Published : 27 Dec 2013 12:00 AM
Last Updated : 27 Dec 2013 12:00 AM
நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் 11 பொதுத்துறை நிறுவனங்களுக்கு 116 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கி இருக்கிறது. இதற்கான முடிவை பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு வியாழக்கிழமை எடுத்தது. இந்த தொகையை பணியாளர்களின் வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை, ஒய்வுகால நிதி, சம்பளம் ( ஏப்ரல் 1 2013 முதல் ஆகஸ்ட் 31 2013 வரை) மற்றும் போனஸ் போன்ற தொகைகளை கொடுப்பதற்காக மத்திய அரசு ஒதுக்கி இருக்கிறது.
ஹிந்துஸ்தான் கேபிள்ஸ், ஹெச்.எம்.டி. மெஷன் டூல்ஸ், ஹெச்.எம்.டி. (கைக்கடிகாரம்), ஹெச்.எம்.டி. (சினார் கைக்கடிகாரம்), நாகாலாந்து பல்ப் அண்ட் பேப்பர், திரிவேணி ஸ்டரக்சர்ஸ், துங்கபத்திரா ஸ்டீல் புராடக்ட்ஸ், நேபா, ஹெச்.எம்.டி. பேரிங்ஸ், ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் மற்றும் டயர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா ஆகிய 11 நிறுவனங்களுக்கு மத்திய அரசின் நிதி கிடைக்கும்.
அதே சமயத்தில், ஹிந்துஸ்தான் கேபிள்ஸ், திரிவேணி ஸ்டரக்சர்ஸ், ஹெச்.எம்.டி. (கைக்கடிகாரம்), ஹெச்.எம்.டி. (சினார் கைக்கடிகாரம்), ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ், ஹெச்.எம்.டி. மெஷன் டூல்ஸ் ஆகிய நிறுவனங்களை மூடுவது குறித்தோ அல்லது மறு சீரமைப்பு செய்வது குறித்தோ இன்னும் இறுதி முடிவு எடுக்கப்பட வில்லை.
மேலும், நேபா மற்றும் நாகாலாந்து பல்ப் அண்ட் பேப்பர் நிறுவனங்களின் சீரமைப்பு திட்டத்துக்கு சமீபத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஆனால் ஹெச்.எம்.டி. பேரிங்க்ஸ், துங்கபத்திரா ஸ்டீல் ஆகிய நிறுவனங்களின் மறு சீரமைப்பு திட்டம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. டயர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவின் பங்கு விலகல் இன்னும் முழுமையாக செயல்பாட்டுக்கு வரவில்லை.
நிலுவையில் இருக்கும் தொகையை கொடுக்கும் பட்சத்தில் ஊழியர்கள் இன்னும் சிறப்பாக செயல்படுவார்கள் என்றும் திட்டமிட்ட இலக்கை அடைய முடியும் என்று நிறுவனங்கள் தெரிவித்திருக்கின்றன.
ஆக்ஸிஸ் வங்கி
ஆக்ஸிஸ் வங்கியில் அன்னிய முதலீட்டை 62 சதவீதம் வரை உயர்த்திக்கொள்ள பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் 7,250 கோடி ரூபாய் முதலீடு வரும். இதற்கு முன்பு இந்த வங்கியில் அன்னிய முதலீடு 49 சதவீதம் வரை அனுமதிக்கப்பட்டது. அன்னிய முதலீட்டு வரம்பை அதிகரித்தன் மூலம் இந்த வங்கி வெளிநாட்டு வங்கி என்று மாறிவிடும். இந்த வங்கியின் கீழே இருக்கும் 7 துணை நிறுவனங்களில் இதன் பிறகு செய்யப்படும் முதலீடு நேரடி அன்னிய முதலீட்டு கொள்கையின்படிதான் இருக்க முடியும் என்று தகவல் அறிந்த வட்டாரஙக்ள் தெரிவிக்கின்றன.
ஆக்ஸிஸ் கேபிட்டல், ஆக்ஸிஸ் ஃபைனான்ஸ், ஆக்ஸிஸ் பிரைவேட் ஈக்விட்டி, ஆக்ஸிஸ் டிரஸ்டி சர்வீசஸ், ஆக்ஸிஸ் அசெட் மேனேஜ்மென்ட் கம்பெனி, ஆக்ஸிஸ் மியூச்சுவல் ஃபண்ட் டிரஸ்டி மற்றும் ஆக்ஸிஸ் யூ.கே ஆகிய ஏழு துணை நிறுவனங்கள் இருக்கின்றன. செப்டம்பர் காலாண்டு முடிவில் ஆக்ஸிஸ் வங்கியில் அன்னிய நிறுவன முதலீட்டாளர்களின் பங்கு 43.37 சதவீதமாக இருந்தது. எல்.ஐ.சி., ஜெனரல் இன்ஷூரன்ஸ் கார்ப்பரேஷன், நியூ இந்தியா அஷ்யூரென்ஸ், நேஷனல் இன்ஷூரன்ஸ் கம்பெனி மற்றும் யூ.டி.ஐ. ஆகிய நிறுவனங்கள்தான் ஆக்ஸிஸ் வங்கியின் நிறுவனர்கள் ஆவார்கள்.
நெடுஞ்சாலைகளுக்கு ரூ.1,912 கோடி
பிஹார் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் நெடுஞ்சாலைகள் விரிவாக்கப்பணிகளுக்காக 1,912 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. இதற்கான ஒப்புதலை பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்தது. இதன்படி குஜராத் மாநிலத்துக்கு 1,408 கோடி ரூபாயும், பிஹார் மாநிலத்துக்கு 503 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும் 43,000 எம்.டி.என்.எல். தொழிலாளர்களுக்கு ஓய்வூதியத் தொகை வழங்குவதற்கு 500 கோடி ரூபாயும் மத்திய அரசு ஒதுக்கி உள்ளது..
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT