Published : 24 Feb 2014 12:00 AM
Last Updated : 24 Feb 2014 12:00 AM
சர்வதேச பன்னாட்டு நிதியத்தில் ஒதுக்கீடு மற்றும் நிர்வாக நடைமுறைகளில் சீர்திருத்தம் மேற்கொள்ளக் கோரும் தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு அமெரிக்கா தடையாக இருப்பதற்கு ஜி-20 நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் ஜி-20 மாநாடு இரு நாள்கள் நடைபெற்றது. மாநாட்டின் நிறைவில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
அடுத்த 5 ஆண்டுகளில் ஜி-20 உறுப்புநாடுகளின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி)யை 2 சதவீதத்துக்கு மேல் உயர்த்த ஒருங்கிணைந்து செயல்படுவோம். இதற்குத் தேவைப்படும் கொள்கை கள் வகுக்கப்படும்.
இதன் மதிப்பு 2 லட்சம் கோடி அமெரிக்க டாலர்கள் அளவுக்கு இருக்கும். இந்த வளர்ச்சி மூலம் குறிப்பிடத்தக்க வகையில் கூடுதல் வேலைவாய்ப்புகள் உருவாகும். ஜிடிபி வளர்ச்சி இலக்கானது, முதலீடுகளை அதிகரிப்பது மற்றும் வர்த்தக மேம்பாடு, வேலைவாய்ப்பை அதிகரித்தல் ஆகியவற்றின் மூலம் எட்டப்படும். அதுவரை தன்னிறைவு அடைந்ததாகக் கருதப்படமாட்டாது.
சர்வதேச பன்னாட்டு நிதியத்தில், ஒதுக்கீடு நிர்வாக சீர்திருத்தம் மேற்கொள்ள 2010-ம் ஆண்டு ஒப்புக்கொள்ளப்பட்டது. மேலும் ஒதுக்கீட்டின் மீதான 15-வது பொது ஆய்வு 2014-ம் ஆண்டு நிறைவுபெறவில்லை. இதற்கு அமெரிக்காவின் முட்டுக்கட்டையே காரணம். இது மிகுந்த கவலையளிப்பதாக உள்ளது.
2010-ம் ஆண்டு சீர்திருத்த முடிவுகளை அமல்படுத்துவதே ஜி-20 நாடுகளின் முன்னுரிமை இலக்காக இருக்கும். ஜி-20 நாடுகளின் அடுத்த கூட்டம் வரும் ஏப்ரலில் நடைபெறும். அதற்குள்ளாக இச்சீர்திருத்தங்களை மேற்கொள்ள அமெரிக்காவை இக்கூட்டமைப்பு வலியுறுத்துகிறது.
வரும் 2015 இறுதிக்குள் ஜி-20 உறுப்புநாடுகளுக்கு இடையே வரி தொடர்பான விவரங்கள் தன்னியல்பாக பகிர்ந்து கொள்ளப்படும் என எதிர்பார்க்கிறோம். சீர்திருத் தங்கள் கடினமானது என்பதை உணர்ந் திருக்கிறோம். பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பை அதிகரிக்க வேண்டியுள்ளது. இதற்காக ஜி-20 நாடுகளில் முதலீட்டை ஊக்குவிக்கவும், வர்த்தகம், தொழில்போட்டி மற்றும் வேலை வாய்ப்புகளை அதிகரிக்கவும் உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் கருத்துகளையும், கவலைகளையும் முழுமையாகப் பிரதிபலிக்கும் வகையில் மாநாட்டின் அறிக்கை அமைந்துள்ளது என மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:
வளரும் நாடுகளின் கவலைகள் ஜி-20 மாநாட்டில் அங்கீகரிக்கப் பட்டுள்ளன. வளரும் நாடுகளின் கவலைகளை அமெரிக்கா கருத்தில் கொள்ள வேண்டும். நிதி ஊக்குவிப்புகளை அமெரிக்கா திரும்பப் பெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளைக் கேட்டுக் கொள்வதெல்லாம், அதன் நிதிக் கொள்கைகள் இன்னும் எளிதில் கணிக்கக்கூடிய அளவுக்கு இருக்க வேண்டும். அமெரிக்க பெடரல் வங்கியின் நடவடிக்கைகளால் வளரும் நாடுகளிலிருந்து முதலீடுகள் திரும்பப்பெறப்படுகின்றன; அந்நாடுகளின் பண மதிப்பில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
ஜி-20 நாடுகளின் தலைமை வங்கிகள் அனைத்தும் நிதிக் கொள்கைகளை வகுப்பதில் கவனமாக இருக்கின்றன. தகவல் பரிமாற்றம் தெளிவாக இருக்க வேண்டும் என்பதிலும், அது உலக பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதிலும் கவனமாக இருக்கின்றன என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT