங்கிலீஷ்!” என்றனர். திரும்பிப் பார்த்தால் ஜி.எம். மொபைலில் பேசிக்கொண்டே வெளியே ஓடினார். 40 பேர். 8 மணி நேரம். தெலுங்கில் நடத்தணும். அனைவரும் தொலை தூரம் கடந்து மிகுந்த எதிர்பார்புடன் வந்துள்ள டீலர்கள். நான் ஆரம்பித்தேன் ஆங்கிலத்திலேயே: “எனக்கு ஆந்திராவில் பிடித்தவை: 1. நடிகை ஜெயப்பிரதா. 2. சிரஞ்சீவி. 3. திருப்பதி வெங்கடாஜலபதி. வரிசை மட்டும் சமயத்திற்கேற்ப மாறும்.” பலர் முகத்தில் புன்னகை.

“நான் உங்கள் ஊருக்கு வந்து உங்கள் பாஷை பேசாதது என் தவறு. எனக்கு தெலுங்கு புரியும். பேச வராது. உங்களுக்கு ஆங்கிலம் புரியும். ஆனால் பேச வராது. அதனால் நான் ஆங்கிலமும் நீங்கள் தெலுங்கும் பேசுவோம். மொழி பெயர்ப்பு தேவைப்பட்டால் ஜி. எம். இருக்கிறார்!” என்றவுடன் கரகோஷத்துடன் நிகழ்ச்சி துவங்கியது.

Role Play யுத்திகளை Video Recorded Feedback உதவியுடன் செய்ததால், மிகச்சிறப்பாக சென்றது பயிற்சி. “மன்ச்சி புரோகிராம் சார்!” என்று என்னை ஆந்திரா முழுவதும் செல்லச் சொல்லி பரிந்துரைத்து அந்த கூட்டம். ஒரு டப்பிங் ஸ்டார் அந்தஸ்துடன் இரவு வீடு திரும்பினேன்.

அந்த வெற்றியால் நாடு முழுவதும் என்னை கூட்டிச் சென்றார்கள். விற்பனை- சேவை- உதிரி பாகஙகள் வியாபாரம் மூன்றையும் புரிந்து தொடர்ந்து பணியாற்றினேன். அன்னிய மொழி மக்களுடன் சரளமாக பயிற்சி எடுக்க கற்றுக் கொண்டேன். அந்த ஹைதராபாத் சிக்கலை என்றும் நன்றியுடன் நினைத்துக்கொள்வேன்.

புது வருடத்தில் புது திறன்களை கற்றுக்கொள்ளுங்கள். புது அனுபவங்களை தேர்ந்தெடுங்கள். புது விஷயங் களிலும் நம்பி கை வையுங்கள். வெற்றி உங்கள் வச மாகட்டும்.!

gemba.karthikeyan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x