Published : 25 Nov 2014 12:12 PM
Last Updated : 25 Nov 2014 12:12 PM

ஸ்வீட் எடு கொண்டாடு

பாட்ஷா படம். “எட்டுக்குள்ளே ஒலகம் இருக்கு ராமையா’’ என்று ரஜினி பாடுவார். மனித வாழ்க்கையை 64 வருடங்கள் என்று கணக்குப்போட்டு, அதை, 8 பாகங்களாகப் பிரித்து, ஒவ்வொரு எட்டு வயதிலும், மனிதன் என்ன செய்யவேண்டும் என்று புட்டுப் புட்டு வைப்பார்.

மனிதர்களுக்கு மட்டுமல்ல, எல்லாப் பொருட்களுக்கும், தோற்றம், மறைவு என ஆயுட்காலம் உண்டு. புதிய புதிய பொருட்கள் சந்தைக்கு வருவதை அடிக்கடி பார்க்கிறோம். அதே நேரத்தில், அசோகா பாக்கு, ரெமி ஸ்நோ, மர்பி ரேடியோ, டயனோரா டி.வி, சாலிடேர் டி.வி, HMT வாட்ச்கள் ஆகிய நேற்றைய பிரபலப் பொருட்கள் மறைந்துவிட்டன. இதை, மார்க்கெட்டிங்கில், பொருட்களின் வாழ்க்கைச் சக்கரம் (Product Life Cycle) என்று சொல்கிறோம்.

பொருட்களின் ஆயுள் காலத்தில் நான்கு பருவங்கள். அவை: அறிமுகம் (Introduction), வளர்ச்சி (Growth), முதிர்ச்சி (Maturity), சரிவு (Decline).

பொருட்கள் சந்தையில் அறிமுகமாகின்றன. விற்பனை வளர்கிறது. ஒரு காலகட்டத்தில், விற்பனை முதிர்ச்சி அடைகிறது, அதாவது விற்பனை அதிகமாக வளராமல் மந்தமாகிறது. அடுத்து, விற்பனை குறையத் தொடங்குகிறது. பொருள் சந்தையிலிருந்து காணாமல் போகிறது.

மாற்று உத்தி

புதிய பொருட்களை அறிமுகம் செய்யவும், விற்பனையை அதிகமாக்கவும், கோடிக் கோடியாகப் பணம் செலவாகிறது. விற்பனைச் சரிவும், காணாமல் போவதும், நிறுவனங்களுக்கு நஷ்டம் தருபவை. இந்த நஷ்டத்தைத் தடுக்க முடியும். இதற்கு ஒரே வழி, முதிர்ச்சிப் பருவத்தில், பொசிஷனிங் யுக்தியை மாற்றுவது. இதை வெற்றிகரமாகச் செய்து காட்டியிருப்பவர்கள், காட்பரீஸ் சாக்லெட்.

காட்பரீஸ் கம்பெனி, 1924 ம் ஆண்டு இங்கிலாந்தில் தொடங்கியது. டீ, காப்பி, கோகோ ஆகிய பல துறைகளில் ஈடுபட்டிருந்த இவர்கள், 1861 இல் சாக்லெட் தயாரிப்பு தொடங்கினார்கள். 1905 இல் அறிமுகமான டெய்ரி மில்க் சாக்லெட் அமோக வெற்றி கண்டது.

1948 - இல் இந்தியா வந்த காட்பரீஸ், முதலில் சாக்லெட்களை இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்து விற்பனை செய்தார்கள். 1965 இல் இந்தியாவில் உற்பத்தி தொடங்கினார்கள்.

சாக்லெட்களைக் குழந்தைகளின் தின்பண்டமாகப் பொசிஷன் செய் தார்கள். “ஒரு பவுண்ட் சாக்லெட்டில் ஒன்றரை டம்ளர் பால்’’ என்று, டெயரி மில்க் சாக்லெட் குழந்தைகளுக்குச் சக்தியும், ஆரோக்கியமும் தரும் தின்பண்டம் என்னும் பிம்பம் உருவானது. , மக்கள் மனதில் ஏற்பட்ட இந்த அபிப்பிராயத்தால், அடுத்த 25 வருடங்களுக்கு விற்பனை வருடம் 10 சதவிகிதத்தில் வளர்ந்தது.

குற்ற உணர்வு

1990 காலகட்டத்தில் விற்பனை வளர்ச்சி மந்தமானது. காட்பரீஸ் நிலைமையை ஆராய்ந்தார்கள். பல காரணங்கள். குழந்தைகள் மட்டுமே சாக்லெட் கஸ்டமர்களாக இருந்தார்கள். இளைஞர்கள், இளைஞிகள், நடுத்தர வயதினர், குடும்பத் தலைவிகள், முதியோர் ஆகிய மற்ற எல்லோரும் சாக்லெட் சுவைக்க, சாப்பிட ஆசைப்பட்டார்கள். குழந்தைகள் மட்டுமே சாப்பிடும் தின்பண்டம் என்கிற எண்ணம் எல்லோர் மனங்களிலும் ஆழமாகப் பதிந்திருந்தது. ஆகவே, ஒளிவு மறைவாகச் சாக்லெட் சாப்பிட்டார்கள். அப்போது, ஏதோ திருட்டுத்தனம் செய்வதுபோல், அவர்கள் மனங்களில் குற்ற உணர்வு வந்தது.

இத்தோடு, சாக்லெட் சாப்பிடும் பழக்கம் நகரங்களில் மட்டுமே இருந்தது. கிராமங்களில் மக்கள் லோக்கல் கடை இனிப்புக்கள், கமர்கட், கடலை மிட்டாய் ஆகியவற்றை மட்டுமே வாங்கிக்கொண்டிருந்தார்கள்.

அணுகுமுறையில் மாற்றம்

விற்பனையை அதிகமாக்க வேண்டுமானால், குழந்தைகள் முதல் குடுகுடு கிழவர்கள்வரை, நகரங்களோடு கிராமங்களிலும் சாக்லெட் சாப்பிட வைக்கவேண்டும், குழந்தைகள் தவிர்த்தவர் மனங்களில் குற்ற உணர்வு வராமல் செய்யவேண்டும். இந்த அடிப்படையில், 1994 ம் ஆண்டில், காட்பரீஸ், தங்கள் பொசிஷனிங், விளம்பர அணுகுமுறை ஆகியவற்றை மாற்றத் தொடங்கினார்கள்.

அப்போது, MTV ம்யூசிக் சானலும், அதன் வீடியோ ஜாக்கி சைரஸ் பரூச்சாவும் இளைய தலைமுறையினரிடம் மிகப் பிரபலம். காட்பரீஸின் முதல் விளம்பரம் வந்தது. சைரஸ் பல கல்லூரி மாணவ மாணவிகளைப் பேட்டி காண்கிறார். அவர்கள் டெய்ரி மில்க் சாப்பிடுவதற்கான காரணங்களைக் கேட்கிறார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணம் சொல்கிறார்கள்.

கடைசியாக, எல்லோருடனும் சேர்ந்து சைரஸ் பாடுகிறார், “காட்பரீஸ் டெய்ரி மில்க் சாப்பிட ஏன் வேண்டும் காரணம்?’’

இளைய தலைமுறையைக் குறிவைத்து எய்யப்பட்ட ஆயுதம் இது காட்பரீஸ் சாக்லெட் சாப்பிட நேரம், காலம், காரணம் பார்க்கவேண்டியதில்லை, எப்போது வேண்டுமானாலும், சும்மானாச்சும் சாப்பிடலாம் என்னும் கருத்தையும், சாக்லெட் குழந்தைகள் மட்டுமல்ல, இளைஞர், இளைஞிகளும் சுவைத்துச் சாப்பிடும் தின்பண்டம் என்னும் கருத்தை மக்கள் மனங்களில் ஆழமாகப் பதியவைத்தது.

மனநிலையில் மாற்றம்

சாக்லெட்டின் வாடிக்கையாளர் எண்ணிக்கையையும், விற்பனையையும் அதிகமாக்க என்ன செய்யலாம்? பண்டிகைகள், வீட்டு விசேஷங்கள், நல்ல நாட்கள், கொண்டாட்டங்கள், பரீட்சை, தேர்தல் வெற்றிகள் ஆகிய நிகழ்வுகளின்போது, மகிழ்ச்சியின் அடையாளமாக இனிப்பு சாப்பிடுவது இந்தியப் பாரம்பரியம். இனிப்பு என்றால், மக்கள் நினைவுக்கு வந்தது அல்வா, லட்டு, மில்க் பேடா, மைசூர்பா போன்ற இந்திய ஸ்வீட்கள். இதை மாற்றி, ஸ்வீட் என்றால், சாக்லெட்டை மக்கள் நினைக்கும் மனநிலையை உருவாக்கக் காட்பரீஸ் முடிவு செய்தார்கள்.

