Last Updated : 06 Oct, 2014 11:52 AM

 

Published : 06 Oct 2014 11:52 AM
Last Updated : 06 Oct 2014 11:52 AM

ஆன்லைன் மூலம் இபிஎப் கணக்குகளை அறியும் வசதி: அக்டோபர் 16-ம் தேதி அறிமுகம்

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியை நிர்வகிக்கும் இபிஎப் நிறுவனம் தனது சந்தாதாரர்கள் தங்களது கணக்கு நிலவரங்களை ஆன்லைன் மூலம் அறிந்து கொள்ளும் வசதியை இம்மாதம் 16-ம் தேதி முதல் நடைமுறைப்படுத்துகிறது. இதன் மூலம் 4 கோடி சந்தாதாரர்கள் பயனடைவர்.

சந்தாதாரர்களுக்கு அளிக்கப்பட்ட சர்வதேச கணக்கு எண் (யுஏஎன்) மூலம் இந்த வசதியைப் பெற முடியும். ஊழியர்கள் தங்களுடைய நிறுவனங்களது பங்களிப்பும், தங்களது ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்ட தொகையும் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளதா என்பதை அறிந்து கொள்ள முடியும்.

இதற்கான பிரத்யேக இணையதள வசதியை பிரதமர் நரேந்திர மோடி அக்டோபர் 16-ம் தேதி தொடங்கி வைக்கிறார்.

இதன் மூலம் யுஏஎன் கணக்கு எண் கொண்ட வாடிக்கை யாளர்கள் தங்களது கணக்கு விவரங்களை ஆன்லைன் மூலம் அறிந்து கொள்ள முடியும் என்று இத்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஒரு நிறுவனத்திலிருந்து மற் றொரு நிறுவனத்துக்கு மாறினா லும், இதே எண்ணில் தங்களது கணக்கைத் தொடரலாம். அதற்கு இந்த யுஏஎன் வழிவகுத்துள்ளது.

பிஎப் நிறுவனம் மேலும் பல மேம்பட்ட சேவைகளை அளிக்க உள்ளது. காகிதம் இல்லாத வகையில் பிஎப் கணக்குகளை அறிவது மற்றும் ஓய்வூதிய தொகையை அளிப்பது உள்ளிட்ட சேவைகளும் அளிக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித் தனர்.

இதன்படி 58 வயதை எட்டிய ஊழியர்கள் ஓய்வூதிய தொகையை எவ்வித சிரமமும் இன்றி பெறலாம்.

பிஎப் நிறுவனம் கடந்த ஜூலை மாதம் வரை 4 கோடி சந்தாதாரர்களுக்கு இத்தகைய யுஏஎன் அளித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இபிஎப் கணக்கு வைத்துள்ள ஊழியர்களில் 2.04 கோடி பேருடைய வங்கிக் கணக்கு விவரமும் 92.94 பேரின் நிரந்தர கணக்கு எண் (பான்) விவரமும், ஆதார் அட்டை மூலம் 35.4 லட்சம் ஊழியர்களது விவரமும் திரட்டப்பட்டுள்ளதாக இபிஎப் அதிகாரிகள் தெரிவித்தனர்.

யுஏஎன் அளிப்பதற்கு ஊழியர்களின் வங்கிக் கணக்கு விவரம் மிகவும் அவசியம் என்றும் அப்போதுதான் பணப் பரிவர்த்தனைகள் அதாவது பிஎப் கணக்கு முடிப்புத் தொகை, ஓய்வூதியம் உள்ளிட்டவற்றை குறைவான நேரத்தில் வழங்க ஏதுவாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

ஊழியர்களின் வங்கிக் கணக்கு எண், வங்கியின் ஐஎப்எஸ்சி குறியீடு, வங்கிக் கிளை விவரம் உள்ளிட்டவற்றை கட்டாயம் அளிக்குமாறு பிஎப் நிறுவனம் சமீபத்தில் அனைத்து நிறுவனங் களையும் கேட்டுக் கொண்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x