Published : 02 May 2017 10:40 AM
Last Updated : 02 May 2017 10:40 AM

தொழில் முன்னோடிகள் : ஸாகிச்சி டொயோடா (1867 - 1930)

``முடியாதது என்று எதுவுமே இல்லை உங்களால் ஒரு காரியத்தைச் செய்ய முடியவில்லையென்றால், முழு முயற்சியோடு அதில் ஈடுபடவில்லை என்று அர்த்தம்’’.

- ஸாகிச்சி டொயோடா

உலகின் மாபெரும் விஞ்ஞானி யார்? அமெரிக்காவின் தாமஸ் ஆல்வா எடிசன். அந்த நாள் முதல் இந்த நாள்வரை வாழ்ந்த / வாழும் விஞ்ஞானிகளில் அதிக எண்ணிக்கையிலான பொருட்களைக் கண்டுபிடித்தவர். எலெக்ட்ரிக் பல்ப், பேட்டரி, சினிமா கேமிரா, டிக்டா ஃபோன் போன்ற 1093 கண்டுபிடிப்புகளுக்குக் காப்புரிமை பெற்றிருக்கிறார்.

எடிசனுக்கு இன்னொரு தனித்துவமும் உண்டு. சாதாரணமாக விஞ்ஞானிகள் தொழில திபர்களாகப் பரிமளிப்பதில்லை. ஆனால், எடிசன் தொடங்கிய எடிசன் பாட்டரி கம்பெனி, எடிசன் போர்ட்லான்ட் சிமென்ட் கம்பெனி, எடிசன் எலெக்ட்ரிக் லைட் கம்பெனி, எடிசன் மெஷின் ஒர்க்ஸ், ஜெனரல் எலெக்ட்ரிக் போன்ற பல கம்பெனிகள் பணங்காய்ச்சி மரங்கள்.

அமெரிக்காவின் எடிசன் என்று ஒருவர் போற்றிப் புகழப்படுகிறார்; எடிசனைப் போலவே கண்டுபிடிப்பாளராகவும், தொழிலதிபராகவும் ஜொலிக்கிறார்; உலகை மாற்றிய பிசினஸ் மேன்கள் பட்டியலில் மேதைகள் இவருக்குப் பெருமைக்குரிய இடம் தருகிறார்கள். இவர் - ஸாகிச்சி டொயோடா

****

இக்கிச்சி டொயோடா ஜப்பானின் கோஸாய் நகரத்தில் வசித்த விவசாயி. அந்த வருமானம் போதாததால், தச்சராகவும் வேலை பார்த்தார். அவர் மனைவி வீட்டில் கைத்தறி வைத்திருந்தார். துணிகள் நெய்து அக்கம் பக்கத்தில் வியாபாரம் செய்தார். அவர்கள் மூத்த மகன் ஸாகிச்சி. புத்திசாலி. ஆரம்பப் பள்ளியை முடித்தான். மேலே படிக்க வசதியில்லை. அப்பாவிடம் உதவியாளனாகச் சேர்ந்தான். அதிகாலையில் அவன் விழிக்கும் நேரத்திலிருந்து நள்ளிரவு வரை அம்மா தறி ஓட்டிக்கொண்டிருப்பார். குடும்பத்துக்காக இத்தனை உழைக்கும் அம்மாவைக் கண்டு அவன் மனம் பதறும். தான் பெரியவன் ஆனதும், அம்மாவின் சிரமத்தைக் குறைக்க ஏதாவது செய்யவேண்டும் என்று அந்தப் பிஞ்சு நெஞ்சில் ஆசை விதை விழுந்தது.

ஒரு நாள். ஸாகிச்சி அப்பாவோடு ஒரு பள்ளிக்கூடத்துக்குத் தச்சுவேலைக்குப் போனான். அவன் எதையும் கூர்ந்து கவனிப் பவன். வகுப்பில் ஒரு ஆசிரியர் பேசிக்கொண் டிருந்தார். “இங்கிலாந்தில் தொழில் புரட்சி வந்துவிட்டது. துணி தயாரிக்க, நீராவியால் இயங்கும் தறிகள் பயன்படுத்துகிறார்கள். ஜப்பானில் இன்னும் கைத்தறிகளாலேயே துணி நெய்கிறோம்.” ஸாகிச்சி மனதில் தெளிவு. விசைத் தறிகள் கண்டுபிடித்தால், அம்மாவின் கஷ்டம் மட்டுமல்ல, லட்சக் கணக்கான ஜப்பானியப் பெண்களின் வேலைச் சுமை குறையும். இதே சமயம், ஆரம்பப் பள்ளி மட்டுமே படித்திருந்த தன் ஆசை, குட்டிச் சுவர்மேல் ஏறிக் கோழி பிடிக்க முடியாதவன் வானத்தில் ஏறி வைகுந்தம் போக விரும்பும் எட்டாக்கனி என்பதும் தெரிந்தது. முதலில் தன்னைத் தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டும், பொறியியல் அறிவை வளர்த்துக்கொள்ளவேண்டும். இரவுநேர வகுப்பில் சேர்ந்தான்.

வகுப்பில் ஆசிரியர் ஷோகோ கிக்காய் காக்கு யோரன் என்னும் புத்தகத்தைப் பயன்படுத்து வதைப் பார்த்தான். இயந்திரங்கள் கட்டமைப்பு பற்றிய வழிகாட்டி நூல். அந்தப் புத்தகம் வாங்க முடிவு செய்தான். ஒரே ஒரு பிரச்சினை. விலை ஒரு யென். (இன்றைய நிலவரப்படி, 60 காசு). ஆனால், இந்தச் சொற்பப் பணம்கூட அவனிடம் இல்லை. நெஞ்சு நிறைய ஆசையும், தாய்ப்பாசமும் இருந்தால், பணம் ஒரு தடையா? வகுப்பு முடிந்தபின், மூங்கில் தட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பகுதிநேர இரவு வேலைக்குப் போனான். பகல் முழுக்க அப்பாவுக்கு உதவி, இரவில் வகுப்பு, வேலை என உடல் தளர்ந்தது. ஆனால், வைரம் பாய்ந்த உள்ளம் அத்தனையையும் தாங்கிக்கொள்ள வைத்தது. ஒரே மாதத்தில் ஸாகிச்சி புத்தகத்தை வாங்கிவிட்டான். அதில் வரும் சோதனைகளை வீட்டில் செய்துபார்க்க ஆரம்பித்தான்.

மகன் திறமையான தச்சராக வர வேண்டும் என்பது அப்பாவின் கனவு. கண்டுபிடிப்புக் கனவுகளில் அவன் சஞ்சரிப்பது அவருக்குப் பிடிக்கவில்லை. பலமுறை மகனை எச்சரித்தார். அவன் கேட்கவில்லை. ஒரு நாள். கோபத்தில் ஸாகிச்சியை வீட்டிலிருந்து வெளியே துரத்தி விட்டார். அவன் கலங்கவில்லை. ஒரு குடிசையை வாடகைக்கு எடுத்து அங்கே தங்கினான். கைத்தறிகளில் என்னென்ன முன்னேற்றங்கள் செய்யலாம் என்று தீவிர முயற்சியில் மனதை ஒருமுகப்படுத்தினான். நாள் முழுக்க விதவிதமான கைத்தறிகள் தயாரிப்பான். திருப்தி வராது. உடைப்பான். மனம் தளராமல் மாற்றங்கள் செய்வான். நேரத்தையும், பணத்தையும் இப்படி வீணாக்குகிறானே என்று ஊரே கேலி செய்தது. பிறரது விமர்சனங்களைப் பற்றிக் கவலைப்படாமல், கருமமே கண்ணாயினராக ஸாகிச்சி தன் முயற்சியில் தொடர்ந்தான். அவனுக்கு ஒரே ஆதரவு அம்மா தான். தினமும் மகனை வந்து பார்ப்பார். சாப்பாடு தந்துவிட்டுப் போவார்.

1890. டோக்கியோவில் சர்வதேச இயந்திரங்கள் கண்காட்சி நடந்தது. பன்னாட்டு நவீன இயந்திரங்களின் அணிவகுப்பு. ஸாகிச்சி போக ஆசைப்பட்டார். தன் சேமிப்பைத் திரட்டி அம்மா பணம் கொடுத்தார். சாக்லெட் கடைக்குப் போன குழந்தைபோல் ஸாகிச்சி மனமெல்லாம் குதூகலம். ஒவ்வொரு நாளும் கண்காட்சிக்குப் போனார். தயாரிப்பாளர்களைக் கேள்விகளால் குடைந்தார். பக்கம் பக்கமாகக் குறிப்புகள் எடுத்தார். தேடித் திரட்டிய அறிவை ஆராய்ச்சியில் பயன்படுத்தினார். டொயோடா கைத்தறி இயந்திரம் பிறந்தது. அரசாங்கம் அவருக்குக் காப்புரிமை தந்தது. வயது 24. ஆரம்பப் பள்ளி மட்டுமே படித்திருந்த ``படிக்காத மேதை”யின் மகத்தான சாதனை!

ஸாகிச்சியின் கண்டுபிடிப்பில் பல அனுகூலங் கள். அதுவரை இருந்த கைத்தறி இயந்திரங் களை இரண்டு கைகளாலும் இயக்கவேண்டும். ஆகவே, அதிக உடல் உழைப்பு தேவைப்பட்டது. நெய்த துணிகளின் தரமும் சீராக இல்லை. டொயோடா கைத்தறி இயந்திரத்தை ஒரே கையால் இயக்க முடிந்தது. 40 முதல் 50 சதவீதம் வரை அதிக உற்பத்தித் திறன். துணியின் தரமும் உயர்தரம். பொதுமக்களிடையே அமோக வரவேற்பு, விற்பனை.

திருப்தி அடையாதவர் ஸாகிச்சி மட்டும்தான். இன்னும் என்னென்ன செய்யலாம் என்று மனம் அலை மோதியது. அந்தக் காலகட்டத்தில் இங்கிலாந்திலும், அமெரிக்காவிலும் நீராவி யாலும், மின்சக்தியாலும் இயங்கும் இயந்திரங் கள் புழக்கத்துக்கு வந்துகொண்டிருந்தன. அற்புதமான உற்பத்தித் திறன் கொண்டவை. இத்தகைய விசைத்தறிகள் கண்டுபிடிக்கும் முயற் சியில் இறங்கினார். ஆரம்பம், சின்னத் தொழிற் சாலை. ஐந்து வருடக் கடும் முயற்சிகள் 1897 ஆம் ஆண்டில் பலன் தந்தன. மின்சக்தியால் இயங்கும் தறியைத் தயாரித்துவிட்டார்.

ஜப்பானின் பிரம்மாண்ட நிறுவனமான மிட்சுபிஷி, ஸாகிச்சியின் கண்டுபிடிப்பைப் பார்த் தார்கள். பிரமித்துப்போனார்கள். அவரோடு கூட்டுச் சேர்ந்து, விசைத்தறிகள் பயன்படுத்தும் ஜவுளித் தொழிற்சாலை தொடங்க முன் வந்தார் கள். ஸாகிச்சி தொழில் நுட்பம், இயந்திரங்கள், மிட்சுபிஷி பணம், மார்க்கெட்டிங் சாமர்த்தி யம். வெளிவந்தன இதுவரை ஜப்பான் பார்த் தேயிராத உயர்தரத் துணிகள். ஆனால், ஜப்பா னின் பொருளாதாரம் சரிவைச் சந்தித்துக் கொண்டிருந்தது. ஆகவே, இத்தனையும் விழலுக்கு பாய்ச்சிய நீராயின. மிட்சுபிஷி ஸாகிச்சி ஆலை மூடுவிழா கண்டது.

தொழிற்சாலை தோற்றிருக்கலாம். ஆனால் ஸாகிச்சி தோற்கவில்லை. விழுந்தவர் பன்மடங்கு ஆவேசத்தோடு எழுந்தார். தறிகளில் ஷட்டில் (தமிழில் ஓடக்கட்டை) என்னும் பாகம் உண்டு. குறுக்கு இழைகளை எடுத்துச் செல்லும் கருவி. இதைக் குறிப்பிட்ட உற்பத்திக்குப் பின் மாற்றவேண்டும். அப்போது, தறியை நிறுத்தவேண்டும். உற்பத்தி தடைப்படும். தறி ஓடிக்கொண்டிருக்கும்போதே ஷட்டிலை மாற்றும் வழியை ஸாகிச்சி கண்டுபிடித்தார். இது மாபெரும் தொழில்நுட்ப முன்னேற்றம்.

1926. ஸாகிச்சி, டொயோடா ஆட்டோமேட்டிக் லூம் ஒர்க்ஸ் என்னும் தொழிற்சாலை தொடங்கினார். உலகம் முழுக்க இவர்கள் தயாரித்த விசைத்தறிகள் வெற்றிக்கொடி நாட்டின. ஜப்பானியத் தொழிற்புரட்சியின் தந்தை என வரலாறு வாழ்த்துப் பாடியது.

கண்டுபிடிப்புகள், தொழில் வெற்றி, இவற்றைத் தாண்டி, ஸாகிச்சிக்குத் தனி இடம் உண்டு. அந்த இடம், அவருடைய `5 ஏன்கள் (5 Whys)’ கொள்கைக்காக. அப்படி என்ன சொல்கிறது இந்தச் சித்தாந்தம்?

பிசினஸில் சில பிரச்சினைகள் திரும்பத் திரும்ப வரும். அவற்றை வேரோடு கிள்ளும் வழி இது. பிரச்சினை வரும்போது ``ஏன் இது நடக்கிறது?'' என்று விசாரியுங்கள். ஒரு பதில் கிடைக்கும், அதோடு திருப்தி அடைந்துவிடாமல், ‘‘ஏன் இது நடக்கிறது?'' என்று இன்னும் நான்கு முறை விசாரியுங்கள். பதிலாகக் கிடைக்கும் ஐந்து காரணங்களுக்கும் தீர்வு காணுங்கள். மலைபோல் வரும் பிரச்சனைகள் பனியாகப் பறந்துவிடும் என்கிறார். லட்சக் கணக்கானவர்கள் பயன்படுத்திப் பலன் கண்டுவருகிறார்கள். உங்கள் தனி வாழ்க்கை, பிசினஸ் சிக்கல்களுக்கும் பயன்படுத்துங்களேன்?

தொடர்புக்கு: Slvmoorthy@gmail.com



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x