Last Updated : 26 Feb, 2017 12:35 PM

 

Published : 26 Feb 2017 12:35 PM
Last Updated : 26 Feb 2017 12:35 PM

எண்ணெய் வள நாடான சவூதி அரேபியாவில் கேள்வி குறியாகும் வெளிநாட்டு ஊழியர்களின் எதிர்காலம்?

17 வருடம் தனது குடும்பத்தினருடன் சவூதி அரேபியாவில் வசித்து வந்த டொமினிக் ஸ்டெக் என்பவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் சொந்த நாடான ஜெர்மனிக்கு திரும்பச் செல்ல இருக்கிறார். ஒரு குடும்பம் தனது சொந்த நாட்டுக்கு திரும்ப போவது ஒரு சாதாரண செய்தியாக கடந்து போய்விட முடியாது.

வலுவான சமூக காரணங்களோ அல்லது பொருளாதார காரணங்களோ இல்லாமல் ஒரு இடப் பெயர்வு நடந்தேறி விடாது. ஆனால் செல்வந்தர்கள் வசிக்கும் சவூதி அரேபியாவில் இருந்து இடம்பெயர்ந்தார் என்ற செய்தி கொஞ்சம் யோசிக்க வைத்தது.

2014-ம் ஆண்டு பாதியில் இருந்து சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை சரிவைக் கண்டதால் பட்ஜெட்டில் மிகப் பெரிய அளவுக்கு பற்றாக்குறை ஏற்பட்டது. மேலும் தனியார் நிறுவனங்களுக்கு பில்லியன் டாலருக்கு மேல் கடன் கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதுமட்டுமல்லாமல் தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை சரிவைக் கண்டு வருவதால் சவூதி அரேபியாவின் பொருளாதார வளர்ச்சியும் கேள்விக் குறியாகி வருகிறது.

பொருளாதார வளர்ச்சி குறைந்து வருவதன் காரணமாக மிக உயரிய பொறுப்பில் இருக்கும் ஊழியர்களின் எதிர்காலம் கேள்விகுறியாகி வருகிறது. குறிப்பாக வெளிநாட்டு ஊழியர்களின் சம்பளத்தை குறைத்து வருகின்றனர். மேற்கத்திய நாடுகளில் இருந்து வந்த ஊழியர்களை பணியில் இருந்து நீக்கமும் செய்து வருகின்றனர். சொந்த மக்களுக்கு சவூதி அரேபியா வேலை தருவதற்கான கட்டாயமும் ஏற்பட்டுள்ளது. இதற்கான முயற்சிகளையும் சவூதி அரசு மேற்கொண்டு வருகிறது.

சமீபத்திய அதிகாரப்பூர்வ தகவல்படி கிட்டத்தட்ட 90 லட்சம் வெளிநாட்டு ஊழியர்கள் சவூதி அரேபியாவில் பணிபுரிந்து வருகின்றனர். ஆனால் இதுவரை அல்லாத அளவுக்கு பொருளாதார தேக்கம் இருப்பதால் பணியிலிருந்து நீக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக சவூதி பின்லேடின் குழுமம் மட்டும் சமீபத்தில் ஏழை நாடுகளில் இருந்து வந்த 70,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்திருக்கிறது.

``மக்கள் திரும்ப அவரவர் நாட்டுக்கே செல்கின்றனர். ஏனெனில் அவர்களிடம் காண்ட்ராக்ட் ஏதும் இல்லை. காண்ட்ராக்ட் புதுபித்து தரப்படவும் இல்லை. விற்பனை அளவும் மிக நெருக்கடியில் உள்ளது’’ என்று நுகர்வோர் எலெக்ட்ரானிக் துறையைச் சார்ந்த மேலாளர் ஒருவர் கூறுகிறார்.

தற்போதைய சூழலை விட வருகின்ற ஜூலை மாதம் இதை விட கடினமான சூழ்நிலை சவூதியில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஏற்பட போகிறது என்று கூறுகின்றனர். ஜூலை மாதத்திலிருந்து வெளிநாட்டு ஊழியர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்கள் மீதும் சவூதி அரசு வரி விதிக்க திட்டமிட்டுள்ளது. இந்த வரிக் கட்டணம் மாதத்துக்கு 27 டாலராக (100 ரியால்) இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்தக் கட்டணம் படிப்படியாக உயர்த்தப்பட்டு 2020-ம் ஆண்டு 108 டாலராக (400 ரியால்) உயர்த்தப்படும் என்று அரசு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

``எங்களுடைய நிறுவனத்தில் கிட்டத்தட்ட 300 ஊழியர்கள் வெளிநாட்டிலிருந்து வந்து பணிபுரிபவர்கள். இவர்கள் பெரும்பாலும் இந்தியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள். இவர்களில் பெரும்பாலானோர் மாதத்திற்கு 10,000 ரியாலுக்கு குறைவாக சம்பளம் வாங்குகிறவர்கள். இவர்கள் எப்படி தங்கள் குடும்பத்தையும் பார்த்துக் கொண்டு கட்டணத்தையும் செலுத்தமுடியும். ஒன்று இவர்கள் குடும்பத்தை சொந்த நாட்டிற்கு அனுப்ப வேண்டும். இல்லை யென்றால் வேலையை விட்டு நிற்க வேண்டும். அப்படி செய்தால் சவூதி நாட்டை சேர்ந்த ஊழியர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்’’ என்று தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் சவூதி ஊழியர்களை விட வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுத்தால் சம்பளத் தொகையை அதிகப்படுத்த இருக்கிறது. இதுவும் உள்நாட்டு ஊழியர்களுக்கு சாதகமாக அமையும்.

``சவூதி அரசு உள்நாட்டை சேர்ந்த குடிமக்களுக்கு வேலைவாய்ப்பை உறுதிப்படுத்த வேண்டிய சூழலில் இருக்கிறது. அதனால் இந்தக் கட்டணத்தை அதிகப்படுத்த வேண்டி இருக்கிறது’’ என்று கூறுகிறார் அரேபியாவின் ஜெமில் குழுமத்தின் தலைவர் அப்துல்ரகுமான். இவர் நிறுவனத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளிநாட்டு ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.

மேலும் சவூதி அரசு தண்ணீருக்கும் மின்சாரத்துக்கும் அளித்து வந்த மானியத்தையும் நிறுத்தியுள்ளதால் இந்தக் கட்டணங்களும் அதிகரிக்கும். இதனால் தொழில் செய்வதற்கு உண்டான முதலீடு தொகையும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

ஆசிய மற்றும் அரபு நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு ஊழியர்களை விட மேற்கத்திய நாடுகளைச் சார்ந்த ஊழியர்களின் சம்பளம் அதிகம். புதிய கட்டணங்களை இவர்களால் சமாளித்து விட முடியும். ஆனால் இவர்களின் நிறுவனங்கள் வழங்கக்கூடிய சலுகைகளை தொடர்ந்து வழங்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. அதாவது உயர் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு சிறப்பு சலுகைகளை நிறுவனங்கள் வழங்க வேண்டும். இதில் வீட்டுக்கான கட்டணம், குடும்பத்திற்கான விமான டிக்கெட் செலவு, குழந்தைகளுக்கான பள்ளிக் கட்டணம் போன்றவற்றை நிறுவனம் வழங்க வேண்டும். விற்பனை, உற்பத்தி குறைவான சூழலில் இதுபோன்ற சலுகைகளை வழங்கி ஊழியர்களை தக்கவைத்துக் கொள்ளுமா என்பது கேள்வியாக இருக்கிறது.

``தற்போது அதிக எண்ணிக்கை யிலான வெளிநாட்டு ஊழியர்கள் நிறு வனங்களை விட்டு வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இன்னும் 10 வருடங்களில் இங்கு வெளிநாட்டு ஊழியர்கள் பணிபுரிவார்களா என்பதை நினைத்துப் பார்க்கமுடியவில்லை’’ என்று நிதித்துறை சார்ந்த மேலாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x