Published : 23 Dec 2013 12:00 AM
Last Updated : 23 Dec 2013 12:00 AM
சென்றவாரம் என்.சி.டி (NCD – NON CONVERTIBLE DEPENTURES) பற்றி பார்த்தோம். இவ்வாரம் வரியில்லா பாண்டுகள் (TAX FREE BONDS) குறித்துப் பார்ப்போம். மத்திய அரசினால் 2011-12 நிதி ஆண்டில், அடிப்படை கட்டுமானத் துறையில் (Infrastructure) முதலீட்டை ஊக்குவிப்பதற்காக, இந்த டேக்ஸ் ஃப்ரீ பாண்டுகள் கொண்டுவரப்பட்டன. அந்த ஆண்டு ரூ 30 ஆயிரம் கோடி வரை வெவ்வேறு நிறுவனங்கள் வெளியிட அரசாங்கம் அனுமதித்தது. இதே பாண்டுகளை 2012-13 நிதி ஆண்டில் ரூ 60 ஆயிரம் கோடிக்கு வெளியிட அரசாங்கம் அனுமதித்தது. இதுவே நடப்பு நிதி ஆண்டில் ரூ 50 ஆயிரம் கோடிக்கு வெளியிட அரசாங்கம் அனுமதித்துள்ளது. என்.டி.பி.சி (NTPC), என்.எச்.பி.சி (NHPC), ஐ.ஐ.எஃப்.சி.எல் (IIFCL), பி.எஃப்.சி (PFC), ஆர்.ஈ.சி (REC), ஹட்கோ(HUDCO), போன்ற நிறுவனங்களையும் இன்னும் சில நிறுவனங்களையும் டேக்ஸ் ஃப்ரீ பாண்டுகளை வெளியிட அரசாங்கம் அனுமதித்துள்ளது.
டேக்ஸ் ஃப்ரீ பாண்டுகள் என்றால் என்ன?
டேக்ஸ் ஃப்ரீ பாண்டுகள் ஒரு நிரந்தர வருமானம் தரக்கூடிய ரிஸ்க் ஏதும் இல்லாத கடன் திட்டம் சார்ந்த முதலீட்டு உபகரணமாகும். இவ்வகையான பாண்டுகளில் முதலீடு செய்யும் போது, அதிலிருந்து வரும் வட்டி வருமானத்திற்கு முதலீட்டாளர்கள் வருமான வரி கட்டத் தேவையில்லை. ஆனால் இதில் முதலீடு செய்யும் தொகைக்கு (அசலுக்கு) வருமான வரி விலக்கு கிடையாது. உச்ச வருமான வரம்பில் இருப்பவர்களுக்கு இது ஒரு நல்ல முதலீட்டு உபகரணமாகும். பொதுவாக எல்லா நிறுவனங்களும் வெளிநாடு வாழ் இந்தியர்களை டீபாஃல்டாக (DEFAULT) முதலீடு செய்ய அனுமதிப்பதில்லை. ஆகவே எந்த வெளியீட்டில் என்.ஆர்.ஐ-க்கள் அனுமதிக்கப்படுகிறார்களோ, அவற்றில் மட்டுமே முதலீடு செய்ய முடியும். மேலும் என்.ஆர்.ஈ காசோலை மூலமாக (அதாவது வெளிநாட்டில் சம்பாதித்த பணம் மூலமாக) இந்த பாண்டுகளை வாங்க முடியாது.
வெளிநாட்டு வாழ் இந்தியர் ஒருவர் என்.ஆர்.ஓ டெபாஸிட்டில் முதலீடு செய்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவர் உச்சகட்ட வருமான வரி வரம்பில் உள்ளார் என்றும் வைத்துக்கொள்வோம். அவர் என்.ஆர்.ஓ டெபாஸிட்டில் வங்கிகளில் முதலீடு செய்தால் அவருக்கு ஆண்டிற்கு சுமார் 9% கிடைக்கும். 30% வருமான வரியை கழித்து விட்டால் அவருக்கு கையில் நிகராக நிற்பது 6.3% ஆகும். அதே நபர் டேக்ஸ் ஃப்ரீ பாண்டுகளில் முதலீடு செய்தால் அவருக்கு கையில் கிடைப்பது நிகராக 9% ஆகும். டேக்ஸ் ஃப்ரீ பாண்டுகள் தற்போது ஆண்டிற்கு நிறுவனத்தைப் பொறுத்து கிட்டத்தட்ட 9% வருவாயைத் தருகின்றன. ஆனால் இந்த வட்டி வருமானத்திற்கு எந்த விதமான வருமான வரியும் என்.ஆர்.ஐ-கள் செலுத்தத்தேவையில்லை. வரிக்கு முன் பார்க்கும் பொழுது இந்த 9% வருமானம், 30% வருமான வரி எல்லையில் இருப்பவர்களுக்கு, 12.86%-ற்குச் சமம். இது தான் இந்த பாண்டுகளில் என்.ஆர்,ஐ-களுக்கு உள்ள பெரிய கவர்ச்சி ஆகும் - அதுவும் அரசாங்கம் சார்ந்த நிறுவனங்களில் இருந்து! நீங்கள் ரிஸ்க் எடுக்க விரும்பாமல், வரியும் செலுத்த விரும்பாமல், ஒரு நிரந்தர வருமானத்தை எதிர்பார்த்தீர்களேயானால் அதற்கு மிகச் சரியான உபகரணம் டேக்ஸ் ஃப்ரீ பாண்டுகளே ஆகும். ஆகவே இந்தியாவில் என்.ஆர்.ஓ சேமிப்பு கணக்குகளில் தூங்கிக்கொண்டிருக்கும் உங்கள் பணத்தை ஒரு நீண்ட கால நோக்கோடு இந்த பாண்டுகளில் தாராளமாக முதலீடு செய்யலாம். இந்த பாண்டுகள் 10, 15, 20 ஆண்டு காலங்களுக்கு வெளியிடப்படுகின்றன.
இந்த பாண்டுகளை ஒருவர் சர்ட்டிபிஃகேட் (CERTIFICATE) வடிவத்திலோ அல்லது தங்களது டீமேட் கணக்கிலோ வைத்துக் கொள்ளலாம். என்.ஆர்.ஐ இந்த பாண்டுகளை என்.ஆர்.ஓ டீமேட் (NRO Demat) கணக்குகளில் மட்டுமே வைத்துக்கொள்ளமுடியும். ஒவ்வொரு ஆண்டும் இந்த பாண்டுகளை வெளி யிடும் நிறுவனங்கள், முதலீட்டாளர் களுக்கு வட்டியைச் செலுத்தி விடுகின்றன. சில்லறை முதலீட்டாளர்களுக்கென்று சற்று கூடுதல் வட்டி கொடுக்கப்படுகிறது. அந்த கூடுதல் வட்டியை அனுபவிப்பதற்கு விண்ணப்பம் ரூ.10 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். இந்த பாண்டுகளில் AAA ரேட்டிங் கொண்டுள்ள பாண்டுகளாக பார்த்து முதலீடு செய்வது நல்லது. AA ரேட்டிங்கிற்கு கீழ் உள்ள பாண்டுகளில் முதலீடு செய்ய வேண்டாம். இந்த பாண்டுகள் பொதுவாக மத்திய அரசாங்க நிறுவனங்களால் வெளியிடப்படுகிறது என்பதால் நல்ல பாதுகாப்பான முதலீடாக இருக்கிறது. இந்த பாண்டுகளில் உள்ள தீமை என்னவென்றால் நீண்ட காலத்திற்கு லாக்-இன் (lock-in) செய்வதே ஆகும். இதை ஈடு கட்டுவதற்காக இந்த பாண்டுகள் பங்குச் சந்தையில் வர்த்தகமாகின்றன. வட்டி குறையும் காலங்களில் இந்த பாண்டுகளில் கேபிடல் அஃப்ரிசியேஷனுக்கும் (Capital Appreciation) வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சொக்கலிங்கம் பழனியப்பன் - prakala@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT