Published : 06 Mar 2014 10:27 AM
Last Updated : 06 Mar 2014 10:27 AM
தங்கம் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் கூறினார். நடப்புக் கணக்கு பற்றாக்குறை (சிஏடி) குறித்த இறுதி அறிக்கை வெளியான பிறகு இது குறித்து பரிசீலிப்பதாக வங்கித் தலைவர்களுடனான சந்திப்புக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசுகையில் இத்தகவலைத் தெரிவித்தார்.
ஆண்டு இறுதியில் இறக்குமதி செய்யப்பட்ட தங்கத்தின் அளவு குறித்து இறுதி அறிக்கை கிடைக்கும். அதன் பிறகு நடப்புக் கணக்குப் பற்றாக்குறை எந்த அளவில் உள்ளது என்பதை ஆராய்ந்து அதன்பிறகு முடிவு செய்யப்படும் என்றார்.
நாட்டின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறையைக் குறைப்பதற்காக தங்கத்தின் மீது அதிக வரியை மத்திய அரசு விதித்தது. 2012-13-ம் நிதி ஆண்டில் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை 8,820 கோடி டாலராக இருந்தது. நடப்பு ஆண்டில் இதை 4,500 கோடி டாலர் அளவுக்குள் கட்டுப்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மே மாதத்தில் தங்கம் இறக்குமதி 162 டன்னாக இருந்தது. இது நவம்பர் மாதத்தில் 19 டன்னாகக் குறைந்தது. கடந்த ஆண்டைக் காட்டிலும் சுங்க வரி மூன்று மடங்கு உயர்த்தப்பட்டதே தங்கம் இறக்குமதி குறைந்ததற்கு முக்கியக் காரணமாகும்.
இருப்பினும் ஜெம்ஸ் அண்ட் ஜுவல்லரி ஏற்றுமதியாளர்கள் தொடர்ந்து தங்கத்தின் மீதான சுங்க வரியைக் குறைக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர். இது தொடர்பாக காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியும், உரிய காலத்தில் நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில் செவ்வாய்க் கிழமை மத்திய வர்த்தக அமைச்சர் ஆனந்த் சர்மாவும், தங்கம் மீதான இறக்குமதிக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துமாறு கோரிக்கை விடுத்தார். தங்கம் மீதான அதீத கட்டுப் பாடுகள் கள்ளக்கடத்தலுக்கு வழி வகுத்துவிடும் என்றும் சுட்டிக் காட்டியிருந்தார்.
எந்த ஒரு நிலையிலும் அதீத கட்டுப்பாடுகள் மற்றொரு பிரச்சினையை உருவாக்கும். அதைப்போல தங்கம் மீதான கட்டுப்பாடுகள் கடத்தலுக்கு வழி வகுத்துவிடும். எனவே இதைக் கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சர்மா கூறியிருந்தார்.
யுனைடெட் வங்கி விவகாரம்
வாராக் கடன் அதிகரித்துள்ள யுனைடெட் வங்கி விவகாரம் குறித்து இந்த வார இறுதியில் ரிசர்வ் வங்கி கவர்னருடன் விரை வில் பேச உள்ளதாக சிதம்பரம் கூறினார்.
யுனைடெட் வங்கி விவகாரம் தனித்துவமானது. அதுகுறித்து தனியாக விவாதிக்கப்படும் என்று வங்கியாளர்கள் கூட்டத்தில் பேசிய சிதம்பரம் குறிப்பிட்டார். இருப்பினும் வங்கியின் நிதி நிலை அபாய அளவுக்குச் செல்லவில்லை என்று குறிப்பிட்ட அவர், இம்மாதம் 7-ம் தேதி ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜன் டெல்லிக்கு வர உள்ளார். அப்போது இது குறித்து அவரிடம் ஆலோசனை நடத்துவேன் என்று குறிப்பிட்டார்.
ரிசர்வ் வங்கி கவர்னருடன் புதிய வங்கி லைசென்ஸ் வழங்குவது குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது. தேர்தல் அறிவிப்பு வெளியானதற்கும் புதிய வங்கிகள் தொடங்குவது தொடர்பான அறிவிப்பு வெளியாவதற்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது. லைசென்ஸ் வழங்குவ போன்ற அலுவல் ரீதியிலான பணிகள் எவ்வித இடையூறுமின்றி வழக்கம் போல நடைபெறும் என்று அவர் குறிப்பிட்டார்.
நடப்புக் கணக்கு பற்றாக்குறை 420 கோடி டாலர்
ஏற்றுமதி அதிகரிப்பு மற்றும் தங்கம் இறக்குமதி குறைந்திருப்பது ஆகிய காரணங்களால் இந்தியா வின் மூன்றாம் காலாண்டு நடப்புக் கணக்கு பற்றாக் குறை (சிஏடி) 420 கோடி டாலராக குறைந்திருக்கிறது. அதாவது இந்திய ஜிடிபியில் 0.9 சதவீதமாகும்.
நடப்புக் கணக்குப் பற்றாக்குறை என்பது இந்தியாவுக்கு உள்ளே வரும் வெளிநாட்டு கரன்ஸி மற்றும் இந்தியாவிலிருந்து வெளியேறும் வெளிநாட்டு கரன்ஸிக்கும் இடையேயான வேறுபாடு.
கடந்த வருட இதே காலாண்டில் இந்தியாவின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை 3,190 கோடி டாலராக இருந்தது. இது இந்திய ஜிடிபியில் 6.5 சதவீதமாகும். நடப்பு நிதி ஆண்டின் முதல் 9 மாதங்களில் (ஏப்ரல் முதல் டிசம்பர் வரை) நடப்புக் கணக்குப் பற்றாக்குறை 3,110 கோடி டாலராக ( ஜிடிபியில் 2.3%) இருந்தது. ஆனால் கடந்த நிதி ஆண்டின் இதே காலத்தில் நடப்பு கணக்கு பற்றாக்குறை 6,980 கோடி டாலராக ( ஜிடிபியில் 5.2 சதவீதம்) இருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT