Published : 06 Aug 2016 10:17 AM
Last Updated : 06 Aug 2016 10:17 AM

தொழில் ரகசியம்: நமக்கு நாம் இன்னும் அந்நியனே!

இரண்டு வாரங்களுக்கு முன் மனித மனம் சிந்திக்கும் சிஸ்டம் 1, சிஸ்டம் 2 முறைகள் பற்றி இங்கு படித்தது நினைவிருக்கும். ஆச்சரியமளிக்கும் சிஸ்டம் 1 செயல்படும் விதம் பற்றி மேலும் அறிய இந்த வார்த்தைகளை படிக்கவும்.

வாழைப்பழம் வாந்தி

அருவருப்பாய் இருக்குமே. குமட்டிக் கொண்டு வருமே. வாழைப்பழத்தால் வாந்தி என்று உள்ளுணர்வு இரண்டையும் இணைத்திருக்குமே. இப்பொழுது யாராவது வாழைப்பழத்தை நீட்டினால் அதை அவர் மூஞ்சியில் எறிந்து முடிந்தால் அவரையே இரண்டு அப்பு அப்ப தோன்றுமே!

இது தாற்காலிகமானதே. இன்னும் சற்று நேரத்தில் இதை மறந்து வாழைப்பழம் சாப்பிடுவீர்கள். கவலை வேண்டாம்.

இவ்விரு வார்த்தைகளை சேர்த்து பார்த்திருக்கமாட்டீர்கள். அதனால் சிறு ஆச்சரியம் அதிர்ச்சி. உங்களை அறியாமல் ஆட்டோமேடிக்காய் தோன்றிய உணர்வுகளை கட்டுப்படுத்த முடியவில்லை. இப்படி உணர்வு, எண்ணங்கள் உருவாவதை அசோசியேட்டிவ் ஆக்டிவேஷன் (Associative activation) என்கிறார்கள். மனதில் தோன்றும் நினைவு அது சம்பந்தப்பட்ட மற்ற நினைவுகளை அலை போல் உருவாக்குகிறது என்கிறார் `டேனியல் கான்மென்’.

உணர்வு எழுப்பப்பட்டு உடம்பிலும் மாற்றங்கள் உருவாகிறது. வாழைப்பழம், வாந்தி என்று படித்த மாத்திரம் முகம் சுருங்கி உடம்பு சற்று குறுகுறுத்து வாந்தியை பார்த்தது போல உடம்பு நடந்துகொள்கிறது. வார்த்தை நினைவை எழுப்பி, உணர்வை தூண்டுகின்றன. இதனால் பாதாதிகேசமும் வாந்தியை பார்த்து போல ரியாக்ஷன் தருகிறது. `Cognition is embodied’ என்கிறார்கள் ஆராய்சியாளர்கள். மூளையை மட்டுமல்ல, உடம்பு முழுவதும் கொண்டு சிந்திக்கிறோமாம்!

இதை அனைத்தையும் செய்தது எது? அந்த இரண்டு வார்த்தைகள். அதை உங்கள் சிஸ்டம் 1 படித்து பரிட்சித்து புரிந்துகொண்ட விதம்!

80-களில் உளவியலாளர்கள் இன்னொரு சுவாரசியமான விஷயத்தை கண்டுபிடித்தார்கள். ஒரு வார்த்தையைக் கேட்கும் போது அது சம்பந்தப்பட்ட மற்ற வார்த்தைகள் நம்மை அறியாமலேயே தோன்றுகின்றன என்றார்கள். ஒரு உதாரணம் கொண்டு இதை பார்ப்போம்.

`கான்ஸ்டபிள்’. இந்த வார்த்தையை படித்த நீங்கள் கீழே இருக்கும் வார்த்தை என்னவாக இருக்கும் என்று சொல்லுங்கள்.

கா _ ல்.

`காவல்’ என்று தோன்றியிருக்குமே. வெரி குட்.

`டூயட்’. இந்த வார்த்தையை படித்த நீங்கள் கீழே இருக்கும் வார்த்தை என்ன என்று சொல்லுங்கள்.

கா _ ல்.

‘காதல்’ என்று சொல்லத் தோன்றுமே. கள்ளன் சார் நீங்கள்!

இரண்டுமே மூன்று எழுத்து வார்த்தை. நடு எழுத்து மிஸ்ஸிங். படித்த வார்த்தை அதற்கேற்ற நினைவுகளைத் தூண்டுவதை கவனித்தீர்களா. கான்ஸ்டபிள் என்று படித்த மனம் ‘காவல்’ என்றது. ஆனால் டூயட் என்று படித்தபோது ’காதல்’ என்கிறது. இதற்கு ப்ரைமிங் விளைவு (Priming Effect) என்று பெயர்.

தெளிவான குளத்தில் கல்லை எறியும் போது நீர்த்திவலைகள் ரிபிள்ஸ் ஆக பரவுவது போல் மனம் கேட்கும் அனுபவிக்கும் விஷயத்தின் அசோசியேடட் எண்ணங்கள் தூண்டப்படுகின்றன. மனதில் நிகழும் இந்த ரிபிள் விளைவை பற்றிய ஆழமான ஆய்வுகள்தான் இன்று உளவியலின் பிரதான பாடம்.

நம்மைச் சுற்றிய நிகழ்வுகள் நம் செய்கைகளையும், உணர்வுகளையும் நம்மை அறியாமலேயே ப்ரைம் செய்கின்றன என்பதை நாம் அறிவதில்லை. இதை உணர்த்தும் பிரபல ஆராய்ச்சி ஒன்றை நடத்தினார் `யேல் பல்கலைக்கழக’ சமூக உளவியல் பேராசிரியர் ‘ஜான் பார்க்’. கல்லூரி மாணவர்கள் சிலரிடம் சில வார்த்தைகள் தந்து அதிலிருந்து ‘Forgetful’, ‘Bald’, ‘Gray’, ‘Wrinkle’ போன்ற வார்த்தைகளை அடையாளம் காணச் சொன்னார். இவை வயதானவர்களின் குணாதிசயங்களை குறிப்பதை கவனியுங்கள். மாணவர்கள் பலர் சரியான விடையளித்தனர்.

இதன் பிறகு ஆய்வின் இரண்டாவது பகுதி கல்லூரியின் இன்னொரு பகுதியில் நடக்கிறது என்று கூறி மாணவர்கள் ஒரு நடைபாதை வழியாக நடந்து செல்ல பணிக்கப்பட்டனர். ஆனால் அந்த நடைதான் ஆய்வு என்பது அவர்களுக்குத் தெரியாது. அனைவரும் நடந்து சென்ற வேகம் கணக்கிடப்பட்டது.

நாம் மேலே பார்த்த வார்த்தைகளை கூறியவர்கள் தங்களை அறியாமல் வயதானவர்கள் போல் மெதுவாக நடந்து சென்றார்கள். அந்த வார்த்தைகளை கூறாதவர்கள் தங்கள் வயதிற்கேற்ப விரைவாக சென்று சேர்ந்தார்கள்.

ப்ரைமிங் இரண்டு விதங்களில் விளையாடியதை கவனியுங்கள். ‘வயதானவர்’ என்ற வார்த்தை குறிப்பிடப்படவில்லை என்றாலும் அவர்களுக்குள் முதுமை ப்ரைம் செய்யப்பட்டு முதுமைக்கு உண்டான எண்ணங்கள் மனதில் தூண்டப்பட்டிருக்கின்றன. அது அவர்கள் செயல்படும் விதத்தை பாதித்து அவர்களை வயதானவர்களைப் போல் மெதுவாக நடக்க செய்திருக்கிறது!

மாணவர்கள் இதை சற்றும் உணரவில்லை என்பது தான் இதில் ஹைலைட். நம் எண்ணங்கள் நாம் நடந்து கொள்ளும் விதத்தை பாதிக்கும் இது போன்ற நிகழ்வை ideomotor effect என்கிறார்கள். இது ரிவர்ஸிலும் வேலை செய்யும் என்பதை விளக்கும் ஜெர்மனி ஆய்வு ஒன்றை பார்ப்போம்.

கல்லூரி மாணவர்கள் ஒரு அரங்கைச் சுற்றி நிமிடத்திற்கு முப்பது படிகள் நடக்க சொல்லப்பட்டனர். ஐந்து நிமிடங்கள் அவர்கள் அப்படி நடந்தார்கள். இது அவர்கள் சராசரி நடக்கும் வேகத்தில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே. நடந்த பின் அவர்களுக்கு சில வார்த்தைகள் தரப்பட்டு அவைகளை அடையாளம் காண சொல்லப்பட்டது. அவர்கள் இனங்கண்ட வார்த்தைகள் பெரும்பாலானவை வயதானவர்கள் குணாதிசயங்களை குறிக்கும் வார்த்தைகளாக அமைந்தது.

விஷயம் புரிகிறதா. முதுமை ப்ரைம் செய்யப்படும்போது வயதானவரைப் போல் நடக்கிறோம். வயதானவரை போல் நடக்கும்போது முதுமை சம்பந்தமான எண்ணங்களை உணர்கிறோம். இக்கட்டுரையை படித்துவிட்டு நீங்களே சற்று நேரம் வயதானவரை போல் நடப்பீர்கள் பாருங்கள்!

என்ன டென்ஷனிலும் சாந்தமாய் இருந்து அமைதியாய் சிந்திக்க சொல்வது எதற்கு என்று இப்பொழுது புரிகிறதா. அமைதியாய் இருக்க முயற்சி செய்தால் ப்ரைமிங் விளைவுபடி உங்கள் எண்ணங்களும் உங்களை அறியாமல் சாந்தமாகி தெளிவான சிந்தனையோடு தீர்க்கமான முடிவுகள் எடுப்பீர்கள். நம்பிக்கை இல்லையென்றால் கிரிக்கெட் மேட்சுகளில் `மஹேந்திர சிங் தோனி’ என்ற ஒருவர் எப்படி ஆடுகிறார் என்பதைப் பாருங்கள்!

நினைவும் உணர்வும் மற்றவற்றை தூண்டுகின்றன என்றாலும் அதில் சிலதை மட்டுமே உணர்கிறோம். பெரும்பாலானவை நம் பிரஞ்ஞையில் பதிவதில்லை. நம்மைப் பற்றி, நம் நினைவுகளைப் பற்றி, நம்முள் நடப்பதைப் பற்றி நமக்கே முழுவதுமாக தெரிவதில்லை. ‘என் மனைவி என்னை புரிஞ்சுக்கல’ என்று இனி புலம்பாதீர்கள். உங்களையே நீங்கள் இன்னும் புரிந்துகொள்ளவில்லை!

இந்த மேட்டரை மையப்படுத்தி தன் புத்தகத்தில் விளக்குகிறார் ‘வர்ஜினியா பல்கலைக்கழக’ உளவியல் பேராசிரியர் ‘டிமொதி வில்சன்’. இவர் எழுதிய புத்தகத்தின் பெயர் ‘Strangers to Ourselves’. நமக்கு நாம் இன்னும் அந்நியனே!

நம் மனதிலுள்ள சிஸ்டம் 1 தான் நம்மையும் நம்மைச் சுற்றி நடப்பதையும் இண்டர்ப்ரெட் செய்து நம் நிகழ்காலத்தை கடந்த காலத்தோடு ஒப்பிட்டு வருங்காலத்தில் வரக்கூடியதோடு இணைக்கிறது. நாம் செய்யும் பல தவறுகளுக்கும் அந்த உள்ளுணர்வே காரணம்.

எப்பேற்பட்ட தவறுகள்?

என்ன அவசரம், சமயம் வரும்போது என்ன தவறு, அதை எப்படி செய்கிறோம் என்பதையெல்லாம் விளக்கமாய் பார்ப்போம்.

satheeshkrishnamurthy@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x