Published : 12 Nov 2013 08:54 AM Last Updated : 12 Nov 2013 08:54 AM
இந்தியாவின் ஏற்றுமதி 13.47 சதவீதம் உயர்வு
இந்தியாவின் ஏற்றுமதி அக்டோபர் மாதத்தில் 13.47 சதவீதம் அதிகரித்து 2,727 கோடி டாலராக உயர்ந்துள்ளது. அதேசமயம் இறக்குமதி 14.5 சதவீதம் குறைந்துள்ளது. இதனால் வர்த்தகப் பற்றாக்குறை வெகுவாகக் குறைந்துள்ளது.
இறக்குமதி 3,780 கோடி டாலராகும். இதனால் வர்த்தகப் பற்றாக்குறை 1,000 கோடி டாலராகக் குறைந்தது கடந்த ஆண்டு இதே காலத்தில் வர்த்தகப் பற்றாக்குறை 2,000 கோடி டாலராக இருந்தது.
குறிப்பாக ஐரோப்பிய நாடுகளுக்கான ஏற்றுமதி தொடர்ந்து அதிகரித்ததே ஏற்றுமதி உயர்வுக்குக் காரணம் என்று வர்த்தகச் செயலர் எஸ்.ஆர். ராவ் தெரிவித்தார். அக்டோபர் மாதத்தில் தங்கம், வெள்ளி இறக்குமதி 130 கோடி டாலராகக் குறைந்துள்ளது.
கடந்த ஆண்டு இதே காலத்தில் 680 கோடி டாலர் அளவுக்கு தங்கம், வெள்ளி இறக்குமதி செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஏப்ரல் முதல் அக்டோபர் வரையான காலத்தில் ஏற்றுமதி 6.32 சதவீதம் அதிகரித்து 17,938 கோடி டாலராக உயர்ந்துள்ளது. இதே காலத்தில் இறக்குமதி 27,006 கோடி டாலராகும். ஏற்றுமதி இதே நிலையில் தொடரும்பட்சத்தில் நடப்பு நிதி ஆண்டு இலக்கான 32,500 கோடி டாலர் அளவுக்கு ஏற்றுமதி செய்ய முடியும் என ராவ் நம்பிக்கை தெரிவித்தார்.
175 புள்ளிகள் சரிவு...
இந்தியாவின் அக்டோபர் மாத ஏற்றுமதி அதிகரித்து வர்த்தக பற்றாக்குறை கணிசமான அளவு குறைந்தபோதிலும் பங்குச் சந்தையில் 175 புள்ளிகள் சரிந்தது. வாரத்தின் முதல் நாளான திங்களன்று ஏற்பட்ட சரிவின் காரணமாக பங்குச் சந்தை குறியீட்டெண் 20,490 புள்ளிகளாகக் குறைந்தது. தேசிய பங்குச் சந்தையில் 62 புள்ளிகள் குறைந்ததில் குறியீட்டெண் 6,078 புள்ளிகளானது.
அமெரிக்க ஃபெடரல் அரசு தனது ஊக்குவிப்பு திட்டங்களை படிப்படியாகத் திரும்பப் பெறப் போவதான அறிவிப்பு வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. மேலும் அமெரிக்க வேலையில்லாதோர் பட்டியல் முந்தைய மாதத்தைவிட திருப்திகரமாக இருந்ததும் பங்குச் சந்தை வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. தொடர்ந்து ஐந்தாவது நாளாக பங்குச் சந்தையில் சரிவு காணப்பட்டது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவாக ஏற்றுமதி அக்டோபர் மாதத்தில் அதிகரித்த போதிலும் அது பங்குச் சந்தை எழுச்சிக்கு வழிவகுக்கவில்லை.
ஹிண்டால்கோ, லார்சன் அண்ட் டியூப்ரோ, ஓஎன்ஜிசி உள்ளிட்ட 24 முன்னணி நிறுவனப் பங்குகள் சரிவைச் சந்தித்தன. இதில் குறிப்பாக அதிக அளவு சரிவைச் சந்தித்த நிறுவனங்கள் பட்டியலில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டாடா மோட்டார்ஸ் ஆகியன சேர்ந்தன. கடந்த ஐந்து நாள் வர்த்தகத்தில் மொத்தம் 748 புள்ளிகள் சரிந்துள்ளது.
ரூபாய் மதிப்பு வீழ்ச்சி...
டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பும் சரிவைச் சந்தித்தது. கடந்த இரண்டு மாதங்ளில் இல்லாத அளவாக ஒரு டாலருக்கு ரூ. 63.43 தர வேண்டியிருந்தது. மொத்தம் 96 காசு சரிவைச் சந்தித்தது.
WRITE A COMMENT