இப்போது பொசிஷனிங்கின் அடுத்த கட்டம். “காட்பரீஸ் டெய்ரி மில்க் சாப்பிட ஏன் வேண்டும் காரணம்?’’ என்னும் விளம்பர முழக்கம் மாறியது. “காட்பரீஸ் வாழ்க்கையின் நிஜச் சுவை?’’ என்னும் ஜிங்கிள் வந்தது. கிரிக்கெட் மாட்ச் நடக்கிறது. ஒரு இளம்பெண் மாட்ச் பார்த்துக்கொண்டிருக்கிறாள். பாட்ஸ்மேன் சிக்ஸர் அடிக்கிறார். தன் சீட்டிலிருந்து குதிக்கும் இளம் பெண். போலீஸ்காரரை டபாய்த்து கிரவுண்டுக்குள் நுழைகிறார். டெயரி மில்க் சாக்லெட்டை ரசித்துச் சாப்பிட்டபடி, டான்ஸ் ஆடுகிறார். பல விருதுகளை அள்ளிய இந்த விளம்பரம் விற்பனையை எகிறவைத்தது.

“சுப ஆரம்பம். ஸ்வீட் சாப்பிடுவோம்’’ என்று அடுத்த கட்டம் தொடங்கியது. சுபமான காரியங்கள் தொடங்கும் முன்னால், இனிப்பு சாப்பிடவேண்டும் என்னும் நம் நாட்டுப் பழக்கத்தின் அடிப்படையில் இந்தப் பொசிஷனிங். ஒரு பெண் டெயரி மில்க் சாப்பிடபடி பஸ் ஸ்டாண்டில் நிற்கிறார். ஒரு இளைஞர் வருகிறார். சாக்லெட் கேட்கிறார்.

சுப காரியங்கள் தொடங்கும் முன்னால், ஸ்வீட் சாப்பிடவேண்டும் என்று தன் அம்மா சொன்னதாகக் காரணம் சொல்கிறார். “அப்படி என்ன சுப காரியம்?’’என்று அந்தப் பெண் கேட்க, ``உன்னை வீட்டில் விடலாம்ன்னு யோசிச்சேன்’’என்று இளைஞர் சொல்லி, தன் காதலை வெளிப்படுத்துகிறார்.

“கொஞ்சம் ஸ்வீட் சாப்பிடுங்க’’ என்று கூறின அடுத்தகட்ட விளம்பரங்கள். அமிதாப் பொட்டிக் கடை வைத்திருக்கிறார். இரண்டு பேர் வருகிறார்கள். காட்பரீஸ் எடுத்துச் சாப்பிடுகிறார்கள். “பப்பு பணம் தருவான்’’ என்று சொல்லிப் போகிறார்கள். தொடர்ந்து, ஒரு பெண்கள் கூட்டம். அமிதாபைக் கேட்காமலே காட்பரீஸ் எடுத்துச் சாப்பிட்டுவிட்டு ``பப்பு பணம் தருவான்’’ என்று சொல்லிப் போகிறார்கள். பப்பு ப்ளஸ் 2 பரீட்சை தேறிவிட்டான் என்று இந்தக் கொண்டாட்டம்.

பப்பு என்னும் சிறுவனைச் சந்திக்க நம் எதிர்பார்ப்பு எகிறுகிறது. பப்பு தோன்றுகிறார். வழுக்கைத் தலை. சுமார் 40 வயது! ஆமாம், அவர்தான் ப்ளஸ் 2 பாஸ் பண்ணியிருக்கிறார். அமிதாப் பப்புவிடம் டெயரி மில்க் சாக்லெட் தருகிறார். சொல்கிறார், “பப்பு பணம் தருவான்’’. இதே பாணியில், அமிதாபைக் கிராமத்து மனிதராகக் காட்டும் பல விளம்பரங்கள்.

இப்போது வருகிறது, “ஸ்வீட் எடு கொண்டாடு’’ என்னும் விளம்பரங்கள். வாழ்க்கையின் வெற்றி நேரங்களிலெல்லாம், அந்தக் கொண்டாட்டத்தின் அடையாளமாகக் காட்பரீஸ் சாக்லெட் முன் நிறுத்தப்படுகிறது.

உதாரணமாக, கோன் பனேகா மஹா குரோர்பதி இப்போது, ஆகஸ்ட் மாதம் ஸோனி சானலில் ஆரம்பித்திருக்கிறது. ஒவ்வொருவர் ஜெயிக்கும் போதும், அவர் காட்பரீஸ் சாக்லெட் டோடு கொண்டாடுவதைக் காட்டு கிறார்கள்.

ஒவ்வொரு விளம்பரத்தையும் குட்டிக் கதையாகச் சொன்ன முறை, இழையோடும் நகைச்சுவை, சொல்ல வந்ததை “நச்” என்று மனங்களில் பதியவைக்கும் பாணி - காட்பரீஸ் சாக்லெட் “ஸ்வீட்”டாக மக்கள் மனங்களில் பொசிஷன் பெறத் தொடங்கிவிட்டது.

slvmoorthy@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x