Published : 17 Mar 2014 12:21 PM
Last Updated : 17 Mar 2014 12:21 PM
இந்திய பங்குச்சந்தையில் நடுத்தர காலத்தில் ஏற்ற இறக்கங்கள் நிலவும் என்றும், சர்வதேச சூழ்நிலைகளைப் பொறுத்தே இந்திய சந்தைகளின் செயல்பாடு இருக்கும் என்றும் சந்தை வல்லுநர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இருந்தாலும் கூட இந்திய சந்தையில் அன்னிய முதலீடு மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் ஏற்றமும் இந்திய சந்தையில் கணிசமாக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரிவித்திருக்கிறார்கள்.
உக்ரைனின் கிரிமியாவை ரஷியாவுடன் இணைப்பது குறித்து பொது வாக்கெடுப்பு நடை பெற்றுள்ளது. வரும் ஏப்ரல் 1-ம் தேதி ரிசர்வ் வங்கி கடன் கொள்கையை அறிவிக்க இருக்கிறது. இந்த நிகழ்வுகளைப் பொறுத்து சந்தையின் செயல்பாடுகள் இருக்கும் என்று கோட்டக் செக்யூ ரெட்டீஸ் நிறுவனத்தின் தீபன் ஷா தெரிவித்திருக்கிறார்.
பணவீக்கம் குறைந்திருப்பதால் முதலீட்டாளர்கள் தற்போது உள்ள வட்டி விகிதத்தையே எதிர்பார்க்கிறார்கள். ரிசர்வ் வங்கியின் வட்டிவிகித கொள்கை சந்தையின் போக்கினை மாற்றி அமைக்கும் முக்கிய காரணி என்று பொனான்ஸா போர்ட்ஃபோலியோ நிறுவனத்தின் துணைத் தலைவர் ராகேஷ் கோயல் தெரிவித்திருக்கிறார்.
இதற்கிடையே அமெரிக்க நிதிக்கொள்கையை அறிவிக்கும் எஃப்.எம்.ஓ.சி. கூட்டம் வரும் மார்ச் 18-19 ஆகிய தேதிகளில் நடக்க இருக்கிறது. ஹோலி பண்டிகையை முன்னிட்டு இந்திய பங்குச் சந்தைகளுக்கு திங்கள்கிழமை விடுமுறை.
சந்தை மதிப்பு குறைவு
முன்னணி நான்கு முக்கிய நிறுவனங்களான டி.சி.எஸ்., இன்ஃபோஸிஸ், கோல் இந்தியா மற்றும் விப்ரோ ஆகியவற்றின் சந்தை மதிப்பு 41,564 கோடி ரூபாய் அளவுக்கு சரிந்திருக்கிறது. மாறாக ரிலையன்ஸ், ஓ.என்.ஜி.சி. மற்றும் ஐ.டி.சி. ஆகிய நிறுவனங்களின் சந்தை மதிப்பு உயர்ந்தது.
இன்ஃபோஸிஸ் அதிகமாக சரிந்தது. கடந்த வாரத்தில் மட்டும் 20,184 கோடி ரூபாய் அளவுக்கு இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு சரிந்தது. டி.சி.எஸ். நிறுவனத்தின் சந்தை மதிப்பு 16,443 கோடி ரூபாய் அளவுக்கு சரிந்தது. மாறாக ஐ.டி.சி. நிறுவனத்தின் சந்தை மதிப்பு 7,509 கோடி ரூபாய் உயர்ந்தது.
அன்னிய முதலீடு ரூ.5,000 கோடி
கடந்த இரண்டு வாரங்களில் இந்திய பங்குச்சந்தையில் அன்னிய நிறுவன முதலீடு 5,000 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. மார்ச் 14-ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் இந்த முதலீடு செய்யப்பட்டு இருப்பதாக பங்குச்சந்தை ஒழுங்கு முறை ஆணையமான செபி-யின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதே காலத்தில் இந்திய கடன் சந்தையில் 14,140 கோடி ரூபாய் அன்னிய நிறுவன முதலீடு இந்தியாவுக்குள் வந்திருக்கிறது.
செபியின் திட்டம்
அடுத்த நிதி ஆண்டில் செய்ய வேண்டிய திட்டங்களை பங்குச்சந்தை ஒழுங்கு முறை ஆணையமான செபி வெளியிட்டிருக்கிறது. இதில் முதலீட்டாளர் விழிப்புணர்வு, புதிய முதலீட்டாளர்களை சென்றடைதல், முறைகேடுகளை தடுப்பது உள்ளிட்ட திட்டங் களை வெளியிட்டிருக்கிறது. இந்த திட்டங்கள் மூலம் முதலீட்டாளர் நலன் பாதுகாப்பது மற்றும் குற்ற நடவடிக்கைகள் குறைவது ஆகியவை நிகழும் என்று செபி தெரிவித்திருக்கிறது. இதற்காக அலுவலர்களின் எண்ணிகை யை அதிகரிக்கவும் செபி திட்டமிட்டிருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT