Published : 18 May 2017 10:25 AM
Last Updated : 18 May 2017 10:25 AM
இந்த ஆண்டு உலக பத்திரிகை சுதந்திர தினத்தையொட்டி (மே 3) நியூசிலாந்து நாட்டிலிருந்து வெளியான ஒரு செய்தி, உலகமெங்கும் வாசகர்களைத் திகைக்க வைத்தது. அந்நாட்டின் ‘ஃபேர்ஃபாக்ஸ் மீடியா’ என்ற அச்சுப் பத்திரிகையும் ‘நியூசிலாந்து மீடியா என்டெர்டெய்ன்மென்ட்’ என்ற பத்திரிகையும் இணையக் கூடாது என்று அந்நாட்டு ‘வர்த்தக ஆணையம்’ உத்தரவிட்டது. வருவாயும் லாபமும் குறைவதால் தங்களுடைய நிறுவனங்களின் நலனைக் கருதி, ஒன்றாக இணைந்துவிட அவ்விரு பத்திரிகைகளும் முடிவெடுத்திருந்தன. வர்த்தக ஆணையம் ஏன் அனுமதிக்கவில்லை? அவ்வாறு இணைந்தால் நியூசிலாந்து நாட்டின் 90% பத்திரிகைச் சந்தையை அது வளைத்துப் போட்டுவிடும், அது ஏகபோக வர்த்தகக் கட்டுப்பாட்டுக் கோட்பாட்டுக்கு எதிரானது என்பதால் அனுமதிக்க முடியாது என்றது ஆணையம்.
வலுவான, சுதந்திரமான ஜனநாயகத்தில் ஒரு ஊடகத்துக்கு மட்டும் இப்படி ஏகபோக செல்வாக்கு ஏற்பட்டுவிடக்கூடாது என்று ஆணையத்தின் தலைவர் மார்க் பெர்ரி கூறியிருக்கிறார். ஒரு நாட்டின் 90% வாசகர்கள் ஒரே ஒரு பத்திரிகையைத்தான் படிப்பார்கள் என்றால் மெத்தனம் காரணமாக அதன் தரம் குறைந்துவிடும், நாட்டின் பல்வேறுபட்ட மக்களின் குரல்களை ஒலிப்பதற்குப் பதில், பெரும்பான்மையாக உள்ள ஒரே இனத்தவரின் குரல் மட்டுமே அதில் எதிரொலிக்கும் என்றார்.
செய்தித்தாள்களின் பயன்
செய்தித்தாள்கள் பலதரப்பட்ட செய்திகளைத் தாங்கி வருகின்றன. கல்வி புகட்டுவது, வழிகாட்டுவது, பொழுதுபோக்க உதவுவது என்று பத்திரிகைகளுக்கு மூன்றுவிதமான கடமைகள் இருக்கின்றன. விளம்பரங்களில் கூட நுகர்வோர்களுக்குப் பல செய்திகள் இருக்கின்றன. இதை அனுபவத்தில் உணர்ந்தவர்கள் பத்திரிகைகளை வாங்குவதற்கு ஆகும் செலவை, செலவாகக் கருதாமல் அறிவு வளர்ச்சிக்கான முதலீடாகவே கருதுகிறார்கள். பத்திரிகைகள் நாட்டின் அரசியல் நடப்பை விவரிக்கும்போதே எதிர்கால மாற்றங்களுக்கும் வாசகர்களைத் தயார்படுத்துகின்றன. அரசியல் கட்சிகளின் தலைவர்களும் ஆட்சியாளர்களும் எப்படி நடந்துகொள்கின்றனர், அவர்களுடைய கொள்கைகளும் பேச்சும் எப்படிப்பட்டவை என்று தெரிவிக்கும்போதே அடுத்து எடுக்க வேண்டிய முடிவுகளையும் கோடிட்டு காட்டுகின்றன. இதனால் ஆட்சியாளர்களும் அரசியல்வாதிகளும் தங்களுடைய நடவடிக்கை களை சுய தணிக்கைக்கு உள்படுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்படு கின்றனர். இல்லாவிட்டால் மக்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய நிலையைப் பத்திரிகைகள் ஏற்படுத்துகின்றன. இதன் மூலம் அவர்களைப் பொறுப்புடன் செயல்பட வைக்கின்றன.
அமெரிக்காவில் விற்பனை சரிவு
அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் பத்திரிகைகளின் விற்பனை சரிந்து கொண்டிருக்கிறது. தொலைக்காட்சிகள், சமூக ஊடகங்கள் போன்றவற்றின் போட்டி கடுமையாக இருக்கிறது. அச்சிடப்படும் செய்தித்தாள்களில் ஆசிரியர் குழாம், நிருபர்கள், புகைப்படக்காரர்கள் என்ற அடிப்படை பத்திரிகையாளர்கள் அதிக எண்ணிக்கையில் பணிபுரிகின்றனர். அத்துடன் மாவட்ட, வட்ட, மாநில வாரியாகவும் நிருபர்கள் நியமிக்கப்படுகின்றனர். அச்சிடும் மை, பத்திரிகைத் தாள், இயந்திரங்களின் பராமரிப்புச் செலவு, மின்சாரம், விநியோக வாகனங்களுக்கான எரிபொருள் செலவு, பத்திரிகை விநியோகத்துக்கான செலவு, விற்பனையாளர்களுக்கு தரகு என்று ஏராளமாகச் செலவிட நேர்கிறது. பத்திரிகைகளின் விற்பனை விலை என்பது இச் செலவுகளில் சிலவற்றை மட்டும் ஈடுகட்டத்தான் போதுமானதாக இருக்கிறது. விநியோகச் செலவு, தரகு போன்றவற்றைச் சேர்த்தால் பத்திரிகைகளின் விற்பனை விலையை மேலும் உயர்த்தியாக வேண்டும். சக பத்திரிகைகளின் போட்டி காரணமாக விலையை ஓரளவுக்கு மேல் உயர்த்த முடியாத நெருக்கடியும் ஏற்பட்டுவிடுகிறது. எனவே விளம்பர வருமானத்தையே அதிகம் சார்ந்து நிற்க வேண்டியிருக்கிறது. உலகம் முழுக்க இதே பொது நிலைதான்.
பத்திரிகைகளில் அச்சிடப்படும் விளம்பரங்கள் மூலம் கிடைத்த வருவாயும் இப்போது போட்டி காரணமாக குறைந்துவிட்டது. அத்துடன் தொலைக்காட்சிகள் ஒரே நாளில் பலமுறை அதே விளம்பரத்தைத் திரும்பத்திரும்ப ஒளிபரப்பும் வாய்ப்பு இருப்பதால் அதிகம் பேரை ஈர்க்க முடிகிறது. நுகர்பொருள் விளம்பரங்கள் பத்திரிகைகளுக்கு இதனாலேயே குறைந்து வருகின்றன. வரி விளம்பரங்கள் போன்றவற்றை இணைய தளம் போன்ற சமூக ஊடகங்கள் கவர்ந்துவிடுகின்றன. அரசு விளம்பரங்கள், அரசு ஆதரவுப் போக்கை எடுக்கும் பத்திரிகைகளுக்கே அதிகம் கிடைக்கின்றன. அரசை ஆதரித்து எழுதத் தொடங்கினால் நடுநிலைமையிலிருந்து தவறுவதுடன் பத்திரிகைச் சுதந்திரத்தை அடகு வைப்பதாகிவிடுகிறது. இந்தக் காரணங்களால்தான் வருமானத்துக்காக லட்சியத்தை விட்டுக்கொடுக்க முடியாமல் பல பத்திரிகைகள் திணறுகின்றன.
ஆசியாவின் அதிசயம்
ஆசியா, ஜப்பான், லத்தீன் அமெரிக்க நாடுகளில் மட்டுமே கடந்த சில ஆண்டுகளில் செய்தித்தாள்களின் விற்பனை அதிகரித்திருக்கிறது. 2005-2009 காலத்தில் இந்தியாவில் பத்திரிகைகளின் விற்பனை 44% அதிகரித்தது. புதிதாக 2,700 பத்திரிகைகள் தோன்றி மொத்தப் பத்திரிகைகளின் எண்ணிக்கை 74,000-க்கும் மேல் அதிகரித்தன. உலகில் அதிக எண்ணிக்கையில் விற்கப்படும் 100 மிகச் சிறந்த தினசரிகளில் 74 ஆசியாவில்தான் விற்கப்படுகின்றன. அதில் இந்தியாவின் பங்கு மட்டும் 62!
பிரிட்டனைச் சேர்ந்த பெரிய பத்திரிகை அதிபரான ரூபர்ட் முர்தோச் ஒரு முறை தன் னுடைய பத்திரிகைகளை, ‘தங்கம் குவிக்கும் ஆறுகள்’ என்று கர்வத்துடன் வர்ணித்தார். பிறகு நிலைமை மாறி, போட்டி அதிகரித்து விற்பனை சரிந்து நஷ்டம் ஏற்படத் தொடங்கியதும், ‘ஆறுகளும் வற்றுவது உண்டு’ என்றார். தொலைபேசி ஒட்டுக் கேட்பு மூலம் செய்திகளைத் திரட்டியது அம்பலமானதால் அவப் பெயர் ஏற்பட்டு ‘நியூஸ் ஆஃப் த வேர்ல்ட்’ என்ற பத்திரிகையை அவர் மூட நேர்ந்தது தனிக் கதை.
பத்திரிகைகளின் விற்பனை குறைந்து ஒவ்வொரு பத்திரிகையாக மூடப்பட்டால் முதலில் மகிழ்வது அரசியல்வாதிகள், அதிலும் குறிப்பாக ஆளும் கட்சிக்காரர்களாகத்தான் இருப்பார்கள். ஏனென்றால் ஊழல்களை அம்பலப்படுத்துவதில் அச்சுப் பத்திரிகைகள்தான் முன்னிலை வகிக்கின்றன.
இணைய தளங்களில் செய்திகள் மட்டுமல்ல பாட சம்பந்தமான தகவல்கள் கூட கொட்டிக் கொண்டே இருக்கின்றன. “ஒரு நாளில் மட்டும் உலக இணைய தளங்கள் அனைத்திலும் சேர்க்கப்படும் கல்வி தொடர்பான தகவல்களைப் படித்து முடிக்க ஒருவருக்கு 116 ஆண்டுகள் தேவைப்படும்” என்று டேவிட் பொல்லியர் என்ற அறிவியல் பத்திரிகையாளர் தெரிவிக்கிறார்!
2043-வது ஆண்டின் முதல் காலாண்டுக்குள் உலகில் செய்தித் தாள்களே இருக்காது என்று பிலிப் மெய்யர் என்பவர், ‘மறையும் செய்தித்தாள்’ என்ற தன்னுடைய நூலில் எச்சரிக்கிறார். உலகம் அழியும் என்ற தீர்க்கதரிசன வாசகம் போல இது இருக்கிறது. செய்தித்தாள் என்ற அச்சு வடிவம் மாறி, வேறு வடிவங்களில் தொடரும் என்று இதற்குப் பொருள்.
“நல்ல வேளை அச்சுப் பத்திரிகைகள் முதலில் வந்து, செயற்கைக் கோள் துணையுடன் ஒலி-ஒளிபரப்பும் ஊடகங்களும் இணையதள சமூக வலைதளங்களும் பின்னால் வந்தன; இல்லாவிட்டால் அச்சு ஊடகம் பிறந்தே இருக்காது” என்கிறார் அமெரிக்கத் தொழிலதிபர் வாரன் பஃபெட்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT