Published : 08 Jan 2014 09:23 AM
Last Updated : 08 Jan 2014 09:23 AM

ரூ.40,000 கோடி இலக்கை எட்டுவோம்: பொருளாதார விவகாரங்கள் துறை செயலர் அரவிந்த் மாயாராம் நம்பிக்கை

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், இன்ஜினீயர்ஸ் இந்தியா லிமிடெட் ஆகிய பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் இம்மாதம் வெளியிடப்படும் என்றும் இதன் மூலம் அரசு நிர்ணயம் செய்த ரூ. 40,000 கோடியை திரட்ட முடியும் என்று பொருளாதார விவகாரங்கள்துறை செயலர் அர்விந்த் மாயாராம் தெரிவித்தார்.

அரசு பங்கு விலக்கல் மூலம் நடப்பு நிதி ஆண்டில் ரூ. 40 ஆயிரம் கோடியைத் திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கை எட்டுவதற்காக அரசு பங்குகளை வெளியிடும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. பிப்ரவரி மாதத்தில் பிஹெச்இஎல் பங்குகள் வெளியிடப்படும் என்று அவர் மேலும் கூறினார்.

இம்மூன்று நிறுவனங்களின் பங்குகள் வெளியிடுவதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட இலக்கான ரூ. 40 ஆயிரம் கோடியை ஓரளவு எட்ட முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

நடப்பு நிதி ஆண்டில் (2013-14) பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை மூலம் ரூ. 40 ஆயிரம் கோடி திரட்டப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை 7 நிறுவனங்களின் பங்கு விற்பனை மூலம் ரூ. 3,000 கோடி மட்டுமே திரட்டப்பட்டுள்ளது. பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா, ஹிந்துஸ்தான் காப்பர், நேஷனல் பெர்டிலைசர்ஸ், எம்எம்டிசி ஆகிய நிறுவனங்களின் பங்கு விற்பனை மூலம் இத்தொகை திரட்டப்பட்டது.

ஏற்கெனவே திட்டமிட்டபடி ஐஓசி நிறுவனத்தில் அரசுக்குள்ள பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் ரூ. 5 ஆயிரம் கோடி திரட்ட முடியும். இதேபோல இன்ஜினீயர்ஸ் இந்தியா லிமிடெட் பங்கு விற்பனை மூலம் ரூ. 500 கோடி திரட்ட முடியும். இதேபோல ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்கல் லிமிடெட் (ஹெச்ஏஎல்) நிறுவனத்தின் 10 சதவீத பங்கு விற்பனை மூலம் ரூ. 3 ஆயிரம் கோடியும், பிஹெச்இஎல்-லின் 5 சதவீத பங்கு விற்பனை மூலம் ரூ. 2,000 கோடியையும் திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஐஓசி மற்றும் பிஹெச்இஎல் ஆகிய நிறுவனங்களின் பங்கு விற்பனை தாமதமானதற்கு நிதி அமைச்சகத்துக்கும், நிர்வாகத்துக்கும் இடையே பங்கு விலையை நிர்ணயிப்பதில் உடன்பாடு எட்டப்படவில்லை. இப்போது இப்பிரச்சினையில் முடிவு எட்டப்பட்டதைத் தொடர்ந்து இம்மாதத்தில் பங்குகள் விற்பனைக்கு வர உள்ளன.

நிறுவனங்களின் பங்கு விலைகளில் அதிகபட்ச விலையை நிர்ணயிப்பதற்கு எந்த அளவுகோலும் இல்லாத நிலை உள்ளது. மேலும், பங்குச் சந்தையில் அவ்வப்போது காணப்படும் ஸ்திரமற்ற நிலையும் காணப்பட்டது. பங்குச் சந்தை சரிவில் இருக்கும் போது, பங்குகளை விற்பதற்கு இது சரியான நேரமாக இருக்கும் என்று நினைக்கவில்லை, அதே போல சிறப்பாக இருக்கும்போது பங்குகளின் விலை அதிகமாக இருக்கும். அப்போதைய சூழலில் யாரும் முதலீடு செய்ய வரமாட்டார்கள் என்று மாயாராம் குறிப்பிட்டார்.

பரிவர்த்தனை வர்த்தக நிதியம் (இடிஎப்) மூலம் பொதுத் துறை நிறுவன பங்குகள் வெளியிட இருக்கிறோம் என்றும் இத்தகைய இடிஎப் மூலம் ரூ. 3,000 கோடி திரட்டப்படும் என்றார் மாயாராம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x