Published : 06 Mar 2014 11:51 AM
Last Updated : 06 Mar 2014 11:51 AM

ரூ. 5 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அனுமதி

பிரதமரின் திட்ட கண்காணிப்பு குழு (Project Monitoring Group - பி.எம்.ஜி) ரூ. 5 லட்சம் கோடி மதிப்பிலான 147 திட்டங்களுக்கு அனுமதி கொடுத்திருக்கிறது. இந்தத் திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஒப்புதல் என 200க்கும் மேற்பட்ட பிரச்சினைகள் இருந்தன. அதை களைந்து 147 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது என்று இந்தக் குழுவின் தலைவர் அனில் ஸ்வரூப் இந்திய தொழிலகக் கூட்டமைப்பு கருத்தரங்கில் தெரிவித்தார்.

இந்த 147 திட்டங்களில் 100 திட்டங்களின் மதிப்பு ரூ. 3.1 லட்சம் கோடியாகும். இதில் பெரிய திட்டங்கள் அனைத்தும் மின் உற்பத்தி சார்ந்த திட்டங்கள்தான். சுற்றுச்சூழல் அமைச்சகம் வரும் ஜூலை மாதத்தில் மின்னணு மயமாக்கப்படும். இதுபோலவே மற்ற அமைச்சகத் தையும் மின்னணுமயமாக்குவது குறித்து பேச்சு நடத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

இந்தக் குழுவின் நோக்கமே அனைத்து தகவல் களும் இணையத்தில் கிடைக்கவேண்டும் என்பதுதான். விரைவில் நடக்க இருக்கும் தேர்தலுக்கும் திட்டங்கள் அனுமதி அளிப்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இதற்கான கொள்கை முடிவுகள் ஏற்கெனவே எடுக்கப்பட்டுவிட்டன. இது வழக்கமாக நடக்கும் வேலைதான். அதனால் எங்கேயும் தடைபடாது, அதே சமயத்தில் இதை யாரும் எதிர்க்கவும் மாட்டார்கள் என்று ஸ்வரூப் தெரிவித்தார்.

13 மாநிலங்கள் இதே போல பி.எம்.ஜி.யை அமைக்க ஒப்புதல் தெரிவித்திருக்கிறார்கள். இந்த இணையதளத்தை மாநிலங்களுடன் பகிர்ந்துக் கொள்ள தயாராக இருக்கிறோம். இதன் மூலம் 1,000 கோடி ரூபாய்க்கு கீழான திட்டங்களை கண்காணிக்க முடியும் என்றார். 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 435 திட்டங்கள் கடந்த சில ஆண்டுகளாக எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருக்கிறது என்று தெரிவித்தார்.திட்டங்களை விரைவுபடுத்த கடந்த ஜூன் மாதம் இந்த குழு அமைக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x