Published : 12 Feb 2017 10:48 AM
Last Updated : 12 Feb 2017 10:48 AM
கேப்டன் என்.எஸ்.மோகன்ராம். கடற் படையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். டிவிஎஸ் மோட்டார் உள்ளிட்ட சில நிறுவனங்களை கடும் சரிவில் இருந்து உயர்த்திக் காட்டியவர். இந்திய ஆட்டோமொபைல் சங்கம் அமைத்திருக்கிற ரீசைக்கிள் பிரிவின் தலைவர் என இவருக்கு பல முகங்கள். தற்போது டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் ஆலோசகராக இருக்கிறார். சமீபத்திய முகம், எழுத்தாளர். My Ships Sailed The Seas But I Stayed Ashore என்னும் புத்தகத்தை கடந்த வாரம் சென்னையில் வெளியிட்டார். இவரது புத்தகத்தை டிவிஎஸ் மோட்டார் தலைவர் வேணு ஸ்ரீனிவாசன் அறிமுகப்படுத்தினார். புத்தக அறிமுக நிகழ்ச்சிக்காக வந்திருந்த கேப்டனுடன் ஒரு சந்திப்பு.
1953-ம் ஆண்டு ஐஐடியில் கடற்படை வடிவமைப்பு படித்தீர்கள். கடற்படை மீது அந்த காலத்தில் எப்படி ஆர்வம் எப்படிப்பட்டது?
எனக்கு கடற்படையை பற்றி எதுவும் தெரியாது. அப்போது இந்திய அரசு ஒரு கப்பலை அறிமுகம் செய்தது. அதனால் கப்பல் துறைக்கு நல்ல எதிர்காலம் இருக்கும் என்னும் எண்ணம் இருந்தது. அதை தவிர அப்போதைக்கு எனக்கு எதுவும் தெரியாது, திட்டமும் இல்லை. பெரும்பாலும் திட்டங்கள் எதையும் நான் வைத்துக்கொள்வதில்லை. அவ் வப்போது கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்கிறேன். தவிர புதிய விஷயங்களை செய்வதற்கு நான் பயப்படுவதில்லை. இப்போது வயது 80. இதற்கு முன்னால் புத்தகம் எழுத வேண்டும் என தோன்றியதில்லை. ஆனாலும் இப்போது எழுதி இருக்கிறேன். கப்பல் வடிவமைப்பில் கிடைத்த அனுபவம் எனக்கு பல வகைகளில் பயன்படுகிறது. கப்பல் வடிவமைப்பு என்பது எளிதானது அல்ல. மின்சாரம், சமையல், போர், எலெக்ட்ரானிக்ஸ், தண்ணீர் என ஒரு நகரையே கப்பலில் வடிமைக்க வேண்டும் இந்த சவால் பிடித்திருந்தது.
ஏன் கடற்படையில் இருந்து வெளியேறி னீர்கள்?
கடற்படையில் கேப்டனாக இருந்துவிட்டேன். அதற்கு மேல் செல்ல வேண்டும் என்றால் நிர்வாக ரீதியான பணிகள் மட்டுமே இருக்கும். அடிப்படையில் நான் வடிவமைப்பாளர் என்பதால் ஒரு கட்டத்துக்கு மேல் கடற்படையில் தொடர விருப்பமில்லை. வடிவமைப்பில் நீங்கள் செய்யும் விஷயங்களை உடனடியாக பார்க்க முடியும். ஆனால் நிர்வாக ரீதியில் சென்றால் பல துறைகளில் இருக்க வேண்டும் என்பதால் தொடரவில்லை. கப்பல் கட்டும் நிறுவனமான மஸகான் டாக்ஸ் நிறுவனத்தில் நான்கு ஆண்டுகள் பணியாற்றினேன். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக அங்கிருந்து வெளியேறினேன்.
டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தில் எப்போது இணைந்தீர்கள். அந்த நிறுவனத்தை எப்படி மாற்றினீர்கள்?
அதன் பிறகு முகுந்த் ஸ்டீல் நிறுவனத்தில் இணைந்தேன். அந்த நிறுவனத்தை லாபம் ஈட்டிய பிறகு டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தில் 1989-ம் ஆண்டு இணைந்தேன்.
நான் இணையும் போது நிறுவனத்தில் கடும் பிரச்சினைகள் இருந்தன. தொழிலாளர்கள் பிரச்சினை இருந்தது. 100 நாட்கள் தொழிற்சாலை செயல்படவில்லை. பிரச்சினைகளை சரி செய்த பிறகு ஆலையை தொடங்கினோம். ஈராக் போர் தொடங்கியது. பிரச்சினைகள் மேலும் அதிகரித்தன. செலவுகளை, பணியாளர்களை குறைத்தோம். 1993-ம் ஆண்டு நிறுவனம் மெல்ல லாபமீட்ட தொடங்கியது. அடுத்த சில ஆண்டுகளில் நிறுவனம் நல்ல இடத்தை அடைந்தது.
நஷ்டத்தில் இருக்கும் நிறுவனத்தை லாப பாதைக்கு எப்படி கொண்டுவந்தீர்கள். பணியாளர்களை நீக்கினால் போதுமா? உங்கள் அனுபவத்தை பகிர்ந்துகொள் ளுங்கள்?
`டர்ன் அரவுண்ட்’ என்றாலே பணி யாளர்களை நீக்குவது என்ற பொதுவான எண்ணம் மட்டுமே இருக்கிறது. செய்ய வேண்டிய பல விஷயங்களில் அதுவும் ஒன்று. பொதுவாக நிறுவனம் மந்தமாக செயல்படும் பட்சத்தில் பணியாளர்களின் நம்பிக்கை குறையும். நாம் தோற்கப்போகிறோம் என்னும் எதிர்மறை எண்ணத்தில் பணியாளர்கள் இருப்பார்கள். இந்த பிரச்சினை தற்காலிகம், விரைவில் நிலைமை மேம்பாடு அடையும் என்னும் நம்பிக்கையை ஏற்படுத்துவதுதான் முதல் பணி.
நிறுவனம் பிரச்சினையில் இருக்கும் போது, புதிதாக ஒருவர் வந்தால் அவர் மீது சந்தேகம் இருக்கும். இதுவரை நாம் செய்யாததையா இவன் செய்யப்போகிறான் என்னும் எண்ணம் இருக்கும். அவர்களிடம் நமக்கு தெரிந்த வார்த்தைகளை பயன்படுத்துவதை விட அவர்களுக்கு புரியும் விஷயத்தை சொல்ல வேண்டும். ஓடும் பஸ்ஸில் ஏறுவதுபோலதான். அவர்களுடனேயே ஓடி அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும்.
அடுத்ததாக தடாலடியாக எந்த முடிவும் எடுக்கக் கூடாது. அனைவருக்கும் தெரியக்கூடிய, வெற்றி கிடைக்கும் சில முடிவுகளை எடுக்க வேண்டும். அப்போதுதான் புதிதாக வந்திருப்பவன் நம் பிரச்சினையை சரி செய்ய போகிறான் என்ற எண்ணம் பணியாளர்களிடையே வரும்.
தவிர நீங்கள் மட்டுமே அனைத்து வேலையையும் செய்ய முடியாது. அனைத்தும் நமக்கு தெரியாது. அங்கிருக்கும் சிலரில் துடிப்பான, அனைவருக்கும் பிடித்த சிலரை அடையாளம் கண்டு அவர்கள் மூலமாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
சமயங்களில் கடுமையான முடிவு எடுக்க வேண்டி இருக்கும். ஆனால் அதற்கான காரணத்தை முறையாக பணியாளர்ளுக்குத் தெரிவிக்க வேண்டும். தகவல் தொடர்பு முக்கியம். ரகசியமாக செய்யப்படும் நடவடிக்கைகள் மேலும் பதற்றமான சூழலை உருவாக்கும். நம் நிறுவனம் ஏன் இப்படி இருக்கிறது. நிலைமை மேம்பாடு அடைய என்ன செய்யலாம் என்பதை வெளிப்படையாகக் கூற வேண்டும்.
சில பரிசோதனை முயற்சிகளில் உங்களுக்கு நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். ஆனால் உங்களுக்கே நம்பிக்கை இல்லை என்பதை பொது வெளியில் பகிரக்கூடாது.
பிரச்சினையை சரி செய்த பிறகு பணியாளர்களுக்கு என்ன கிடைக்கும் என்பதை கூற வேண்டும். அதேபோல நிலைமை சரியான பிறகு பணியாளர்களுக்கு அதனை வழங்க வேண்டும். டிவிஎஸ் மோட்டார்ஸ் லாபமீட்டிய பிறகு அனைவருக்கும் தங்க நாணயம் வழங்கினோம். பணியாளர்களை நீக்குவது என்பது செய்ய வேண்டிய பல வேலைகளில் ஒன்று மட்டுமே.
இந்த வேலை கடும் சவாலாக இருந் திருக்குமே?
நிச்சயமாக. நன்றாக இருக்கும் நிறுவனத்தையே அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்வதில் சவால் இருக்கும். மோசமான நிறுவனம் என்றால் இன்னும் அதிகம். சாப்பாடு, தூக்கம் இருக்காது. மன உளைச்சல் அதிகமாக இருக்கும். வேலையில் இருந்து ஒருவரை நீக்குவது என்பது கடுமையான முடிவு. நான் வெளியில் இருந்து வந்த ஆள் என்பதால் பணியாளர்களை நீக்க முடிந்தது. இழப்பீடு கொடுத்தால் கூட எனக்கு உறுத்தலாகவே இருக்கும். தவிர நிறுவனத்தின் செயல்பாடுகளில் மாற்றம் உடனடியாக வராது. மிகவும் பொறுமையாகவே இருக்க வேண்டும். நாம் செய்வது சரியா என்பது கூட தெரியாது. இதை உணர்வதற்கே பொறுமை அவசியம்.
என்னுடைய 60 வயதில், இந்தியா வின் முக்கியமான நிறுவனங்களில் ஒன்றை மாற்றி அமைக்கும் வேலை எனக்கு வந்தது. ஆனால் அந்த வயதில் என்னால் முடியாது என மறுத்துவிட்டேன்.
ஏற்கெனவே மின்னணு கழிவுகள் அதிகம் உருவாகின்றன. இந்த நிலையில் 15 ஆண்டுகளுக்கும் மேலான வாகனங்கள் மறு சுழற்சி செய்யலாம் என்றால் அதிக கழிவுகள் உண்டாகாதா? ஆட்டோமொபைல் நிறுவனங்களின் விற்பனையை உயர்த்துவதற்காக இந்த கொள்கை உருவாக்கப்படுகிறதா?
ஆட்டோமொபைல் விற்பனைக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை. பழைய வாகனங்களால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது.
ஒரு காரை எடுத்துக்கொண்டால் 70 சதவீதம் உருக்கு இருக்கிறது. இதனை பிரித்து எடுத்து மீண்டும் உருக்காக மாற்றிவிடலாம். 7 முதல் 8 சதவீதம் அலுமினியம் இருக்கிறது. இதனையும் பிரித்துவிடலாம். 3 முதல் 4 சதவீதம் ரப்பர் உள்ளது. இதனை பிரித்து எடுக்க முடியும். ஆனால் தரம் குறைவாக இருக்கும். 6-7 சதவீதம் பிளாஸ்டிக் இருக்கிறது. இன்று ஐரோப்பா மற்றும் ஜப்பானில் ஒரு காரில் 95 சதவீதம் வரை மறு சுழற்சி மூலம் பயன்படுத்தப்படுகிறது.
karthikeyan.v@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT