Published : 23 Jul 2016 11:00 AM
Last Updated : 23 Jul 2016 11:00 AM
பேட், பந்து இரண்டின் மொத்த விலை 110 ரூபாய். பாலை விட பேட் நூறு ரூபாய் அதிகம்.
அப்படியென்றால் பால் விலை என்ன?
பத்து ரூபாய் என்று பட்டென்று தோன்றியிருக்குமே? ஈசியாய் தெரிந்த இக்கேள்விக்கு இண்ட்யூடிவாக பதில் தோன்றியது, இல்லையா?
பதில் தவறானது!
இப்பொழுது நிதானமாக கணக்கு போடுங்கள். பந்து விலை 10 ரூபாய் என்றால் கேள்வியின் இரண்டாவது வரியின் படி, பேட் ரூ. 100 அதிகம் என்றால், பேட் விலை 110 ரூபாய். இரண்டின் கூட்டுத் தொகை 120 ரூபாய் என்றாகி றது. ஆனால் இரண்டின் விலையுமே ரூ.110தான்.
அப்படியென்றால் சரியான விடை எது?
எதற்கு இந்த வயதில் உங்களை படுத்திக்கொண்டு. பால் ஐந்து ரூபாய்! நம்பிக்கை இல்லையென்றால் கூட்டி கழித்துப் பாருங்கள். (5+105)
மனித மனம் சிந்திக்கும் முறையை, முடிவெடுக்கும் விதத்தை பல காலமாக ஆராய்ந்து வரும் உளவியல் நிபுணர்கள் இரண்டு வகையாக இது மனதிற்குள் நடக்கிறது என்கிறார்கள். அதற்கு அவர்கள் சிஸ்டம் 1 மற்றும் சிஸ்டம் 2 என்று பெயர் வைத்து அழைக்கிறார்கள்.
சிஸ்டம் 1 என்பது ரொம்ப மெனெக்கெடாமல் சட்டென்று நம் கட்டுப்பாடு இல்லாமல் தன்னிச்சையாய் மனம் முடிவெடுக்கும் முறை. ஆரம்பத்தில் நான் கேட்ட கேள்விக்கு யோசிக்காமல் பட்டென்று தப்பாய் பதிலளித்தீர்களே, அது போல.
சிஸ்டம் 2 என்பது மெனெக்கெட்டு, முயற்சி செய்து, மூளையை யூஸ் செய்து யோசித்து நடக்கும் சமாச்சாரம். சிந்திக்காமல் சட்டென்று முடிவெடுக்க முடியாத போது சிஸ்டம் 1 சிஸ்டம் 2 விடம் ‘இந்தாப்பா கொஞ்சம் பார்த்து சொல்லு’ என்று தேர்ட் அம்பயரிடம் கேட்கும் கிரவுண்ட் அம்பயர் போல விட்டுவிடுகிறது.
197 x 36 எவ்வளவு என்று கேட்டால் டக்கென்று பதிலளிக்க முடியுமா?
தப்பாய் வேண்டுமானால் முடியும். சரியாய் கூற பிரயத்தனப்படவேண்டும். அட்லீஸ்ட் கால்குலேட்டரை தேட வேண்டும்.
அதற்காக பால், பேட் கேள்விக்கு தவறாய் பதில் கூறியிருந்தால் சுலப மான கேள்விக்கு சொதப்பலாய் பதில ளித்துவிட்டோமே என்று கவலைப்படா தீர்கள். ‘ஹார்வர்ட்’, ‘எம்ஐடி’, ‘பிரின்ஸ் டன்’ போன்ற உலகின் தலைசிறந்த பல்கலைக் கழகங்களின் மாணவர் களிடம் இக்கேள்வி கேட்கப்பட்ட போது ஐம்பது சதவீதத்திற்கும் அதிக மானவர்கள் தவறாய் பதிலளித்திருக் கிறார்கள். சுமாரான பல்கலைக் கழக மாணவர்களில் என்பது சதவீதத்திற்கும் மேல் தப்பான விடையை தப்பாமல் தந்திருக்கிறார்கள். அதனால் நீங்கள் தனி ஒருவன் அல்ல. தரணியெங்கும் உங்களுக்கு கம்பெனி இருக்கிறது. தைரியமாய் இருங்கள்.
மனித மனம் ஈசியான கேள்விக்குக் கூட ஏன் தவறான பதிலைத் தருகிறது?
வேறென்ன, ஓவர் கான்பிடன்ஸ் தான். இண்ட்யூஷன் அதாவது உள்ளு ணர்வுக்கு நம்மில் பலர் தரும் அதீத முக்கியத்துவமும் அது சரியாக இருக்கு மென்று நாம் அதன் மீது வைக்கும் அபரி மிதமான நம்பிக்கையும்தான் காரணம் என்கிறார் ‘டேனியல் கான்மென்’. நோபல் பரிசு பெற்ற இவர் எழுதிய அட்டகாசமான புத்தகம் ‘Thinking Fast and Slow’. காக்னிடிவ் எஃபர்ட் அதாவது சிந்தித்து செயல்படும் முயற்சியை செய்ய பலர் சோம்பேறித்தனப்பட்டு உள்ளுணர்வு பட்டென்று சொல்லும் பதிலை, முடிவையே விரும்புகிறார்கள். உள்ளுணர்வு கரெக்ட்டாய்தான் இருக்கும் என்ற ஓவர் கான்பிடன்ஸ்.
கணக்கை விடுங்கள். கான்மென் கேட்கும் லாஜிக் சம்பந்தப்பட்ட கேள்வியை கேட்கிறேன். இரண்டு செய்திகளை தந்து அதிலிருந்து மூன்றாவதாக ஒரு முடிவும் தருகிறேன். முதல் இரண்டு செய்திகளைப் படித்து மூன்றாவதாக தரப்பட்டிருக்கும் முடிவு லாஜிக்கலாய் சரியா என்று கூறுங்கள்.
எல்லா ரோஜாக்களும் பூக்கள்.
சில பூக்கள் சீக்கிரமே வாடி விடும்.
அப்படியென்றால் சில ரோஜாக்கள் சீக்கிரமே வாடி விடும்.
மூன்றாவதாக தரப்பட்டிருக்கும் முடிவு லாஜிக்கலாக இருக்கிறது என்று தானே தோன்றுகிறது?
கையை கொடுங்கள். கங்கிராஜுலே ஷன்ஸ். தவறாய் சிந்தித்து திருப்பியும் தவறான விடை தந்திருக்கிறீர்கள். கணக்குதான் உங்களுக்கு பிணக்கு என்று பார்த்தால் லாஜிக் கூட இப்படி டிராஜிக் ஆக இருக்கிறதே!
சில பூக்கள் தானே சீக்கிரம் வாடும்? எல்லா பூக்களும் ரோஜா இல்லையே. அப்படியென்றால் சில ரோஜாக்கள் ஏன் சீக்கிரமே வாட வேண்டும்? ஆர்க்யூமெண்ட் தவறானதுதானே. சீக்கிரம் வாடும் பூக்களில் ரோஜாக்கள் இல்லாமல் இருக்கலாமே.
பால் பேட் கேள்வியைப் போலவே இந்த கேள்விக்கும் பட்டென்று உள்ளு ணர்வு பதிலளித்தது. அது சரியாகத்தான் இருக்கும் என்று முடிவு செய்து சிந்தித்து செக் செய்யக்கூட தோன்றாததால் தவறான பதில் தரப்பட்டது.
அதற்காக இரண்டு கேள்விகளுக்கும் தவறான பதிலளித்தவர்களுக்கு மூளை இல்லை, சிந்திக்கும் திறன் இல்லை என்று அர்த்தமல்ல. பெரும்பாலானோர் பெரும்பாலான சமயங்களில் அதிகம் மெனெக்கெடாமல் சரியாய் பதில் கூற வேண்டும் என்ற போதிய மோடிவேஷன் இல்லாமல் பதிலளிக்கிறார்கள். முடி வெடுக்கிறார்கள். இவர்களிடம் இதை விட கடினமான கேள்விகளைக் கேட்டு, படாரென்று மனதில் தோன்றும் பதிலைத் தராமல் சிந்தித்து நிதானமாய் பதில ளியுங்கள் என்று கூறினால் சரியான விடை அளிக்கக் கூடியவர்களே. உங்களையும் சேர்த்துத்தான்!
அதிகம் சிந்திக்காமல், ரொம்ப மெனெக்கெடாமல் டக்கென்று தோன்று வதை பட்டென்று கூறி முடிவெடுக்கும் பழக்கமே வாழ்க்கையிலும் வியாபாரத்திலும் விபரீதத்தையும் வில்லங்கத்தையும் வாரி வழங்குகிறது.
அதற்காக வாழ்க்கையிலும், வியாபாரத்திலும் எதையும் ஒரு முறைக்கு பல முறை பார்த்து, யோசித்து உஷாராக செயல்படுவது என்பது சத்தியமாக சாத்தியப்படாது தான். உணவு பரிமாறும் போது மனைவி உங்களிடம் ‘இன்னும் கொஞ்சம் ரசம் ஊத்தவா’ என்று கேட்கும்போது சிஸ்டம் 2 யோசித்து பதிலளிக்கும் வரை காத்திருந்தால் மொத்த ரசமும் தலையில் ஊற்றப்படும் அபாயம் இருப்பது எனக்கு புரிகிறது.
உங்கள் இண்ட்யூஷனை நம்பாமல் உங்கள் ஒவ்வொரு நினைப்பையும் செயல்பாட்டையும், முடிவையும் மீண்டும் மீண்டும் கேள்வி கேட்டு சரி பார்க்கத் துவங்கினால் வாழ்க்கையும் வியாபாரமும் உங்களை விட்டு அவை பாட்டுக்கு முன்னே செல்லும். சிஸ்டம் 2 கொஞ்சம் ஸ்லோதான். டக்கென்று முடி வெடுக்க, வழக்கமான முடிவுகள் எடுக்க சிஸ்டம் 1 போல் அதனால் முடியாது. பாவம், அதன் சுபாவம் அப்படி.
எந்த விஷயங்களில் எப்படி தவறுகள் நடக்கலாம், எங்கெங்கு நடந்தது என்பதை உணர்வது, எந்த தருணங்களில் தவறுகளின் வீரியமும் தாக்கமும் அதிகம் என்பதை புரிந்து அது போன்ற சமயங்களில் இண்ட்யூடிவாக தோன்றும் பதில்களை, முடிவுகளை கொஞ்சத்துக்கு கொஞ்சம் சிஸ்டம் 2 வுக்கு அனுப்பி செக் செய்வது உசிதம்.
நாம் செய்யும் தவறுகளை அறிவதை விட மற்றவர் செய்யும் தவறுகளை இனம் கண்டு கொள்வது சுலபம். அதிலிருந்து ஈசியாக பாடம் படித்து அந்த தவறுகளை செய்யாமல் இருக்க கற்றுக்கொள்ள லாம் என்கிறார் கான்மென்!
ஓவர் கான்பிடன்ஸ் ஓவர் ஸ்பீட் போல. கம்ப்ளீட் கண்ட்ரோல் இருப்பது போல் தோன்றும். கடைசியில் கண்ட மேனிக்கு கவுத்து காலி செய்துவிடும். எதற்கும் உங்கள் ஆபீஸ் ரூமில் பேட், பால் இரண்டையும் வைத்து பத்தாத தற்கு ரோஜா பூ ஒன்றை சட்டையில் சொருகிக்கொள்ளுங்கள். உற்சாக வேகத்துடன் உள்ளுணர்வு உடனடி முடிவெடுக்க நினைக்கும் போது அதை உஷாராக்க உதவும் வேகத்தடையாய் இருப்பதற்கு!
satheeshkrishnamurthy@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT