Last Updated : 14 Mar, 2017 10:21 AM

 

Published : 14 Mar 2017 10:21 AM
Last Updated : 14 Mar 2017 10:21 AM

பாஜக தேர்தல் வெற்றியால் இன்று பங்குச் சந்தை உயர வாய்ப்பு

இந்தியாவின் முக்கிய மாநிலமான உத்தரபிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் மத்தியில் ஆளும் பாஜக பெரும் வெற்றிபெற்று ஆட்சியமைக்க உள்ளதால் இன்றைக்கு பங்குச்சந்தைகள், கடன் பத்திரங்கள் (பாண்ட்) மதிப்பு, ரூபாய் மதிப்பு ஆகியவை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த வெற்றி மூலம் பொருளாதார சீர்திருத்தங்களும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்தியில் ஆளும் பாஜகவே முக்கியமான மாநில தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளதால் பல்வேறு சீர்திருத்தங்களை செய்வதற்கு ஊக்கமளிக்கும் விதமாக இந்த வெற்றி அமையும் என முதலீட் டாளர்கள் கூறிவருகின்றனர். மேலும் தேசிய விற்பனை வரி உள்ளிட்ட சீர்திருத்தங்கள் கொண்டுவரப்படும் என்று எதிர்பார்ப்பதாக முதலீட்டாளர்கள் கூறிவருகின்றனர்.

கடந்த வாரம் தேசியப் பங்குச் சந்தை குறியீட்டு எண் நிப்டி 8,934.55 புள்ளிகளோடு நிறைவடைந்தது. நேற்று ஹோலி பண்டிகையொட்டி பங்குச் சந்தைக்கு விடுமுறைக்கு அளிக்கப்பட்டிருந்தது. இன்று வர்த்தகம் மீண்டும் தொடங்குவதால் தேர்தல் வெற்றி பங்குச்சந்தையில் எதிரொலிக்கும் என்று பங்குச்சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இன்றைய வர்த்தகத்தில் தேசியப் பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 9,000 புள்ளிகளை தொடும் என்று எதிபார்க்கின்றனர். மேலும் 10 வருட பாண்ட் மதிப்பு 3 முதல் 4 அடிப்படை புள்ளிகள் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் மோடியின் வெற்றி அந்நிய முதலீட்டாளர்களை ஈர்க்க வாய்ப்புள்ளதாகவும் இதனால் ரூபாயின் மதிப்பு உயரும் எனவும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

``அரசியல் ரீதியாக முக்கியமான மாநிலமான உத்தரபிரதேசத்தில் பாஜக மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ளதால் பிரதமர் நரேந்திரமோடி முக்கியமான பொருளாதார சீர்திருத்தங்களை விரைவில் நடைமுறைப்படுத்துவார்’’ என்று பிரபுதாஸ் லீலாதர் நிறுவனத்தின் போர்ட்போலியா மேலாண்மை சேவையின் தலைவர் அஜய் போத்கே தெரிவித்துள்ளார்.

கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் 4-ம் தேதி நிப்டி 9,199.20 புள்ளிகளை தொட்டது. அதன் பிறகு மோடியின் வெற்றியால் தற்போது அந்த புள்ளிகளை தொடுவதற்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் மார்ச் 14-15 தேதியில் அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை உயர்த்தப் போவதாக செய்திகள் வருவதையொட்டி முதலீட்டாளார்கள் கவனமாக இருக்கவும் வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x