Last Updated : 26 Dec, 2013 10:53 AM

 

Published : 26 Dec 2013 10:53 AM
Last Updated : 26 Dec 2013 10:53 AM

பணம் III - என்றால் என்ன?

உலோக பணமானது உலோகத்தின் இருப்புக்கு ஏற்றவாறு மாறுபடும். அப்பணத்தின் அளிப்பை மத்திய வங்கி தனிச்சையாக மாற்ற முடியாது. சட்டரீதியான பணத்தை வெளியிடும் மத்திய வங்கி, பண அளவிற்கு ஈடான தங்கமோ அல்லது வேறு விலை மதிப்புள்ள உலோகங்களோ இல்லாமலே காகித பணத்தை (ஆனால், அரசாங்க பத்திரங்களுக்கு ஈடாக காகித பணத்தை வெளியிட முடியும்) வெளியிட முடியும். இவ்வாறு பணத்தின் அளிப்பை தன்னிச்சையாக மாற்றியமைக்க முடியும் என்ற காரணத்திற்காகவும், காதிகப் பணத்தை நாடுகள் விரும்புகின்றன.

எல்லா மத்திய வங்கிகளும் அந்தந்த நாட்டு அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால், தனக்குத் தேவையான பணத்தை அச்சிட்டு கொடுக்குமாறு அரசு மத்திய வங்கியை பணிக்கலாம். எப்போதெல்லாம் தனது செலவை உயர்த்த வேண்டும் என்று நினைக்கிறதோ அப்போதெல்லாம் பண அளிப்பை அதிகமாக்கி, அதனைக் கொண்டு அரசு தனக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்த முடியும்.

ஆனால் இதில் ஒரு பெரும் சிக்கல் உண்டு. பண அளிப்பை அதிகமாக்கும் போது, நாட்டின் உற்பத்தி பெருகவில்லை என்றால், பணவீக்கம் ஏற்படும், அதாவது, பொருட்களின் விலைகள் உயரும். பணவீக்கம் ஏற்பாடும்போதெல்லாம், மக்கள் மேலும் பணவீக்கம் ஏற்படும் என்ற எதிர்பார்ப்பில் தங்கள் பொருட்களின் விலைகளை மேலும் உயர்த்துவர். இதனால், பணமதிப்பு வேகமாகக் குறையும். பணத்தின் மதிப்பு நிலையாக இருப்பதுதான் அதனின் சிறப்பு செயல்பாடுகளில் ஒன்று என்று ஏற்கெனவே பார்த்தோம்.

பெரும்பாலான நாடுகள், அரசின் ஆணைக்கு பணிந்து பண அளிப்பை மத்திய வங்கி உயர்த்தக்கூடாது என்பதால், பண அளிப்பை மத்திய வங்கி தன்னிச்சையாக முடிவு செய்ய வேண்டும் என்று சட்டம் நிறைவேற்றி உள்ளன. இந்தியாவிலும் இவ்வாறான சட்டம் உண்டு. எனவேதான், மத்திய வங்கி அவ்வப்போது வெளியிடும் பணக் கொள்கை (monetary policy) அறிக்கைகள் கவனத்துடன் விவாதிக்கப்படுகின்றன. பணக் கொள்கையில் பண அளிப்பு எவ்வாறு இருக்கும் என்ற தனது முடிவை மத்திய வங்கி அறிவிக்கும்.

ஒரு நாட்டு பணம் வேகமாக மதிப்பை இழந்தால், அதன் மீது அந்நாட்டு மக்களே நம்பிக்கை இழந்துவிடுவர். 2005 இல் துருக்கி நாட்டின் பணம் ‘லிரா’(lira) தன் மதிப்பை வேகமாக இழந்துவந்தது. ஆகவே, பழைய பத்து லட்சம் லிராவிற்கு ஒரு புதிய லிரா சமம் என்று அந்நாட்டில் புதிய பணம் வெளியிடப்பட்டது. இதே போன்று, 1994 பிரேசில் அரசும் புதிய பணத்தை வெளியிட்டது. இவ்விரு அனுபவங்களும், நமக்கு சொல்லும் பாடம், எதனை பணமாக எல்லாரும் ஒப்புக்கொள்கிறார்களோ, அதுவே பணம். மக்களின் நம்பிக்கையை நாட்டின் பணம் இழந்தால், அதனை பயன்படுத்துவதை அந்நாட்டு மக்கள் தவிர்க்கக்கூடும். பல நேரங்களில் தென் அமெரிக்க நாடுகளில் உள்ள மக்கள் தங்கள் நாட்டு பணங்களை தவிர்த்து அமெரிக்காவின் டாலரை பயன்படுத்தியதும் உண்டு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x