Published : 30 Oct 2014 10:25 AM
Last Updated : 30 Oct 2014 10:25 AM
பொதுத்துறை வங்கிகளின் செயல்பாட்டில் எவ்வித மாற்றமும் தென்படவில்லை. இதனால் வாராக்கடன் வசூலில் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம் எதுவும் இருக்காது என்று சர்வதேச தரச்சான்று நிறுவனம் மூடி’ஸ் கருத்து தெரிவித்துள்ளது.
நிறுவனங்களின் செயல்பாடுகளில் மாற்றம் தென்படவில்லை. மேலும் வங்கிகளின் செயல்பாடுகளிலும் மாற்றம் இல்லை. இதனால் அர்த்தமுள்ள விளைவுகள் இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது என்றும் அறிக்கையில் தெரிவித்துள்ளது. நவம்பர் 2011-ம் ஆண்டு வெளியிட்ட கருத்துக் கணிப்பில் வங்கிகளின் செயல்பாடு எந்த அளவில் இருந்ததோ அதே நிலையில்தான் உள்ளது. இதில் எந்த மாற்றமோ, முன்னேற்றமோ ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரிலிருந்து இந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் இந்திய நிறுவனங்களின் செயல்பாடுகள் மாறவில்லை. கடனை மீட்பதற்கு வங்கிகளின் நடவடிக்கை எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. இத்தகைய சூழலில் பொருளாதார வளர்ச்சியை எப்படி எதிர்பார்க்க முடியும் என்றும் அந்த அறிக்கை கேள்வியெழுப்பியுள்ளது.
வங்கிகளின் வாராக்கடன் அளவு சராசரியாக தொடர்ந்து 4.5 சதவீத அளவில் உள்ளது. இதனால் வாராக்கடனுக்கான ஒதுக்கீடு அதிகரிப்பதோடு நிதி நிலையை ஸ்திரப்படுத்த மூலதனம் தேவைப்படுகின்றது என்றும் குறிப்பிட்டுள்ளது.
வங்கிகளின் செயல்பாடு மைனஸ் நிலையில் இருப்பதற்கு இந்தியாவில் 70 சதவீதம் பொதுத்துறை வங்கிகளின் மூலமாக நடைபெறுகிறது. வங்கிகளின் வாராக் கடன் அளவு அதிகரித்துள்ளது. மறு கடன் ஒதுக்கீடு மூலமாக வங்கிகளின் லாபம் கணிசமாகக் குறைந்துள்ளது. மேலும் தனியார் வங்கிகளுடன் ஒப்பிடுகையில் பொதுத்துறை வங்கிகளின் லாபம் குறைந்துள்ளதை அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.
இந்த நிலையில் பொதுத்துறை வங்கிகளில் மாறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தனியார் துறை வங்கிகளின் செயல்பாடு சிறப்பாக முன்னேறி வருகிறது. நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் தனியார் வங்கிகளின் வளர்ச்சி 5.7 சதவீதமாக அதிகரித்துள்ளது. முன்பு இது 5 சதவீதத்துக்கும் கீழாக இருந்ததையும் அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.
வங்கிகளின் வளர்ச்சி மதிப்பீடானது அவற்றின் செயல்பாடுகளின் சுழற்சி அடிப்படையில் மதிப்பிடப்படுகிறது. வங்கி சீர்திருத்தம் உள்ளிட்ட கொள்கை மாற்றங்கள் அடிப்படையில் மதிப்பிடப்படவில்லை என்றும் அறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது. நடப்பு நிதி ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீத அளவுக்கு இருக்கும் என்று இது அடுத்த நிதி ஆண்டில் (2016) 5.6 சதவீத அளவுக்கு உயரும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
வலுவான பொருளாதார மீட்சி, வங்கி செயல்பாடுகளில் மாற்றம் ஆகியவை ஏற்பட்டாலொழிய இந்தியாவின் வளர்ச்சி விகிதத்தில் பெரும் மாற்றம் இருக்காது என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருப்பு பணத்தை மீட்பதன் மூலம் 3,000 கோடி டாலர் கிடைக்கும்
வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்திருக்கும் கருப்பு பணத்தை மீட்கும் பட்சத்தில் 3000 முதல் 3500 கோடி டாலர் வரை இந்தியாவுக்கு அந்நிய செலாவணி கிடைக்கும் என்று பேங்க் ஆப் அமெரிக்கா - மெரில் லிஞ்ச் நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது. இருந்தாலும் இந்த தொகை உடனடியாக கிடைக்காது என்றும், சட்ட சிக்கல்களை சரி செய்த பிறகு இவை கிடைக்கக் கூடும் என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
1998 முதல் 2012-ம் ஆண்டு வரை நடத்திய ஆய்வில் 18,600 கோடி டாலர் அளவுக்கு கருப்பு பணம் பதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. இதில் சிறிதளவை மீட்பதற்கு முயற்சி செய்யும் பட்சத்தில் 3,000 முதல் 3,500 கோடி டாலர் வரை கிடைக்கலாம் என்று தெரிகிறது.
இந்த தொகையை வைத்துக்கொண்டு நான்கு மாதங்களுக்கு தேவையான இந்தியாவின் இறக்குமதியை பூர்த்தி செய்துகொள்ள முடியும். மேலும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 58 முதல் 62 ரூபாய் என்ற அளவிலே இருக்கும் என்றும் இந்த அறிக்கை கணித்திருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT