Published : 31 Jan 2014 11:05 AM
Last Updated : 31 Jan 2014 11:05 AM

கேரளத்தில் ஐஓசி ரூ. 1,000 கோடி முதலீடு

பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி) கேரள மாநிலத்தில் ரூ. 1,000 கோடி முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது. புதுவைபீன் பகுதியில் சமையல் எரிவாயு (எல்பிஜி) இறக்குமதி செய்யும் முனையம் ஒன்றை ஏற்படுத்தவும் திட்டமிட்டுள்ளது. இதற்கான முதலீடு ரூ. 600 கோடியாகும்.

புதுவைபீன் பகுதியில் அமையும் எரிவாயு மையத்தில் 6 லட்சம் டன் எரிவாயுவை சேமிக்க முடியும். இது 2016-17-ம் நிதி ஆண்டில் செயல்பாட்டுக்கு வரும் என்று ஐஒசி பொது மேலாளர் பாண்டியன் தெரிவித்தார். இது தவிர 400 கிமீ. தூரத்துக்கு எல்பிஜி குழாய்ப்பாதை அமைக்கப்படும். இது புதுவைபீனிலிருந்து கொச்சி சுத்திகரிப்பு ஆலைக்கும் கோவை வழியாக சேலத்துக்கும் போடப்படும். இத்திட்டம் ரூ. 500 கோடியில் மேற்கொள்ளப்பட உள்ளது. இவ்விரு பணிகளுக் குமான ஒப்புதல் கிடைத்துள்ளது. இதனால் இப்பணிகள் இந்த ஆண்டு இறுதியில் தொடங்கும் என்று அவர் கூறினார்.

இந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் எல்பிஜி வாயுக்களை சாலை வழியே லாரிகள் மூலம் கொண்டு செல்வது குறையும். இது தவிர, ரூ. 100 கோடி முதலீட்டில் எரிவாயு நிரப்பு ஆலைகளை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் திருவனந்தபுரத்தில் எரிவாயு நிரப்பு ஆலை ரூ. 100 கோடியில் அமைக்க நிலம் ஒதுக்குமாறு மாநில அரசை ஐ.ஓ.சி அணுகியுள்ளது.

கேரளத்தில் தொடர்ந்து ஐஓசி முதலீடு செய்து கொண்டேயிருக்கும். இங்கு அமைய உள்ள எல்என்ஜி பெட்ரோநெட் ஆலையிலும் ஐஓசி முதலீடு செய்துள்ளது. கெயில் ஆலையும் குழாய்ப் பாதை அமைப்பதற்கான பணிகள் தமிழகத்தில் பல பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ளது கவலையளிக்கிறது. இது தொடர்பாக இரு மாநில அரசுகளும் பேசி சுமுக தீர்வு காண வலியுறுத்தப்பட்டதாக அவர் கூறினார்.

2012-ம் ஆண்டு கேரள மாநிலத்தில் வாயு நிரப்பிய லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதில் பலர் உயிரிழந்தனர். உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ஐ.ஓ.சி ரூ. 2.6 கோடி இழ்பீட்டுத் தொகையை மாநில அரசிடம் அளித்துவிட்டதாகக் கூறிய பாண்டியன், இதுபோன்ற தீ விபத்துகளைக் கட்டுப்படுத்த பிற எண்ணெய் நிறுவனங்கள் விரைந்து செயலாற்றுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதாகக் கூறினார். இதுபோன்ற பெரும் தீ விபத்துகளை தனியார் துறையினரால் கையாள முடியாது என்றும் அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x