Published : 05 Oct 2013 03:25 PM
Last Updated : 05 Oct 2013 03:25 PM

பொது கணக்குக் குழு - என்றால் என்ன?

பொது கணக்குக் குழு (Public Accounts Committee)

அரசின் நிதி நிர்வாகம் பொது கணக்கு குழுவின் பரிசீலனைக்குப் பின் முடிவடைகிறது. பொது கணக்குக் குழுவிற்கு மக்களவையிலிருந்து 15 உறுப்பினர்களும், மாநிலங்களவையிலிருந்து 7 உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்படுவர். பொதுவாக எதிர்க் கட்சியிலிருந்து ஒருவர் பொதுக் கணக்குக் குழுவிற்குத் தலைவராக நியமிக்கப்படுவார். பொதுக் கணக்குக் குழுவின் பதவிக் காலம் ஓர் ஆண்டாகும். அமைச்சர் ஒருவர் இந்த குழுவில் உறுப்பினராக இருக்கமுடியாது. பொதுக் கணக்குக் குழு உறுப்பினர் ஒருவர் அமைச்சராக பதவியேற்றால், அவருக்கு பதில் இக்குழுவிற்கு புதிய உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்படவேண்டும்.

CAG சமர்பிக்கும் அறிக்கையின் அடிப்படையில் பொதுக் கணக்கு குழு அரசின் வரவு, செலவுகளை பரிசீலனை செய்யும். Finance Act மூலமாக வரி விதிக்கவும் Appropriation Act மூலமாக ஒவ்வொரு அமைச்சகமும் செலவுகளை செய்யவும் பாராளுமன்றம் இந்திய அரசுக்கு அதிகாரங்களை வழங்குகிறது. இந்தச் சட்டங்களில் குறிப்பிட்டுள்ளபடி அரசு வரி வருவாய் பெற்றிருக்கிறதா, செலவுகளை செய்திருக்கிறதா என்று பொதுக் கணக்கு குழு ஆராயும். இதில் CAG பொதுக் கணக்குக் குழுவிற்கு உதவி செய்யும்.

பொதுக் கணக்குக் குழுவின் முன் ஒவ்வொரு அமைச்சகத்தின் அதிகாரிகள் வந்து CAGயும் பொது கணக்கு குழுவும் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலும் விளக்கங்களும் அளிப்பர். அமைச்சர்கள் பொது கணக்கு குழு முன் விளக்கம் அளிப்பதில்லை. சில நேரங்களில் பொது கணக்கு குழு ஒரு துறையின் அமைச்சரை சந்தித்து இறுதியாக தனது முக்கிய பரிந்துரைகளை கூறலாம்.

Finance Act படி வரி வசூலிக்கப்படவில்லை என்றாலும் Appropriate Act படி அல்லாமல் கூடுதல் செலவு செய்யப்பட்டிருந்தாலும் பொது கணக்கு குழு தனது அறிக்கையை மக்களவைத் தலைவர் மூலமாக அமைச்சகங்களுக்கு தரும். இந்த அறிக்கை பெறப்பட்ட ஆறு மாதத்திற்குள்ளாக அந்தந்த அமைச்சகம் அறிக்கையின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைப் பற்றி ஓர் அறிக்கையை பாராளுமன்றதிற்கு வழங்கவேண்டும். இவ்வாறு அரசின் நிதி நிர்வாகம் முடிவுக்கு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x