Published : 04 Feb 2014 11:00 AM
Last Updated : 04 Feb 2014 11:00 AM

ஒழுங்குமுறை ஆணையத் தலைவர்களுடன் நிதி அமைச்சர் சிதம்பரம் இன்று சந்திப்பு

தற்போது நிலவிவரும் மேக்ரோ பொருளாதாரம் குறித்து விவாதிப்பதற்கு அனைத்து நிதி சார்ந்த ஒழுங்குமுறை ஆணையத் தலைவர்களை செவ்வாய்க்கிழமை மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் சந்திக்க உள்ளார். இது தொடர்பாக நடைபெற உள்ள நிதி ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சி மேம்பாட்டுக் கவுன்சில் கூட்டத்துக்கு (எஃப்.எஸ்.டி.சி.) நிதி அமைச்சர் தலைமை தாங்குகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் தன்னுடைய ஊக்க நடவடிக்கைகளை 10 பில்லியன் டாலர்கள் அளவுக்குக் குறைத்தது. மேலும் இந்திய ரிசர்வ் வங்கி நடப்பு நிதி ஆண்டின் வளர்ச்சியை 5 சதவீதத்துக்கும் கீழாக மறுமதிப்பீடு செய்திருந்த நிலையில் இந்தக் கூட்டம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

தற்போதைய நிதி ஆண்டின் முதல் பாதி ஜி.டி.பி. வளர்ச்சி 4.6 சதவீதமாக இருக்கிறது. இதை எப்படி அதிகரிப்பது என்பதுதான் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் முக்கியமான விஷயமாக இருக்கக் கூடும். மேலும், பொதுத்தேர்தலுக்கு முந்தைய கடைசி கூட்டம் இதுவாகத்தான் இருக்கும்.

நடப்பு நிதி ஆண்டில் 5 சதவீத வளர்ச்சி இருக்க வேண்டும் என்றால் இரண்டாம் பாதியில் 5.4 சதவீத வளர்ச்சியை எட்ட வேண்டும்.

இதைதவிர வங்கிகளின் வாராக்கடன் குறித்தும் பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மார்ச் மாதத்தில் ரூ.1.83 லட்சம் கோடியாக இருந்த பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் இப்போது 28.5 சதவீதம் உயர்ந்து ரூ. 2.36 லட்சம் கோடியாக உயர்ந்திருக்கிறது.

கடந்த வருடங்களுடன் ஒப்பிடும் போது இந்தத் தொகை மிகவும் அதிகமாகும். கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் வாராக்கடன் ரூ.94,121 கோடியாக இருந்தது. அதுவே 2012 மார்ச் மாதத்தில் சிறிதளவு அதிகரித்து ரூ.1.37 லட்சம் கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

நிதி அமைச்சக அதிகாரிகளுடன் பிட்ச் சந்திப்பு

தர ஆய்வு நிறுவனமான ஃபிட்ச் திங்கட்கிழமை நிதி அமைச்சக அதிகாரிகளை சந்தித்தார்கள். நிதிப்பற்றாக்குறை குறித்தும் இந்தியாவின் தர மதிப்பீடு குறித்தும் பேசியதாகத் தெரிகிறது.

பொருளாதார விவகாரங் களுக்கான செயலாளர் அர்விந்த் மாயாராம் தலைமையிலான அதிகாரிகள் ஃபிட்ச் அதிகாரிகளை சந்தித்தார்கள். அப்போது நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை 5,000 கோடி டாலர்களுக்குள் குறைக்கப்படும் என்று நிதி அமைச்சக அதிகாரிகள் கூறியதாகத் தெரிகிறது.

மேலும் திட்டங்களை துரிதகதியில் செயல்படுத்தி வருவதாகவும் இதுவரை ரூ. 5.5 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு ஏற்கெனவே அனுமதி அளிக்கப்பட்டதாகவும், ரூ.10 லட்சம் கோடி மதிப்பிலான 250 திட்டங்களுக்கு விரைவில் அனுமதி அளிக்கப்படும் என்றும் நிதி அமைச்சக அதிகாரிகள் பிட்ச் அதிகாரிகளிடம் கூறியதாகத் தெரிகிறது.

தற்போதைய நிலையில் இந்தியாவுக்கு பிபிபி- என்ற மதிப்பீட்டை ஃபிட்ச் வழங்கி இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x