Published : 05 Feb 2014 09:30 AM
Last Updated : 05 Feb 2014 09:30 AM
குறைந்தபட்ச விலை நிர்ணயத்தால் ஸ்பெக்ட்ரம் ஏலம் மூலம் அரசுக்கு ரூ. 40 ஆயிரம் கோடி வருமானம் கிடைத்துள்ளதாக மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல் கூறினார்.
ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை டெண்டர் ஏலம் திங்கள்கிழமை (பிப்ரவரி 3) தொடங்கியது. மொத்தம் 22 வட்டாரங்களுக்கு 1800 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றை ஏலம் நடைபெற்றது. அத்துடன் 3 வட்டாரங்களில் 900 மெகாஹெர்ட்ஸ் பேண்ட் ஏலமும் நடைபெற்றது. முதல் நாளன்று ஏல விற்பனை மூலம் அரசுக்கு ரூ. 42 ஆயிரம் கோடி கிடைத்துள்ளது.
முதல் நாளன்று 7 சுற்று ஏலம் முடிவடைந்தது. மும்பை வட்டாரத்தில் முந்தைய விலையைக் காட்டிலும் கூடுதலாக 44 சதவீதம் விலையில் ஏலம் கேட்கப்பட்டது. கோல்கத்தாவில் ஏல விலை முன்பைவிட 38 சதவீதம் அதிகம் விலை போனதில் ரூ. 171 கோடி கிடைத்தது. இந்தியா முழுமைக்கும் (பான் இந்தியா) அலைக்கற்றை விலை ரூ. 1,777 கோடிக்கு ஒரு மெகாஹெர்ட்ஸ் விற்பனையானது. அலைக்கற்றை விலையில் குறைந்தபட்ச விலையை நிர்ணயிப்பதில் மிகவும் உறுதியான முடிவை எடுத்ததால் அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளதாக கபில் சிபல் கூறினார்.
பான் இந்தியா சேவைக்கு குறைந்தபட்ச விலையாக ரூ. 1,765 கோடி நிர்ணயிக்கப்டப்டது. இது 2013-ம் ஆண்டு மார்ச் மாதம் நிர்ணயிக்கப்பட்ட விலையைக் காட்டிலும் 26 சதவீதம் குறைவாகும். இந்த முறை ரூ. 1,777 கோடிக்கு ஏலம் கேட்கப்பட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட விலையைக் காட்டிலும் கூடுதலாக விலை போனதாக அவர் கூறினார்.
தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) 5 மெகாஹெர்ட்ஸுக்கு ரூ. 18 ஆயிரம் கோடி கட்டணம் நிர்ணயிக்கலாம் என்று
2012-ல் பரிந்துரைத்திருந்ததை சிபல் சுட்டிக் காட்டினார். இதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் 3-ஜி அலைக்கற்றை ஏலம் நடைபெறும் என்றும் அவர் கூறினார்.
அலைக்கற்றை விலை நிர்ணயம் செய்வதில் சந்தை நிலவரத்திற்கேற்ப தீர்மானிக்க வேண்டும். இல்லையெனில் எந்த நிறுவனமும் ஏலம் கேட்க முன்வராது. அரசு நிர்ணயித்த விலையை ஊடகங்கள் பலவும் விமர்சித்தன. விலை குறைவாக நிர்ணயிப்பதால் அரசுக்கு இழப்பு ஏற்படும் என்று கூறின என்றும் கபில் சிபல் சுட்டிக் காட்டினார்.
தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி நாடாளுமன்றத்தில் 2010-ம் ஆண்டு தாக்கல் செய்த அறிக்கையில் அரசுக்கு 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஏல ஒதுக்கீடு மூலம் ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து எழுந்த சர்ச்சை காரணமாக 122 நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட லைசென்ஸ்கள் ரத்து செய்யப்பட்டன.
இப்போது நடைபெறும் அலைக்கற்றை ஏலத்தில் பார்தி ஏர்டெல், வோடபோன், ரிலையன்ஸ் ஜிஜோ, இன்போகாம் உள்ளிட்ட 8 நிறுவனங்கள் போட்டியிடுகின்றன.
திங்கள்கிழமை நடைபெற்ற ஏலத்தின் மூலம் அரசுக்கு ரூ. 39,200 கோடி வருமானம் தொலைத்தொடர்புத்துறைச் செயலர் எம்எப் ஃபரூக்கி தெரிவித் துள்ளார். இந்த ஏலத்தின் மூலம் கிடைத்துள்ள வருவாயை வைத்துப் பார்க்கும்போது அடிப்படை விலை நிர்ணயம் சரியாக செய்துள்ளோம் என்றே நினைக்கத் தோன்றுவதாக தொலைத் தொடர்புத் துறைச் செயலர் ராகுல் குல்லார் தெரிவித்தார்.
இந்த ஏலம் மிகுந்த மன நிறைவையும் மகிழ்ச்சியையும் தருகிறது. தொலைத் தொடர்புத் துறை மிகவும் இக்கட்டான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள சூழ்நிலையில் இந்த வருமானம் புதிய சூழலை நிச்சயம் ஏற்படுத்தும். தொலைத் தொடர்புத் துறை லாபகரமானதாக மாறும் என்று சிபல் கூறினார்.
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 9-வது சுற்று ஏலத்தில் 900 மெகா ஹெர்ட்ஸ் பேண்ட் ஏலம் டெல்லி, மும்பைக்கு அதிக கிராக்கி இருந்தது. குஜராத், மகாராஷ்டிரம் ஆகிய மாநலங்களில் 2-ஜி அலைக்கற்றை ஏலத்துக்கு கிராக்கி இருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT