Published : 15 Feb 2014 11:53 AM
Last Updated : 15 Feb 2014 11:53 AM
பொருள்கள் மற்றும் சேவை வரி (Goods and Services Tax)
பொருட்களின் உற்பத்தி, விற்பனை ஆகியவை மீது பலவித வரிகள் விதிக்கப்படுகின்றன. இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் மீது சுங்க வரி, பொருள் உற்பத்தி மீது கலால் வரி, சேவைகள் மீது சேவை வரி ஆகியவை மத்திய அரசால் விதிக்கப்படுகின்றன. பொருள் விற்பனை மீது வாட் வரியை மாநில அரசு விதிக்கின்றது. சாராயம் மீதான கலால் வரியையும் மாநில அரசுகள் விதிக்கின்றன. சொத்துகள் பரிவர்த்தனை மீது முத்திரைத் தாள் வரியை மாநில அரசு விதிக்கின்றது.
இவை தவிர, சில உள்ளாட்சி அமைப்புகளும் பொருட்களை தங்கள் எல்லைக்குள் எடுத்துவர நுழைவு வரி விதிக்கின்றன. இப்படி நுகர்வு எனப்படும் ஒரு வரி அடிப்படையின் மீது, பல முனைகளில் பல அரசுகளால் பல்வேறு விகிதங்களில் வரி விதிக்கப்படுவது, வரி கட்டமைப்புகளை சிதைத்து வரிச்சுமையினை பெருக்கி பொருளாதரத்தில் பல எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என்று பொருளியல் வல்லுநர்கள் கூறுகின்றார்கள்.
இந்தக் குறைகளை களைந்து, மேலே சொன்ன நுகர்வின் மீது மத்திய மாநில அரசுகள் விதிக்கும் பல விதமான மறைமுக வரிகளை ஒன்றிணைத்து ஒரே வரியாக்கும் ஒரு பெரும் வரி சீர்திருத்த முயற்சிதான் GST ஆகும். நாம் கூட்டாட்சியமைப்பில் உள்ளதாலும், மத்திய மாநில அரசுகளின் பல வரிகள் ஒன்றிணைக்கப்படுவதாலும், இந்த வரி மத்திய, மாநில அரசாங்கங்கள் இருவராலும் ஒரே நேரத்தில், மத்திய GST, மாநில GST என்று விதிக்கப்படும். அத்தியாவசிய தேவைகளுக்கு மிகக்குறைந்த விகிதம், மற்ற பொருள்களுக்கு நிலையான விகிதம் என்று இரண்டு முக்கிய வரி விகிதங்கள் இருக்கும்.
இந்த பெரும் வரி சீர்திருத்தத்தின் முதல் கட்டமாகத்தான், வாட் எல்லா மாநிலங்களிலும் அமல் செய்யப்பட்டுள்ளது. அடுத்த கட்டத்திற்கு செல்ல பல சவால்கள் உள்ளதென்றாலும், மாநில நிதியமைச்சர்களை உறுப்பினர்களாக கொண்ட ‘மாநில நிதி அமைச்சர்கள் குழு’ இது பற்றி தொடர்ந்து விவாதித்து வருகின்றது.
உற்பத்தி மற்றும் சேவைகள் இடையே வரிச்சுமையைச் சமமாக பகிர்ந்தளிக்கவும், வரி விகிதத்தை குறைத்து வரி அடித்தளத்தை விரிவுபடுத்தி, வரி சிதைவுகளை குறைக்கவும், நிர்வாக சுமைகளை எளிமையாக்கவும், GST உதவும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், மாநில அரசுகளுக்கு தங்களின் நிதி சுயசார்பினை (Fiscal Autonomy) இழந்துவிடுவோமோ என்ற அச்சமும் நிலவுகின்றது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT