Published : 10 Jan 2014 12:00 AM
Last Updated : 10 Jan 2014 12:00 AM
கடந்த 11 ஆண்டுகளில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு முதல் முறையாக கார் விற்பனை கடந்த ஆண்டில் (2013) சரிவைச் சந்தித்துள்ளது. பொருளாதார தேக்க நிலை காரணமாக ஒட்டுமொத்தமாக 9.59 சதவீத அளவுக்கு கார் விற்பனை சரிந்துள்ளது.
இந்திய ஆட்டோமொபைல் தொழில்துறை சங்கம் (எஸ்ஐஏஎம்) வெளியிட்டுள்ள அறிக்கையில் 2012-ம் ஆண்டில் 19,98,703 கார்கள் விற்பனையானதாகவும், இது கடந்த ஆண்டில் (2013) 18,07,011 கார்கள் மட்டுமே விற்பனை ஆனது.
2002-ம் ஆண்டுக்குப் பிறகு இப்போதுதான் முதல் முறையாக கார் விற்பனை சரிவைச் சந்தித்துள்ளது. இதற்கு பொருளாதார தேக்க நிலையே காரணம் என்று எஸ்ஐஏஎம் இயக்குநர் விஷ்ணு மாத்துர் தெரிவித்துள்ளார்.
அதிகரித்து வரும் பணவீக்கம், உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலை, கடனுக்கான வட்டி விகிதம் அதிகரிப்பு இதனால் காரை வைத்திருப்பது மிகுந்த செலவு பிடிக்கும் விஷயமாகிவிட்டது. இதனால் கார் விற்பனை சரிந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
கடந்த 17 மாதங்களில் அக்டோபர் 2012 மற்றும் ஆகஸ்ட், செப்டம்பர் 2013 ஆகிய மாதங்களில் மட்டுமே கார் விற்பனை சற்று அதிகரித்திருந்ததாக அவர் கூறினார்.
சுரங்க நடவடிக்கைகள் முடங்கிப் போனதால் கனரக வாகனங்களின் விற்பனை கடுமையாகப் பாதிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். மேலும் கட்டமைப்பு பணிகள் முடங்கிப் போனதால் கனரக வாகனங்கள் விற்பனை முடங்கிப் போனதாக அவர் கூறினார்.
கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரையான காலத்தில் புதிதாக 22 கார்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. 40 புதிய மேம்படுத்தப்பட்ட ரகங்கள், 10 புதுப்பிக்கப்பட்ட மாடல்களும் சந்தைக்கு வந்தன.
கடந்த ஆண்டு டிசம்பரில் உள்நாட்டில் கார் விற்பனை 4.52 சதவீதம் சரிந்து மொத்தம் 1,32,561 வாகனங்கள் விற்பனையாயின. 2012-ம் ஆண்டு டிசம்பரில் 1,38,835 வாகனங்கள் விற்பனையாயின.
அதிக எண்ணிக்கையில் கார்களை உற்பத்தி செய்யும் மாருதி சுஸுகி விற்பனை 6.4 சதவீதம் அதிகரித்து 73,155 ஆக உயர்ந்தது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் 68,729 கார்கள் விற்பனையாயின. இதேபோல ஹூண்டாய் கார் நிறுவனத்தின் விற்பனை டிசம்பரில் 6.2 சதவீதம் அதிகரித்து 28,320 ஆக உயர்ந்தது.
டாடா மோட்டார்ஸ் நிறுவன விற்பனை 41 சதவீதம் சரிந்து 6,537 கார்கள் மட்டுமே விற்பனையானது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் 11,257 கார்கள் விற்பனையாகியிருந்தது. ஹோண்டா கார் 29.27 சதவீத விற்பனை அதிகரித்து 26,651 கார்கள் விற்பனையானது.
மஹிந்திரா நிறுவன கார் விற்பனை 26.93 சதவீதம் சரிந்து 15,881 கார்கள் விற்பனையாகியிருந்தது. முந்தைய ஆண்டு மொத்தம் 21,735 கார்கள் விற்பனையானது.
எஸ்ஐஏஎம் வெளியிட்டுள்ள தகவலில் மோட்டார் சைக்கிள் விற்பனை டிசம்பர் மாதத்தில் 4.24 சதவீதம் சரிந்துள்ளது. மொத்தம் 8,08,281 வாகனங்கள் விற்பனையாகியிருந்தன. 2012-ம் ஆண்டு டிசம்பரில் மொத்தம் 8,44,046 வாகனங்கள் விற்பனையாகியிருந்தது குறிப் பிடத்தக்கது.
ஹீரோ மோட்டோகார்ப் விற்பனை 3.88 சதவீதம் சரிந்து 4,53,532 வாகனங்கள் விற்பனையாகியிருந்தன.
ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர்ஸ் இந்தியா நிறுவனத்தின் மோட்டார் சைக்கிள் விற்பனை 22 சதவீதம் அதிகரித்து 1,15,537 ஆக உயர்ந்திருந்தது.
டிசம்பரில் மொத்த மோட்டார் சைக்கிள் விற்பனை 2.32 சதவீதம் அதிகரித்து மொத்தம் 46,757 வாகனங்கள் விற்பனையாயின.
கனரக வாகனங்களின் விற்பனை 25.53 சதவீதம் சரிந்து மொத்தம் 46,757 வாகனங்கள் விற்பனை யாகியிருந்தது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் 62,786 வாகனங்கள் விற்பனையாகியிருந்தது.
மொத்த வாகன விற்பனை 1.21 சதவீதம் சரிந்து மொத்தம் 14,31,632 வாகனங்கள் விற்பனை யாகியுள்ளன. முந்தைய ஆண்டு டிசம்பரில் 14,49,203 வாகனங்கள் விற்பனையானதாக எஸ்ஐஏஎம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT