Published : 21 Mar 2014 12:00 AM
Last Updated : 21 Mar 2014 12:00 AM

தொடர் ஏற்றத்துக்கு பிறகு பங்குச்சந்தைகள் சரிவு

மும்பை பங்குச் சந்தையில் வியாழக்கிழமை சரிவு காணப்பட்டது. கடந்த இரண்டு வாரங்களில் இல்லாத அளவுக்கு 93 புள்ளிகள் சரிந்து குறியீட்டெண் 21740 ஆகக் குறைந்தது. தேசிய பங்குச் சந்தையில் 41 புள்ளிகள் சரிந்ததில் குறியீட்டெண் 6483 புள்ளிகளானது.

பங்குச் சந்தையில் மொத்தம் 1,534 நிறுவனப் பங்குகள் நஷ்டத்தைச் சந்தித்தன. 1,269 நிறுவனப் பங்குகள் மட்டும் கணிசமான லாபம் ஈட்டின. 137 நிறுவனப் பங்குகள் விலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் முன்தின விலைக்கு வர்த்தகமாயின.

அமெரிக்க பெடரல் ரிசர்வ் தலைவர் ஜெனட் ஏலன், புதன்கிழமை இரவு செய்தியாளர்களிடம் பேசுகையில் கடனுக்கான வட்டியை அதிகரிக்க வேண்டிய காலம் வந்துவிட்டதாகக் கூறியிருந்தார். இதனால் அமெரிக்க பங்குச் சந்தைகளில் சரிவு காணப்பட்டது. இதன் எதிரொலியாக இந்திய பங்குச் சந்தையில் வியாழக்கிழமை சரிவு காணப்பட்டது. அத்துடன் மாதந்தோறும் திரும்பப் பெறும் கடன் பத்திர அளவை 1,000 கோடி டாலராகக் குறைத்தது பெடரல் ரிசர்வ்.

அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை உயர்த்தப் போவதாக அறிவித்ததால் இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடு பாதிக்கப்படும். இதனால் இதுவரை உயர்வைச் சந்தித்து வந்த பங்குச் சந்தை இனி சரியத் தொடங்கும் என்று பங்குச் சந்தை நிபுணர்கள் கூறினர்.

சீன பொருளாதாரத்தில் காணப்படும் தேக்க நிலை காரணமாக ஆசிய பிராந்திய பங்குச் சந்தைகளில் சரிவு ஏற்பட்டது.மும்பை பங்குச் சந்தையில் மொத்தமுள்ள 11 துறைகளில் 9 துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களின் பங்குகள் சரிவைச் சந்தித்தன. தகவல் தொழில்நுட்பம் மற்றும் மருந்து பொருள் தயாரிப்பு சார்ந்த நிறுவனங்களின் பங்கு விலைகள் ஏற்றம் பெற்றன.

சமீப காலமாக சரிவைச் சந்தித்து வந்த டிசிஎஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ ஆகிய நிறுவனங்களின் பங்கு விலைகள் உயர்ந்தன.

ரியல் எஸ்டேட், கேபிடல் கூட்ஸ், மின்சாரம், வங்கி, உலோகம் உள்ளிட்ட துறைகளின் பங்கு விலைகள் கடுமையான நஷ்டத்தைச் சந்தித்தன. ரிசர்வ் வங்கி ஏப்ரல் 1-ம் தேதி தனது காலாண்டு நிதிக் கொள்கையை அறிவிக்க உள்ளது. இந்நிலையில் இந்நிறுவனங்களின் பங்கு விலைகள் சரிவைச் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆசிய பிராந்தியத்தில் ஹாங்காங், சீனா, தாய்வான், சிங்கப்பூர், தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் பங்குச் சந்தைகளில் சரிவே காணப்பட்டது. ஐரோப்பிய நாடுகளில் பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து பங்குச் சந்தைகளிலும் சரிவு காணப்பட்டது.

இதனிடையே இந்திய பங்குச் சந்தையில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ. 1,069 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிஎச்இஎல் (2.74%), கெயில் இந்தியா (2.67%), ஹெச்டிஎப்சி (2.12%), லார்சன் அன்ட் டியூப்ரோ (2.12%), ஆக்சிஸ் வங்கி (2.11%), ஸ்டீல் (1.77%), டாடா பவர் (1.76%), எஸ்பிஐ (1.72%), பஜாஜ் ஆட்டோ (1.68%), சீசா ஸ்டெர்லைட் 1.62%) அளவுக்கு சரிவைச் சந்தித்தன.

பார்தி ஏர்டெல் (1.32%), டாடா மோட்டார்ஸ் (1.16%), கோல் இந்தியா (1.16%), ஐடிசி 1.02% அளவுக்கு சரிந்தன. டிசிஎஸ் 3.28 சதவீதம், ஹிந்துஸ்தான் யுனி லீவர் 2.01 சதவீதம் விப்ரோ 1.09 சதவீத அளவுக்கு ஏற்றம் பெற்றன.வியாழக்கிழமை நடைபெற்ற பங்கு வர்த்தகம் ரூ. 2,386 கோடியாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x