Published : 02 Oct 2014 12:37 PM
Last Updated : 02 Oct 2014 12:37 PM
ஆன்லைன் மூலமான பண பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்க பஞ்சாப் நேஷனல் வங்கி (பிஎன்பி) முடிவு செய்துள்ளது. பொதுவாக வங்கிகளில் மின்னணு முறையிலான பண பரிவர்த்தனை தேசிய மின்னணு நிதி மாற்றல் (நெஃப்ட்) மூலமாக மேற்கொள்ளப்படுகிறது.
ஒரு வங்கிக் கணக்கிலிருந்து மற்றொரு வங்கிக் கணக்குக்கு ரூ. 1 லட்சம் வரை பண பரிமாற்றம் செய்வதற்கு எவ்வித கட்டணமும் கிடையாது. ரூ. 1 லட்சத்துக்கு மேற்பட்ட மேலான பரிவர்த்தனை ஒவ்வொன்றுக்கும் ரூ. 5 கட்டணமாக வசூலிக்கப்படும்.
ஆனால் இனி நெஃப்ட் மூலமாக மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு பண பரிவர்த்தனைக்கும் புதன்கிழமை முதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று வங்கி அறிவித்துள்ளது.
இதன்படி ரூ. 10 ஆயிரம் வரையிலான பரிவர்த்தனை ஒவ்வொன்றுக்கும் ரூ. 3 கட்டணமாக வசூலிக்கப்படும். ரூ. 10,001 முதல் ரூ. 1 லட்சம் வரையிலான பரிவர்த்தனைக்கு ரூ. 6 கட்டணமாக வசூலிக்கப்படும். ரூ. 1 லட்சத்துக்கு மேலான தொகைக்கு சேவைக் கட்டணம் உள்பட ரூ. 17 கட்டணமாக வசூலிக்கப்படும் என்று பஞ்சாப் நேஷனல் வங்கியின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏடிஎம் கம் டெபிட் கார்டுகளுக்கான இஎம்வி சிப்புகள் அளிப்பதற்கு பிஎன்பி கட்டணம் வசூலிக்கிறது. மேலும் டெபிட் கார்ட் உபயோகத்துக்கு சங்கேத எண் (பின் நெம்பர்) பயன்படுத்துவதை ரிசர்வ் வங்கி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் கட்டாயமாக்கியுள்ளது. கார்டு உரிமையாளர் அல்லாதவர்கள் போலியாக பயன்படுத்துவதைத் தடுப்பதற்காக இந்த முறை கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்காக இஎம்பி சிப் பெறுவதற்கு வாடிக்கையாளர்களிடம் ரூ. 100 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஏடிஎம் கம் டெபிட் கார்டில் புகைப்படம் இடம்பெற வேண்டுமெனில் அதற்கு கூடுதலாக 25 சதவீத கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இது தவிர பெட்ரோல் நிரப்பு நிலையங்கள், உணவு விடுதிகள், ரயில்வே முன்பதிவு உள்ளிட்டவற்றில் பயன்படுத்துவதற்கு ஒவ்வொரு முறையும் ரூ. 10 கட்டணமாக வசூலிக்கப்படுவதாக இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT