Published : 15 Dec 2013 12:00 AM
Last Updated : 15 Dec 2013 12:00 AM

வெற்றியைக் கற்றுக்கொள்ள முடியுமா?

“செவன் ஹேபிட்ஸ் படித்திருக் கிறீர்களா?” என்று கேட்டார் என் பாஸ். பாஸ் என்ற வார்த்தையே சினிமா வில்லன் மனோகர் குரலில் திகிலாகவும் கேலியாகவும் பட்ட காலம் அது. நான் அதுவரையில் கேட்காத வார்த்தை அது. கார்ப்பரேட் உலகில் அப்போது நான் கத்துக்குட்டி.

சுயமுன்னேற்றப் புத்தகங்கள் பற்றி பெரிய அபிப்பிராயம் இருக்கவில்லை. மருத்துவ உளவியல் கல்வியும் இலக்கிய வாசிப்பும் என்னை ஒரு பகுப்பாய்வாளனாகவும் விமர்சகனாகவும் ஆக்கி வைத்திருந்தது. மனச்சோர்வு வந்தால் சிகிச்சை அளிக்க வேண்டும்; புத்தகம் படித்தெல்லாம் மனச்சோர்வு தீராது என்று நம்பியிருந்தேன்.

செவன் ஹேபிட்ஸ் படிக்கவில்லை என்றவுடன் அவர் என்னை ஒரு மாதிரி பார்த்தார். அதன் பின் நான் சந்தித்த ஒவ்வொரு மேலதிகாரியும் தங்கள் அலமாரியில் உத்திரவாதமாக ஒரு பிரதி வைத்திருந்தார்கள். பயிற்சி எடுக்க வந்த ஒவ்வொருவரும் “Paradigm Shift” என்றே ஆரம்பித்தார்கள். இளம்பெண்ணாகவும் முதிய பெண்மணியாகவும் ஒரே நேரத்தில் தோன்றும் ஓவியம் பிரபலமாக ஆரம்பித்தது. நான் முதல் வகுப்பு உளவியலில் படித்தபோது பெர்ஸப்ஷன் சம்பந்தப்பட்ட பாடம் அது.

1998 செப்டம்பரில் ஸ்டீவன் கோவேயின் Seven Habits of Highly Effective People புத்தகத்தை வாங்கிப் படித்தேன்

1989-ல் வெளியானது முதல் உலகமெங்கும் இன்று வரை 2.5 கோடி பிரதிகள் விற்றுள்ளன. 38 மொழிகளில் மொழிபெயர்த்திருக்கிறார்கள். சி.டி விற்பனை மட்டும் 1 கோடிக்கு மேல். ஹார்வர்டில் எம்.பி.ஏ வும் மதக் கல்வியில் பிஹெச்.டி.யும் முடித்த ஸ்டீவன் கோவேவுக்கு 10 கௌரவப் பட்டங்கள் கொடுக்கப்பட்டன.

புத்தகத்தைப் பற்றி விவாதிப்பதற்கு முன் இந்த புத்தகத்தின் வியாபார வெற்றியைப் பற்றிப் பேசவேண்டும். 25 வருட கார்ப்பரேட் அனுபவத்துடன் 47 வயதில் இந்தப்புத்தகம் எழுதுகிறார். பின் 2012-ல் மறையும் வரை இந்தப் புத்தகம் சார்ந்த கல்வி, பயிற்சி, புத்தக/ சி.டி விற்பனை, தொழில் ஆலோசனை, தொடர்ச்சியான இரு புத்தகங்கள், என இந்த புத்தகத்தை முதலீடாக வைத்து தன் தொழில் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் வியூகமும் செயல்பாடுகளும் குறிப்பிடத்தகுந்தது.

90-களில் இந்திய சந்தை திறந்தபோது இப்புத்தகம் கார்ப்பரேட் மேலாளர்களுக்கான பைபிள் போல ஒரு கோட்பாட்டு நூலாக உருவெடுத்தது. ஒரு மத பிரசாரத்தின் அழுத்தமான மொழியும், சந்தை பொருளாதாரம் அறிந்ததால் வாடிக்கையாளர்கள் தேவை அறிந்த கட்டுமானமும் இதில் காண முடிகிறது.

சுயசார்பு நிலைக்கு முதல் மூன்று பழக்கங்களும், பரஸ்பர சார்புக்கு அடுத்த மூன்று பழக்கங்களும், இவை ஆறு பழக்கங்களை கூர்மைப்படுத்தும் ஏழாவது பழக்கமும் தான் இதன் சாரம்.

பழக்கம் என்றால் என்ன? அறிவு, திறன், ஆசை கொண்டு எதைத் தொடர்ந்து செய்கிறோமோ அது தான் பழக்கம். எதைத் தொடர்ந்து செய்கிறோமோ அது வாழ்க்கையாகவும் விதியாகவும் மாறுகிறது. மொத்தப்புத்தகமும் கிறிஸ்துவ தாக்கத்தில் இருந்தாலும் விதி பற்றிய இந்த ஆதார இந்துத்துவ நம்பிக்கை இந்தியர்களிடம் இந்த புத்தகத்தை எடுத்துச் சென்றுள்ளது.

ஒவ்வொரு பழக்கத்தையும் அழகாக அறிமுகம் செய்து வைக்கிறார். பயன்பாட்டுக் கருவிகள் தருகிறார். அனைத்தும் எல்லாரும் செய்யக்கூடியவை என்று சொல்கிறார். பின் அடுத்த பழக்கத்துடன் சங்கிலித் தொடராய் இணைக்கிறார். ஒரு சுய உதவிப் புத்தகத்திற்கான அத்தனை சூட்சமங்களும் இதில் உள்ளன.

முதல்முறை படிக்கையிலேயே தெரிந்தது, இது புறந்தள்ள முடியாத புத்தகம் என்று. நேர நிர்வாகம் பற்றி ஒரு அத்தியாயத்தில் இவர் எழுதியது போல முழு புத்தகத்தில் கூட யாரும் அவ்வளவு வலிமையாக எழுதவில்லை. அதேபோல இது வெறும் அறிவுரையோ, ஆறுதல் மொழியோ இல்லை. தத்துவம், மதம், உளவியல், நிர்வாகம் என அனைத்தும் படித்து, பணியாற்றிய பிறகு கோவே எழுதியது. வெற்றியை உளவியல் ரீதியாகச் சொல்லும் புத்தகம் என அறியப்பட்ட இந்தப் புத்தகத்தின் மூலம் வெற்றியைக் கற்றுக் கொள்ள முடியுமா? கற்றுக்கொள்வது வாசக அனுவத்தைப் பொறுத்தது. ஆனால் இதை வெற்றியின் விளக்க நூலாக சிறப்பாக எழுதியுள்ளார் ஸ்டீவன் கோவே.

எல்லாவற்றையும் விட முக்கியமானது மேலோட்டமாக உத்திகளைக் கொடுக்காமல் ஆழமாக உண்மைகளை ஆராய்கிறது. முகமூடியை சரி செய்வதை விட முகத்தை உணர்ந்து கொள்ளுதல் முக்கியம் என்கிறது. Personality யை விட Character Ethic முக்கியம் என்று பேசுவதுதான் இந்த நூலின் ஆதார பலம்.

இந்த நூலைப் பிரித்து மேய்ந்து சகட்டு மேனிக்கு சுட்டு எழுதிய பல புத்தகங்களையும் பல பயிற்சி முயற்சிகளையும் கடந்த 20 வருடங்களில் பார்த்திருக்கிறேன். எதுவும் தேறவில்லை. நம்ம சகாக்களே “பாரடைம் ஷிஃப்ட்” என்று எதற்காவது விளக்கம் கொடுத்தால் கண்டிப்பாக இந்தப் புத்தகத்தை முகர்ந்தாவது பார்த்திருப்பார்கள் என்று அறிந்து கொள்வேன்.

இந்தப் புத்தகத்தை ஒரு துரித உணவைப் போல எண்ணி வழித்தெடுக்க நினைக்காமல் சில மாதங்கள் மெதுவாக படித்து ஒரு நண்பரோடு நடப்பது போல மெல்ல பரிச்சயப்படுத்திக் கொண்டால் நிச்சயம் சில உள்நோக்குப் பார்வைகள் நிகழும்.

சரி, “பாரடைம் ஷிஃப்ட்” என்ன தான் சொல்கிறது? நாம் கட்டமைத்த சிந்தனை வடிவங்கள் அனுபவங்களால் மாறுவது தான் அது. அதை நச்சென்று சொல்ல ஒரு நிஜக்கதையை பறிமாறுகிறார்: கடற்படையைச் சேர்ந்த இரு கப்பல்கள் ஒரு மழைக்காலத்தில் சில வாரங்களாக கடலில் மிதக்கின்றன.

அந்தக் கப்பலின் கேப்டன் எதிரில் தெரிந்த ஒளியை உணர்ந்து எதிர் திசைக்கு செய்தி அனுப்புகிறார்.

“நான் முதல் நிலை கேப்டன் பேசுகிறன். என் கப்பல் வருகிறது. நீ திசை மாறிச் செல்!” பதில் வருகிறது. “ நான் கடைநிலை ஊழியன் பேசுகிறேன். என்னால் முடியாது. நீங்கள் தான் திசை மாற வேண்டும்.”

கேப்டனுக்கு ஆத்திரம். “நீ திசை மாறாவிட்டால் நான் தாக்குதல் நடத்துவேன்!”

“கோபிக்காதீர்கள். என்னால் எதுவும் செய்ய முடியாது. ஏன் என்றால் இது கலங்கரை விளக்கம்!”

gemba.karthikeyan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x