Last Updated : 11 Sep, 2016 11:16 AM

 

Published : 11 Sep 2016 11:16 AM
Last Updated : 11 Sep 2016 11:16 AM

‘எஸ்எம்இ வங்கியாக செயல்படவே விரும்புகிறோம்’

100 வருடங்களுக்கு மேலாகச் செயல்படும் நிறுவனங்களின் பட்டியல் மிகவும் குறைவு. அந்த பட்டியலில் இப்போது கரூர் வைஸ்யா வங்கியும் இணைந்திருக்கிறது. வெங்கடராம செட்டியார் மற்றும் ஆதி கிருஷ்ண செட்டியார் ஆகிய இருவரால் 1916-ம் ஆண்டு இந்த வங்கி கரூரில் தொடங்கப்பட்டது. நூற்றாண்டு விழா நிகழ்ச்சி பரபரப்புக்கு இடையே அந்த வங்கியின் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர் கே.வெங்கடராமனிடம் உரையாடியதிலிருந்து…

100 வருடம் என்பது நிச்சயம் ஒரு மைல்கல்தான். இதைத் தாண்டி கரூர் வைஸ்யா வங்கியின் முக்கியமான நிகழ்வுகள் என்ன?

நாங்கள் பல விஷயங்கள் செய்தி ருந்தாலும், இப்போதைய சூழலில் அவை முக்கியமானதாக தெரியாது. சில முக்கியமான விஷயங்களை பகிர்ந்து கொள்கிறேன். 100வது கிளை (1977) தொடங்கப்பட்டது. அப்போதெல்லாம் இவ்வளவு விரிவாக்கப் பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காத காலம்.

எங்களுடைய வாடிக்கையாளர்கள் வளர்ந்து வந்தார்கள். அவர்களுக்கு கூடுதல் கடன் கொடுக்க வேண்டும் என்றால் வங்கியின் நிதி நிலை அறிக்கையும் விரிவடைய செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட சில முடிவுகளை 2009-ம் ஆண்டு முடிவெடுத்தார்கள். கோல்டன் விஷன் என்னும் பெயரில் எடுக்கப்பட்ட முடிவு கள் ஒரு முக்கியமான மைல்கல். இரண்டு உலகப்போர்கள், பஞ்சம், பெருமந்த நிலை இவற்றை எல்லாம் வங்கி பார்த் திருந்தாலும், 2009-ம் ஆண்டு எடுத்த முக்கியமான முடிவுகள்தான் வங்கியின் பாதையை தீர்மானித்தன. இந்த ஏழு வருடங்களில் வங்கி மிகச் சிறப்பான வளர்ச்சியை அடைந்திருக்கிறது.

வங்கி தொழிலில் மெதுவான வளர்ச்சி என்பது சரி என்று வைத்துக்கொண்டாலும், மிகவும் குறைவான வேகத்திலான வளர்ச்சி இருக்க வேண்டுமா? கரூரில் தலைமையகம் இருப்பது ஒரு பிரச்சினையா?

எங்களுடைய முக்கியமான வாடிக்கையாளர்கள் சிறு தொழில் செய்பவர்கள், விவசாயிகள்தான். அதைத் தாண்டி பெரு நிறுவனங் களுக்கு கடன் கொடுக்கவில்லை. ஆனால் நாங்கள் கடன் கொடுத்த வாடிக் கையாளர்கள் வளர்ந்து வந்தார்கள். உதாரணத்துக்கு எப்போதும் கடன் வாங்குவதை விட கூடுதலாக 20 கோடி கடன் கேட்டால் கொடுக்க முடியாத சூழல் இருந்தது. இதற்கு வேறு வங்கிகளை நோக்கி அவர்கள் செல்லும் போது மொத்த கடனுமே அவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்பு இருந்தது. ஆனால் பல வருடங்களாக செயல்பட்டு வந்த வங்கியின் பாதையை உடனடியாக மாற்ற முடியாது. ஆனால் 2009-ம் ஆண்டுக்கு பிறகு வளர்ச்சி இருக்கிறது.

கரூரில் இருப்பதெல்லாம் ஒரு பிரச்சினை அல்ல. தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட பிறகு வளர்ச்சிக்கு தலைமையகம் ஒரு பிரச்சினை அல்ல. இயக்குநர் குழு, கொள்கை முடிவுகள்தான் வங்கியின் செயல்பாட்டை தீர்மானிக்கின்றன.

கடந்த 20 வருடங்களில் நிதிச் சேவைகள் பிரிவு மிக வேகமான வளர்ச்சி அடைந்திருக்கிறது. நிதித் துறையின் அனுபவம் இருந்தும் காப்பீடு, மியூச்சுவல் பண்ட், வீட்டுக்கடனுக்கு துணை நிறுவனங்கள் உருவாக்காதது ஏன்?

நாங்கள் பாரம்பரியமான வங்கித்தொழிலில் ஈடுபட்டுவந்ததால், அதிலிருந்து விலகிச்செல்ல இயக்குநர் குழு விரும்பவில்லை. பல வாய்ப்புகள் இருந்தாலும் இப்போதைக்கு வங்கியில் மட்டுமே கவனம் செலுத்த விரும்புகிறோம். இங்கேயே பெரிய வாய்ப்புகள் இருக்கின்றன.

எங்களிடம் காப்பீடு, மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் இல்லையே தவிர சந்தையில் இருக்கும் புராடக்ட்களில், வாடிக்கையாளர்களுக்குத் தேவை யானவற்றை வழங்கி வருகிறோம். உதாரணத்துக்கு எஸ்பிஐ உடன் இணைந்து கிரெடிட் கார்டு வழங்கி வருகிறோம். இதனை நாங்களே பிரத்யேகமாக கொடுத்திருக்கலாம். ஆனால் ரிஸ்க் மேனேஜ்மென்ட் செய்ய தனியாக துணை நிறுவனம் தேவை. எங்களுடைய ரிஸ்கை குறைத்துக் கொண்டு, அதே சமயத்தில் வாடிக்கையாளர்களுக்குத் தேவையான தயாரிப்புகளையும் கொடுக்க வேண்டும் என்பதுதான் எங்கள் திட்டம்.

இன்னமும் உங்களுடைய செயல் பாடுகள் தென்னிந்திய வங்கியாகத்தான் இருக்கிறது. இந்தியா முழுமைக்குமான வங்கியாக மாறுவதற்கு திட்டம் இல்லையா?

எங்களுடைய பலம் சில்லரை வர்த்தகம் மற்றும் சிறு நிறுவனங்கள். இதுபோல சிறு நிறுவனங்கள் எங்கெல் லாம் இருக்கிறதோ அங்கு செயல் பட திட்டம். எஸ்எம்இ வங்கியாகவே எங்களை முன்னிலைப்படுத்திக் கொள்ள விரும்புகிறோம்.

எஸ்எம்இ பிரிவுதான் உங்களுடைய இலக்கு என்றாலும், இப்போது சிறிய வங்கிகள் வர தொடங்கி இருக்கின்றனவே?

சந்தையில் அவர்களுடைய இடம் வேறு, எங்களுடைய இடம் வேறு. வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்கும் சிறிய வங்கிகளுக்கும் இடையேதான் போட்டி இருக்கும்.

வங்கித்தொழில் இப்போது மாறி வருகிறது. வெல்த் மேனேஜ்மென்ட் பிரிவில் வங்கிகள் கவனம் செலுத்தி வருகின்றன. உங்களுடைய திட்டம் என்ன?

கடந்த சில வருடங்களாக இதனை நாங்கள் பரிசீலித்து வருகிறோம். கிரெடிட் கார்டு வசதியை கொடுத்தது போல வேறு ஒரு நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவதா, அல்லது நாங்களே சொந்தமாக தொடங்குவதா என்பது குறித்த முடிவை இன்னும் எடுக்கவில்லை.

தற்போது இந்தியாவில் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பெருகி வருகின்றன. கேவிபியின் திட்டம் என்ன?

ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் கடன் வாங்குவதில்லை. அவர்கள் பங்கு களை கொடுத்து முதலீட்டை திரட்டுகின் றனர். டிஜிட்டல் துறையில் இருக்கும் சில ஸ்டார்ட் அப் நிறுவனங்களுடன் பேசி யிருக்கிறோம். இதற்கான கொள்கை களை விரைவில் அறிவிப்போம்.

பங்கு பிரிப்பு குறித்து, உங்களுடைய பங்குதாரர்களுக்கு நீங்கள் கூறவிரும்புவது?

எங்களுடைய வங்கியில் சிறு முதலீட்டாளர்கள் பங்குதான் அதிகம். நாங்கள் தொடர்ந்து லாபம் ஈட்டி வருவதுடன் டிவிடெண்டும் வழங்கி வருகிறோம் என்பதால் எங்களுடைய பங்கில் அதிக வர்த்தகம் நடக்காது. இதுவரை 14 முறை உரிமை பங்கு கள், 7 முறை போனஸ் பங்குகள் வெளியிட்டிருக்கிறோம். அனைத்தை யும் வைத்துக் கொண்டார்களே தவிர யாரும் விற்கவில்லை. பங்கின் விலை சிறிது அதிகமாக இருப்பதால் இப்போது பங்கு பிரிப்பு குறித்து சிலர் கேட்டிருக்கிறார்கள். இயக்குநர் குழு விரைவில் இது குறித்து முடிவெடுக்கும்.

உங்களுடைய முக்கியமான விகிதங்கள் திருப்தியாக இருக்கிறதா?

வாராக்கடன், நிகர வட்டி வரம்பு உள்ளிட்ட விகிதங்களில் நாங்கள் சிறப்பாக இருக்கிறோம். காசா விகிதம் குறைவாக இருக்கிறது. இதனை உயர்த்த திட்டமிட்டிருக்கிறோம்.

karthikeyan.v@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x