Published : 04 Jan 2014 11:09 AM
Last Updated : 04 Jan 2014 11:09 AM
சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம் தனது செயல்பாடுகளை வெளிநாடுகளிலும் பரப்ப திட்டமிட்டுள்ளது. பொதுக் காப்பீட்டில் ஈடுபட்டுள்ள இந்நிறுவனம் கனடா, மியான்மர், கத்தார் ஆகிய நாடுகளில் கிளைகளைத் தொடங்க முடிவு செய்துள்ளதாக நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஜி. சீனிவாசன் தெரிவித்தார்.
இந்தியாவில் நிறுவனத்தின் செயல்பாடுகளை 2,000 அலுவலகங்களாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் ஆயிரம் சிறிய ஒரு நிர்வாகியைக் கொண்ட அலுவலகமும் அடங்கும். விரிவாக்க நடவடிக்கையைச் செயல்படுத்த 1,100 புதியவர்களைத் தேர்வு செய்ய உள்ளதாகவும் அவர் கூறினார். இந்த ஆண்டு பிரீமியமாக வசூலாகும் தொகை ரூ. 15 ஆயிரம் கோடியை எட்டும் என்று கூறினார்.
கனடா, மியான்மர், கத்தார் ஆகிய நாடுகளில் கிளை அலுவலகங்களைத் தொடங்க உள்ளதாக அவர் கூறினார். வெளிநாடுகளில் உள்ள கிளைகள் மூலம் வசூலாகும் பிரீமியத்தின் அளவு மொத்த பிரீமிய அளவில் 20 சதவீதமாக உள்ளது. இதை அடுத்த மூன்று ஆண்டுகளில் இதை 25 சதவீதமாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
30 ஆண்டுகளுக்கு முன்பு நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம் கனடாவில் செயல்பட்ட வந்தது. இப்போது மீண்டும் அந்த லைசென்ஸை புதுப்பித்துக் கொண்டு அங்கு செயல்பட முடிவு செய்துள்ளதாக அவர் கூறினார்.
22 நாடுகளில் செயல்படும் நியூ இந்கியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் பிரீமியம் வருவாய் ரூ. 2,500 கோடியாகும்.
கடந்த நிதி ஆண்டில் நிறுவனத்தின் லாபம் ரூ. 200 கோடியாகும். வெளிநாடுகளில் கிளைகளைத் தொடங்குவதற்கான அரசின் அனுமதி மற்றும் காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையத்தின் (ஐஆர்டிஏ) ஒப்புதலுக்காகக் காத்திருப்பதாகவும் அவர் கூறினார்.
மியான்மரில் முதல் கட்டமாக பிரதிநிதி அலுவலகம் தொடங்கப்படும். அந்நாட்டு அரசு வெளிநாட்டு நிறுவனங்களை அனுமதிக்கும்போது அங்கு கிளை தொடங்கப்படும் என்று குறிப்பிட்டார். இந்த ஆண்டு 700 சிறிய அலுவலகங்களைத் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. 10 ஆயிரம் மக்கள் வசிக்கும் சிறு நகரங்களில் அலுவலகங்களைத் தொடங்க வேண்டும் என்ற அரசின் வழிகாட்டுதலின்படி விரிவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
கடந்த ஆண்டு 300 சிறிய அலுவலகங்கள் மூலம் திரட்டப்பட்ட பிரீமியம் வருவாய் ரூ. 200 கோடியாகும். டிசம்பர் மாதம் வரை நிறுவனம் திரட்டிய பிரீமியம் வருமானம் ரூ. 8,400 கோடியாகும். நடப்பு நிதி ஆண்டில் 20 ஆயிரம் புதிய ஏஜென்டுகளை நியமிக்க உள்ளதாகவும் அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT