Published : 13 Oct 2014 12:07 PM
Last Updated : 13 Oct 2014 12:07 PM
நஷ்டத்தில் இயங்கும் அரசுத் துறை நிறுவனமான ஏர் இந்தியா, தரையிறக்கப்பட்ட (செயல்படாத) விமானங்களை 60 லட்சம் டாலருக்கு (ரூ. 36 கோடி) காப்பீடு செய்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஏர் இந்தியா நிறுவனம் நஷ்டத்திலிருந்து மீள்வதற்கு மத்திய அரசிடமிருந்து ரூ.30 ஆயிரம் கோடியை எதிர்நோக்கிக் காத்துள்ளது. இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக செயல்படாமல் தரையிறக்கப்பட்டுள்ள விமானங் களை ரூ. 36 கோடிக்கு காப்பீடு செய்துள்ளது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று இந்திய வர்த்தக விமான பைலட்டுகள் சங்கம் (ஐசிபிஏ) கோரிக்கை விடுத்துள்ளது.
விசாரணைக்கு கோரிக்கை
இந்த விவகாரம் குறித்து தனிப்பட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜுவுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. இந்த கடிதத்தின் நகல் ஊழல் கண்காணிப்பு ஆணையருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
ஏர் இந்தியாவின் 6 போயிங் விமானங்கள் (737-200 எஸ் ரகம்) கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படவில்லை. இவை ஒவ்வொன்றும் ஆண்டுக்கு 10 லட்சம் டாலருக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளன. கடந்த மூன்று ஆண்டுகளாக இவ்விதம் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் மிகப் பெரிய நிதி குளறுபடி நடந்துள்ளது. இது குறித்து தனிப்பட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐசிபிஏ பொதுச் செயலாளர் சைலேந்தர் சிங் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பான கடிதத்தை ஏர் இந்தியா தலைவர் ரோஹித் நந்தனுக்கும் அனுப்பியுள்ளார்.
இந்த புகார் குறித்து ஏர் இந்தியா நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.
காப்பீட்டுத் தொகை அதிகம்
ஏர் இந்தியா நிறுவனம் அக்டோபர் 1-ம் தேதி 2.90 கோடி டாலருக்கு 132 விமானங்களை காப்பீடு செய்தது. இதில் 17 ஏஐ எக்ஸ்பிரஸ் விமானங்களும் 8 அலையன்ஸ் விமானங்களும் அடங்கும். காப்பீட்டுத் தொகை கடந்த ஆண்டைக் காட்டிலும் 18 சதவீதம் அதிகமாகும். கடந்த ஆண்டு 2.30 கோடி டாலர் தொகைக்கு காப்பீடு செய்யப்பட்டது. சமீபத்தில் அதிக எண்ணிக்கையில் விமான விபத்து நிகழ்ந்ததை அடுத்து விமான காப்பீட்டு தொகை சர்வதேச அளவில் உயர்த்தப்பட்டது.
அக்டோபர் 1-ம் தேதி காப்பீடு புதுப்பிக்கப்பட்டதில் 4 விமானங்கள் ஒவ்வொன்றும் தலா 50 ஆயிரம் டாலர் மதிப்புக்குத்தான் காப்பீடு செய்யப்பட்டுள்ளன. செப்டம்பர் மாதம் இவை 10 லட்சம் டாலர் மதிப்புக்கு காப்பீடு செய்யப்பட்டதையும் சைலேந்தர் சிங் சுட்டிக் காட்டியுள்ளார்.
இத்தகைய விமானங்களில் குறைந்த செலவு செய்து அவற்றை சரக்குப் போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியும். இத்தகைய விமானங்களை ஒப்பந்த அடிப்ப டையில் பயன்படுத்த காடி நிறுவ னத்துக்கு 2007-ம் ஆண்டு அனுமதி அளிக்கப்பட்டு அது 2009-ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது. இதை எதிர்த்து முறையிடலாம் என சங்கம் கூறியபோதிலும் அதை ஏர் இந்தியா நிர்வாகம் செய்யவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
நஷ்ட ஈடு
சமீபத்தில் தனியார் நிறுவனத்துக்கு ரூ. 26.82 கோடி நஷ்ட ஈடு அளிக்க வேண்டும் என்று ஏர் இந்தியா நிறுவனத்துக்கு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
இதுபோன்ற விவகாரங்களை விசாரிக்க வேண்டும். காப்பீடு, ஒப்பந்த ஒதுக்கீடு இவை குறித்து தணிக்கை செய்ய வேண்டும் என்றும் ஐசிபிஏ வலியுறுத்தியுள்ளது.
தேவையற்ற காப்பீட்டுக்கு அதிக அளவில் பணம் செல விடப்படுகிறது. ஆனால் ஊழியர்களுக்கு அலவன்ஸ் அளிப்பதை தன்னிச்சையாக ஏர் இந்தியா நிர்வாகம் நிறுத்துகிறது. இதுபோன்ற தேவையற்ற செலவினங்களைக் குறைத்தால் ஊழியர்களுக்கு சம்பளத்தை அளிப்பதோடு நிர்வாகத்தையும் சிரமமின்றி நடத்த முடியும் என்று சுட்டிக் காட்டியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT