Published : 31 Oct 2013 04:48 PM
Last Updated : 31 Oct 2013 04:48 PM
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை(ஜி.டி.பி.) ரூபாய் மதிப்பில் கூறும்போது சந்தை விலையை பயன்படுத்த வேண்டியுள்ளது. உதாரணமாக நேற்று நாட்டில் ஒரு பேருந்து உற்பத்தியானது என்று வைத்துக்கொள்வோம் நேற்று ஒரு பேருந்தின் விலை ரூ.1000 என்றால், நாட்டின் நேற்றைய ஜிடிபி ரூ1,000. இன்று நாட்டில் இரண்டு பேருந்துகள் உற்பத்தி செய்யப்பட்டன.
ஆனால் இன்று ஒரு பேருந்தின் விலை ரூ1500 என்றால் இன்றைய ஜிடிபி (2 X 1500 =3000) ரூ.3,000. இதில் நேற்றைய ஜிடிபி நேற்றைய விலையிலும், இன்றைய ஜிடிபி இன்றைய விலையிலும் கணக்கிடப்பட்டதை நினைவில் வைத்துகொள்க. இவ்வாறு அன்றைய விலையில் ஜிடிபி-யை கணக்கிட்டால் அது “பெயரளவு ஜிடிபி” (Nominal GDP) என்றும் அல்லது “அன்றைய விலையில் ஜிடிபி” (GDP at Current Prices) என்றும் கூறுவர்.
இப்போது நேற்றைவிட இன்று ‘பெயரளவு ஜிடிபி’ ரூ 3,000 உயர்ந்திருக்கிறது. இதற்கு என்ன காரணம்? உண்மையில் உற்பத்தி இரண்டு மடங்காகியுள்ளது, ஆனால், பேருந்தின் விலை 50% உயர்ந்ததினால் ‘பெயரளவு ஜிடிபி’ மூன்று மடங்கு உயர்ந்தது போல் தெரிகிறது.
எனவே, “பெயரளவு ஜிடிபி” உயர்வின் ஒரு பகுதி உற்பத்தி உயர்வினாலும், மற்றொரு பகுதி விலை உயர்வினாலும் என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.
உற்பத்தி உயர்வால் ஜிடிபி உயர்ந்தால் மட்டுமே பொருளாதாரம் வளர்ந்ததாக ஒப்புக்கொள்ளமுடியும். எனவே, ‘பெயரளவு ஜிடிபி’ உயர்விலிருந்து விலை உயர்வை பிரித்து எடுக்க வேண்டும். இதனை எவ்வாறு செய்வது? ஒரு வருட உற்பத்தியை பழைய வருட விலையில் பெருக்கினால் இதனை பெறமுடியும்.
மேலே உள்ள உதாரணத்தில், பேருந்தின் நேற்றைய விலை ரூ1,000. இதனுடன் இன்றைய உற்பத்தியான இரண்டு பேருந்தை பெருக்கினால் நமது ஜிடிபி ரூ 2,000 மட்டுமே.
இவ்வாறு பெறபட்ட ஜிடிபி-யை ‘உண்மை ஜிடிபி’ (Real GDP) அல்லது ‘நிலையான விலையில் ஜிடிபி’ (GDP at Constant Prices) என்பர். இங்கு ‘உண்மை ஜிடிபி’ உயர்வு இரண்டு மடங்காகியுள்ளது அதே போல் உற்பத்தியும் இரண்டு மடங்காகியுள்ளதை காண்க. ஆகவே, உற்பத்தி உயர்வை மட்டும் கணக்கிட நமக்கு ‘உண்மை ஜிடிபி’ தேவை.
எல்லா பொருளியல் விவாதங்களிலும் ‘உண்மை ஜிடிபி’ உயர்வை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்வோம். இதன் அடிப்படையில் மட்டுமே ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் கணக்கிடப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT