Published : 08 Jan 2014 09:46 AM
Last Updated : 08 Jan 2014 09:46 AM
சென்னையை அடுத்துள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் இயங்கிவரும் ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் ஆலையை விற்பதென நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த ஆலையில் ஜப்பானின் மிட்ஸுபிஷி நிறுவனத்தின் தொழில்நுட்ப ஒத்துவைப்போடு லான்சர், பஜேரோ ஸ்போர்ட், செடியா, அவுட்லாண்டர், மான்டெரோ ஆகிய கார்கள் தயாரிக்கப்படுகின்றன.
இந்நிறுவனத்தை விற்பது அல்லது நீண்ட கால அடிப்படையில் குத்தகை விடுவதற்கு பங்குதாரர்களிடம் அனுமதி கோரியுள்ளது இந்நிறுவனம். இந்நிறுவன பங்குதாரர்கள் தங்களது முடிவை தபால் மூலம் தெரிவிக்கலாம் என்றும் நிறுவனம் மும்பை பங்குச் சந்தைக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளது.
கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான கார் தயாரிப்புத் தொழிற்சாலை திருவள்ளூர் மாவட்டம் அதிகத்தூர் எனுமிடத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையை விற்பது அல்லது குத்தகைக்கு விடுவதன் மூலம் ரூ. 150 கோடியை திரட்ட நிறுவனம் முடிவு செய்துள்ளது.
நிறுவனத்தை விற்பது அல்லது குத்தகைக்கு விடுவதன் மூலம் பணம் திரட்டுவதென இயக்குநர் குழு கூட்டத்தில் முடிவு செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போதைய சூழலில் இந்த ஆலையை நடத்துவதற்கு உரிய சர்வதேச கூட்டாளியைத் தேர்வு செய்வதென்பது மிகவும் சிக்கலான விஷயம். இதனால் இந்த ஆலையை குத்தகைக்கு விடலாம் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஹிந்துஸ்தான் மோட்டார் நிறுவனத்துக்கு சென்னை திருவள்ளூர் ஆலை தவிர மேற்கு வங்க மாநிலத்தில் உத்தரபாரா எனுமிடத்தில் ஆலை உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT