Published : 11 Oct 2014 10:44 AM
Last Updated : 11 Oct 2014 10:44 AM
பங்குச் சந்தையில் பட்டியலிட்டுள்ள நிறுவனங்கள் வெறும் சம்பிரதாயத்துக்காக பங்குதாரர் கூட்டங்களை நடத்தக் கூடாது என்று பங்கு பரிவர்த்தனை வாரியத்தின் (செபி) தலைவர் யு.கே. சின்ஹா அறிவுறுத்தியுள்ளார். பங்குதாரர்களின் கூட்டங்கள் வெறும் தேநீர் மற்றும் சமோசா சாப்பிடும் கூட்டமாக இருந்துவிடக் கூடாது என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.
நிறுவன முதலீட்டாளர்கள், பங்குச் சந்தையின் கடுமையான விதிமுறைகள் மற்றும் செபி-யின் மேம்படுத்தப்பட்ட கண்காணிப்பு முறைகள் ஆகியன காரணமாக இப்போது பங்குதாரர்கள் கூட்டத்தில் பெருமளவு மாற்றங்கள் நிகழ்ந்துவருகின்றன. பொறுப்புகள் இல்லாத இயக்குநர் குழு உறுப்பினர்களும் சிறப்பாகச் செயல்பட வேண்டும். இவர்கள் செபி-யின் விதிமுறைகளை அமல்படுத்தும் நிர்வாகிகளாக செயல்பட வேண்டும். வர்த்தகம் தொடர்பான விஷயங்களை இயக்குநர் குழு விவாதிக்கும்போது பொறுப்புகள் இல்லாத இயக்குநர்கள் விதிமுறைகள் கடைபிடிக்கும் விஷயத்தில் உறுதியுடன் இருக்க வேண்டும்.
பங்குதாரர் மற்றும் இயக்குநர் குழு கூட்டங்களில்தான் முக்கியமான மாற்றங்களைக் கொண்டு வர முடியும். முக்கியமான மாற்றங்களைக் கொண்டு வருவது மற்றும் உயர் அதிகாரிகளுக்கான ஊதிய உயர்வு தொடர்பான பிரச்சினைகளும் இங்குதான் விவாதிக்கப்படும். இப்போதெல்லாம் ஊதிய உயர்வு பங்குதாரர்கள் கூட்டத்தில் நிராகரிக்கப்படுகிறது. இந்த சூழல் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்டதில்லை.
பெரும்பாலானோர் இயக்குநர் குழு கூட்டங்களுக்குச் செல்வதேயில்லை. இருப்பினும் அவர்களது பரிந்துரைகள் ஏற்கப்படும். பொதுவாக இயக்குநர் குழு கூட்டம் என்பது வெறும் தேநீர் மற்றும் சமோசாவுக்காக சம்பிரதாய அளவிலேயே நடைபெற்று வந்தது. ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது. இப்போது நிறுவன முதலீட்டாளர்கள் சிறப்பாக செயல்படுகின்றனர். செபி விதிமுறைகளை போல பங்குச் சந்தை விதிமுறைகள் பெரும்பாலான நாடுகளில் கட்டாயமாக பின்பற்றப்படுகின்றன.
வெளிநாடுகளில் பங்குச் சந்தைகளில் நடைபெறும் முறைகேடுகளைக் கண்காணிக்க அதிகம் செலவிடப்படுகிறது. ஆனால் இந்தியாவில் விதிமுறைகள் மிகக் கடுமையாக உள்ளதோடு உலகிலேயே மிகச் சிறப்பானதாக உள்ளது என்று சின்ஹா குறிப்பிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT