Published : 18 Sep 2016 10:35 AM
Last Updated : 18 Sep 2016 10:35 AM
சூரிய மின்னுற்பத்திக்கான செல்கள் தயாரிப்பு பிரச்சினையில் உலக வர்த்தக மையத்திடம் செய்த மேல்முறையீட்டில் இந்தியாவுக்கு பாதகமான தீர்ப்பு வந்துள்ளது.
சூரிய மின்னாற்றல் திட்டங்களில் பயன்படுத்தப்படும் கருவிகள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டால் அதற்கு மானியம் அளிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. அத்துடன் இத்திட்டத்தில் உள்நாட் டில் தயாரிக்கப்படும் பாகங்களை கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என்பதையும் அரசு விதியாகக் கொண்டு வந்தது.
சூரிய மின்னுற்பத்திக்காக உள் நாட்டில் தயாரிக்கும் செல்கள் மற்றும் சூரிய பலகைகளை பயன்படுத்த வேண்டும் என்ற அரசு உத்தரவு செல்லாது என்று அறிவிக்குமாறு உலக வர்த்தக அமைப்பிடம் அமெரிக்கா புகார் அளித்தது. அதை விசாரித்த டபிள்யூடிஓ தடை விதித்தது. அமெரிக்கா அளித்த புகாரை ஏற்ற உலக வர்த்தக நிறுவனம், சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் தயாரிப்பதற்கான சாதனங்களைப் பயன்படுத்தும் விஷயத்தில் இந்தியத் தயாரிப்புகளுக்கும் வெளிநாட்டுத் தயாரிப்புகளுக்கும் இடையில் வித்தியாசம் பார்க்கக் கூடாது என்று தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து இந்தியா உலக வர்த்தக மையத்திடம் மேல் முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டில் தற்போது இந்தியாவுக்கு எதிராக தீர்ப்பு வந்துள்ளது.
இந்த தீர்ப்பு அமெரிக்க சூரிய செல்கள் தயாரிப்பாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி. மேலும் பருவநிலை மாற்றத்தை மேலும் முன்னெடுத்துச் செல்லக்கூடிய வகையில் இந்த தீர்ப்பு அமைந்துள்ளது என்று அமெரிக்க வர்த்தக பிரதிநிதி மைக்கேல் புரோமேன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்தியா விதித்த புதிய விதிகளால் அமெரிக்காவின் சூரிய செல்கள் ஏற்றுமதி 90 சதவீதம் குறைந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த மேல்முறையீட்டு தீர்ப்பு குறித்து இந்திய அதிகாரிகள் எந்தவொரு கருத்தையும் உடனடியாக தெரிவிக்கவில்லை.
தேசிய சூரிய மின்னாற்றல் துறை உதிரிபாகங்கள் இறக்கு மதிக்கு தடைவிதிக்க அனுமதி கோர முடியாது என்று நீதிபதிகள் கூறியுள்ளனர். மேலும் பருவநிலை மாற்றத்திற்கு எதிராக எடுத்துவைக் கப்படும் வாதமும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறியுள்ளனர்.
உலக வர்த்தக மையத்தின் விதிப்படி ஒரு நாடு இறக்குமதியை பாதிக்கும் வகையிலும் உள்நாட்டு தயாரிப்பாளர்களை ஊக்குவிக்கும் வகையிலும் செயல்படக்கூடாது. ஆனால் கடந்த ஐந்து வருடமாக பல்வேறு நாடுகள் தங்களது தயாரிப் பாளர்களை ஊக்கப்படுத்தி வரு வது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT