Published : 16 Jan 2014 12:08 PM
Last Updated : 16 Jan 2014 12:08 PM

உணவு தானிய விளைச்சல் அதிகரிக்கும்: பவார் உறுதி

நடப்பாண்டில் உணவு தானிய விளைச்சல் அதிகமாக இருக்கும் என்று மத்திய வேளாண்துறை அமைச்சர் சரத் பவார் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 2011-12-ம் அறுவடை காலத்தில் உணவு தானிய உற்பத்தி 259.29 கோடி டன்களாக இருந்தது. இப்போது அதைவிட கூடுதலாக இருக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

பிப்ரவரி மாத முற்பாதியில் அரசுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் விளைச்சல் கூடுதலாக இருக்கும் என்று இந்திய வேளாண் ஆய்வு மையத்தின் 85-வது ஆண்டுக் கூட்டத்தில் பேசுகையில் பவார் தெரிவித்தார். சம்பா பட்டத்தில் கூடுதல் பரப்பில் உணவு தானியங்கள் விதைக்கப்பட்டதாக அவர் கூறினார். இது மிகுந்த நம்பிக்கையை அளிப்பதாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஜூலை முதல் ஜூன் வரையிலான காலம் உணவு தானியங்க ளின் விளைச்சல் காலமாகக் கொள்ளப்படுகிறது. 2011-12-ம் ஆண்டில் மிக அதிகபட்சமாக 259.29 லட்சம் டன் உணவு தானியம் உற்பத்தியானது. அடுத்த ஆண்டு 255.36 கோடி டன்னாகக் குறைந்தது. இதற்கு நாட்டின் பல பகுதிகளில் ஏற்பட்ட வறட்சியே முக்கிய காரணமாகும். இந்த ஆண்டு விளைச்சல் அதிகமாக இருக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த ஆண்டு நாட்டின் பல பகுதிகளில் பருவ மழை சீராக பெய்திருப்பதைத் தொடர்ந்து குறுவை மற்றும் சம்பா விதைப்பு பரப்பு அதிகரித்துள்ளது. இதனால் விளைச்சல் அதிகமாக இருக்கும் என்று அவர் சுட்டிக் காட்டினார். நாட்டின் பொருளாதாரத்தில் தேக்க நிலை நிலவியபோதிலும் வேளாண்துறை நிர்ணயிக்கப்பட்ட வளர்ச்சி இலக்கை நிச்சயம் எட்டும் என்று அவர் சுட்டிக் காட்டினார். 2013-14-ம் ஆண்டில் ஜூலை முதல் செப்டம்பர் வரையான காலத்தில் விவசாயம் மற்றும் அது சார்ந்த உப தொழில்கள் 4.6 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பருப்பு வகைகள் மற்றும் சமையல் எண்ணெய்களை தொடர்ந்து இறக்குமதி செய்ய வேண்டிய தேவை இருப்பதாகவும், இவற்றின் உற்பத்தியை அதிகரிக்க தொடர்ந்து ஆராய்ச்சி மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த ஆண்டு 19 கோடி டன் பருப்பு வகைகள் உற்பத்தி செய்யப்படும் என்று அவர் கூறினார். ஆண்டு தோறும் இந்தியா 35 லட்சம் டன் பருப்பு மற்றும் ஒரு கோடி டன் சமையல் எண்ணெய்யை இறக்குமதி செய்கிறது. இந்திய வேளாண் ஆராய்ச்சி மையம் (ஐசிஏஆர்) கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிகள் அனைத்தும் விவாசாயிகள் ஏற்கும் வகையில் அவர்களுக்கு லாபகரமானதாக இருக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டினார்.

மிகக்குறைந்த மூலதனத்தில் அதிக விளைச்சலைத் தரும் விதைகளை உருவாக்கும் பணியில் வேளாண் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். இத்தகைய விதைகள் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவையாகவும், விளைச் சலை அதிகம் தரக்கூடிய தரமான வித்துகளாக உள்ளன என்று குறிப்பிட்டார். உணவு தானியங்கள் தவிர, பழங்கள், காய்கறிகள், பால் மற்றும் மீன் உற்பத்தி கடந்த ஆண்டுகளில் அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். வேளாண் சார்ந்த பொருள்களின் உற்பத்தி 11 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் இவற்றின் மதிப்பு ரூ. 2,01,000 கோடி என்றும் குறிப்பிட்டார்.

இந்திய வேளாண் ஆராய்ச்சி மையம் 104 புதிய உயர் வீரிய தோட்டக் கலை விதைகளை உருவாக்கியுள்ளது. இந்த மையம் 11,835 டன் விதைகளை உருவாக்கியுள்ளாக அவர் குறிப்பிட்டார். நாட்டின் பல்வேறு பகுதிகளில் மாறுபட்ட தட்ப வெப்ப நிலை நிலவுவதாகக் குறிப்பிட்ட அவர், அனைத்து தட்ப வெப்ப நிலைகளுக்கு ஏற்ற விதைகளை உருவாக்கும் பணியில் ஐசிஏஆர் ஈடுபட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x