Published : 31 Oct 2014 10:30 AM
Last Updated : 31 Oct 2014 10:30 AM
இந்தியர்கள் தங்களின் அந்தஸ்தின் அடையாளமாகக் கருதும் புல்லட் எனப்படும் ராயல் என்ஃபீல்டு காலத்திற்கேற்றவாறு தன்னை மாற்றிக்கொண்டு இன்றும் தன்னுடையை முன்னிலையை தக்கவைத்துக் கொண்டுள்ளது. சந்தையின் தேவைக்கேற்ப ஒரகடத்தில் அமைந்துள்ள புதிய நவீன ஆலை அதிக எண்ணிக்கையிலான மோட்டார் சைக்கிள்களை உற்பத்தி செய்து வருகிறது.
மோட்டார் சைக்கிள் இந்திய சாலைகளில் வலம் வந்த காலங்களில் கிராமங்களில் பண்ணையார்கள், மைனர்கள் வலம் வருவதற்கு தேர்வு செய்ததும் புல்லட்தான். அந்த கால திரைப்படங்களில் இதைக் காணமுடியும். புல்லட்டுடன் பயணித்த ராஜ்தூத், ஜாவா, யெஸ்டி ஆகிய வாகனங்கள் வழக்கொழிந்து போன நிலையில் இன்றளவும் சாலைகளில் கம்பீரமாக வலம் வருகிறது புல்லட்.
இந்தியாவில் தாராளமயமாக்கலின் தயவால் ஜப்பான் தொழில்நுட்பத்தில் அல்லது கூட்டு முயற்சியில் பல்வேறு மோட்டார் சைக்கிள்கள் இந்தியாவில் படையெடுத்த போதிலும் தனக்கென தனி இடத்தைப் பிடித்து முத்திரை பதித்து வருவதும் எய்ஷர் நிறுவனத்தின் ராயல் என்பீல்ட் எனப்படும் புல்லட்தான். முதலில் ராணுவத்துக்கும், காவல்துறைக்கும் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட இந்த மோட்டார் சைக்கிள் இன்றைக்கு இளைஞர்கள், நடுத்தர வயதினர் விரும்பி ஓட்டுகிற வாகனமாக மாறிவிட்டது. இதனாலேயே இன்றளவும் முன்பதிவு செய்து சிறிது காலம் காத்திருந்துதான் வாகனங்களை வாங்கும் அளவுக்கு இதற்கு கிராக்கி நிலவுகிறது.
முந்தைய மாடல்களில் இருந்த சில அசௌகர்யங்கள் நீக்கப்பட்டு, செல்ஃப் ஸ்டார்ட்டர், வலது காலில் பின்புற பிரேக் வசதி என நவீனமயமாக்கப்பட்டுள்ளது. இவையும் இளைஞர்களைக் கவர்வதற்கு பிரதான காரணங்கள். இப்போதெல்லாம் வாகன ஓட்டம் அதிகமான சமயங்களில் 10 மோட்டார் சைக்கிளில் குறைந்தது 4 அல்லது 5 மோட்டார் சைக்கிளாவது என்பீல்டின் பல்வேறு மாடலாக உள்ளன.
பேஸ்புக்கில் 13 லட்சம் லைக்குகளோடு நிமிர்ந்து நிற்கிறது ராயல் என்ஃபீல்டு. காலத்திற்கேற்ற மாற்றங்களுடன் வலம் வரும் ராயல் என்ஃபீல்டின் ரகசியம் குறித்து நிறுவன விவகார அதிகாரியான ஸ்ரேயாஸ் பட் கூறியது:
இந்திய மோட்டார் சந்தையில் ராயல் என்ஃபீல்டுக்கு என்று தனி இடம் உண்டு. இந்த நம்பகத்தன்மைதான் நூறு ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவில் எங்களை நிலைத்திருக்கச் செய்துள்ளது. மற்ற வாகனங்களை போல் அல்லாமல் இந்தியாவின் கிராமங்களில் கொண்டாடப்படுகிற ஒரே இரு சக்கர வாகனம் ராயல் என்ஃபீல்டு மட்டுமேயாகும். ராயல் என்ஃபீல்டின் தண்டர்பேர்ட் 350 சிசி வண்டிகளை 2002-ல் அறிமுகப்படுத்திய நாள் முதல் இன்றைய தினம் வரை மாதத்துக்கு 1,000 வண்டிகள் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன.
இன்றை தொழில்நுட்பத்துக்கு ஏற்ப நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. யுசிஇ ரக இன்ஜின்களை பொருத்திதான் தண்டர்பேர்ட் வண்டிகள் உருவாக்கப்பட்டுள்ளன. சென்னையையடுத்த ஒரகடத்தில் கடந்தாண்டு ராயல் என்ஃபீல்டின் நவீன உற்பத்தி ஆலை ரூ. 150 கோடி முதலீட்டில் தொடங்கப்பட்டது. இங்கு ஆண்டுக்கு 1.5 லட்சம் வண்டிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த எண்ணிக்கையை மேலும் ஒரு லட்சம் உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.
பொதுவாக என்ஃபீல்ட் வண்டிகள் தொலைதூர பயணத்துக்கு ஏற்புடையவை என்ற கருத்து உள்ளது. புல்லட் எலக்ட்ரா, கிளாசிக் 350, கிளாசிக் 500, கிளாசிக் குரோம், டெசர்ட் ஸ்டோர்ம் உள்ளிட்ட வண்டிகளை 50-க்கும் அதிகமான நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து கொண்டிருக்கிறோம். பிஎம்டபிள்யூ நிறுவனமும் இரு சக்கர வாகன உலகில் 350 சிசி வண்டிகளை களமிறக்கவுள்ளது. இது எங்களுக்கு போட்டி என்று கூறினாலும். ராயல் என்ஃபீல்டின் தோற்றம் மற்றும் தொழில்நுட்ப அம்சங்களும் முற்றிலும் வேறுபட்டது.
சமீப காலமாக தண்டர்பேர்ட் 500சிசி அதிக எண்ணிக்கையில் சந்தையில் விற்பனையாகிறது, கிளாசிக் 500 வண்டிகள் இந்திய பாரம்பரியத்தை உணர்த்தும் தோற்றத்தைக் கொண்டுள்ளதால் அவையும் இங்கு விரும்பி வாங்கப்படுகின்றன. புல்லட் 500 சிசி வண்டிகளில் உள்ள Unit Construction Engine எனப்படும் இந்த யுசிஇ வண்டிகள் இதுவரை இல்லாத அளவுக்கு 5 கியர்பாக்ஸ்களுடன் சிலிண்டருக்கு இரண்டு ஸ்பார்க் பிளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.
ஒரகடம் உற்பத்தி மையத்தில் உற்பத்தியாகும் வண்டிகளின் எண்ணிக்கை இன்னும் இரண்டு ஆண்டுகளில், ஆண்டுக்கு 5 லட்சம் என்ற எண்ணிக்கைய எட்டலாம். இதற்காக விற்பனை நிலையங்களையும், டீலர்களையும் அதிகப்படுத்த வேண்டிய தேவையுள்ளது. இதற்கான வேலைகளில் எங்களது நிர்வாக இயக்குநர் சித்தார்த் லால் தீவிரமாக ஈடுபட்டுள்ளார் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT