Published : 17 Jun 2016 10:27 AM
Last Updated : 17 Jun 2016 10:27 AM

வணிக நூலகம்: சிந்தனைக்குப் பிறகான செயல்பாடுகளே சீரிய வெற்றியைத் தேடித்தரும்!

தங்கச் சுரங்கங்கள் வற்றிபோகலாம், பங்குச் சந்தையில் சரிவு ஏற்படலாம், சொத்துகள் கூட கைவிட்டுப்போகலாம் ஆனால், நன்கு சிந்திக்கும் திறனுடைய மனித மனம் ஒருபோதும் சோடைபோவதில்லை மற்றும் அது விலைமதிப்பற்றதும் கூட. சிறந்த சிந்தனையாளராக மாறவேண்டுமானால் அதற்கான தேடல் மற்றும் உழைப்பு மிகவும் அவசியம். “சிந்தித்தல் என்பது கடினமான பணி, அதனாலேயே சிலர் மட்டும் அதனை செய்கின்றனர்” என்கிறார் புகழ்பெற்ற இயற்பியல் துறை வல்லுநரான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.

எண்ணங்களே

அனைத்து விஷயங்களுக்கும் தொடக்கப்புள்ளி. வெற்றியாளர்கள் அனைவருக்கும் உள்ள ஒரு பொதுவான குணாதிசயம் என்ன என்று தெரியுமா? அவர்களின் சிந்திக்கும் வழிமுறை மட்டும்தான். நல்ல சிந்தனையாளர்கள் சிக்கல்களிலிருந்து எளிதில் விடுபடுகிறார்கள். வெற்றிக்கான புதிய யோசனைகளுக்கு ஒருபோதும் அவர்களுக்கு பற்றாக்குறை ஏற்படுவதில்லை. எப்போதும் மிகச்சிறந்த எதிர்காலத்துக்கான நம்பிக்கையுடன் இருப்பார்கள்.

நமது திறன்களில் மிகவும் முக்கிய மான, அவசியமான திறன் சிந்தனை. நாம் எப்படி சிந்திக்கிறோம் என்பதைப் பொறுத்தே நமது வெற்றி அமைகின் றது. மேலும், இதுவே வெற்றியாளர் களுக்கும் மற்றவர்களுக்கும் உள்ள வேறுபாடு. எண்ணத்தை மாற்றும்போது எதிர்காலத்தையும் மாற்ற முடியும் என்கிறார் “ஹவ் சக்சஸ்புஃல் பீப்புள் திங்” என்னும் இந்த புத்தகத்தின் ஆசிரியர் “ஜான் சி மாக்ஸ்வெல்”.

ஏன் சிந்தனை மாற்றம்?

வழக்கமான எண்ணங்களிலிருந்து மாறுபட்டு, புதிய சிந்தனைகளை ஏன் நாம் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்? எதற்காக இந்த சிந்தனை மாற்றம் நமக்கு அவசியமாகிறது? போன்ற கேள்விகளுக்கு பதிலாக சிந்தனையின் பயன்கள் சிலவற்றை குறிப்பிட்டுள் ளார் ஆசிரியர். நல்ல எண்ணங்களின் வாயிலாக பல்வேறு நன்மைகள் நமக்கு வந்தடைகின்றன. அதாவது, நமது பொருளாதார மேம்பாடு, பிரச்சனைகளிலிருந்து விடுபடுதல், நமக்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ளுதல் போன்றவற்றில் எண் ணங்களின் பங்கு மிகவும் அதிகம். மேலும், தனிப்பட்ட மற்றும் தொழில் முறையில் சிந்தனைகள் நம்மை முற்றிலும் புதியதொரு நிலைக்கு அழைத்துச்சென்று நமது வாழ்வில் மாற்றத்தினை ஏற்படுத்துகின்றன.

சிந்தனையின் பயன்கள் பலவகை யில் இருந்தாலும், நல்ல சிந்தனைகளை உருவாக்கிக்கொள்ளுதல் என்பது எளிதான செயல் அல்ல என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண் டியது அவசியமான ஒன்று. சிறந்த சிந்தனையாளராக மாறவேண்டு மானால் அதற்கான தேடல் மற்றும் உழைப்பு மிகவும் அவசியம். “சிந்தித்தல் என்பது கடினமான பணி, அதனாலேயே சிலர் மட்டும் அதனை செய்கின்றனர்” என்கிறார் புகழ்பெற்ற இயற்பியல் துறை வல்லுநரான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.

நமது சிந்தனையினை எவ்வாறு மேம்படுத்திக்கொள்வது என்பதைக் கற்றுக்கொள்ளத் தொடங்கும்போதே, சிறந்த சிந்தனையாளராக மாற ஆரம் பிக்கின்றோம் என்கிறார் ஆசிரியர். மேலும், சிந்தனையானது மிகச் சிறந்த முதலீடு என்பதையும் தெளிவு படுத்துகிறார். தங்கச் சுரங்கங்கள் வற்றிப் போகலாம், பங்குச் சந்தையில் சரிவு ஏற்படலாம், சொத்துகள் கூட கைவிட்டுப்போகலாம் ஆனால், நன்கு சிந்திக்கும் திறனுடைய மனித மனம் ஒருபோதும் சோடைபோவதில்லை மற்றும் அது விலைமதிப்பற்றதும் கூட.

எப்படி சிந்தனை மாற்றம்?

நல்ல சிந்தனைக்கான செயல்பாடு களில் திறம்பட செயல்பட மற்றும் நமது இன்றைய சிந்தனையிலிருந்து நாளை சிறந்த சிந்தனையாளராக உருவாக குறிப்பிட்ட சில பரிந்துரைகளை கொடுத் துள்ளார் ஆசிரியர். ஒரு செயலின் தொடக்கத்திலேயே சிந்தனைக்கான செயல்பாடுகளை தொடங்கிவிட வேண் டும். ஏனென்றால், எதை ஆரம்பத்தில் கொடுக்கிறோமோ அதுவே இறுதியில் நமக்கு கிடைக்கும் வெற்றிக்கான தாக்கமாக அமைகின்றது. சிறந்த புத்தகங்களை படிப்பது, பத்திரிக்கை கட்டுரைகளின் மீதான விமர்சனம், வெற்றியாளர்களின் பேச்சைக் கேட்பது மற்றும் அவர்களுடனான கலந்துரை யாடல் ஆகியவற்றிலிருந்து நமக்கான கருத்துக்களையும், சுய சிந்தனைக்கான அடித்தளத்தினையும் பெற்று அதன்மூலம் நமது எண்ணங்களை தூண்டச்செய்ய வேண்டும்.

சிந்தனையில் கவனம் தேவை!

மன ரீதியிலான செயலோ அல்லது உடல் ரீதியிலான செயலோ எதுவாயினும், அதை கவனமாக செய்யும்போது மட்டுமே அது நமக்கு தேவையான திறனையும் சக்தியையும் நம்மிடம் கொண்டுவரும். குறிப்பிட்ட செயலுக்கான சிந்தனையின்போது தேவையற்ற எண்ணங்களும் சேர்ந்தே வரச்செய்யும். சிந்தனையில் முழு கவனம் செலுத்தும்போது மட்டுமே அது முழுமையான பயனை தரும். மிக கவனமான சிந்தனையே எண்ணச் சிதறலிலிருந்து நம்மை விடுவிக்கும். மேலும், மன அமைதி கெட்டுவிடாமலும் பாதுகாக்கும். இதன்மூலமே தேவையான மற்றும் தெளிவான சிந்தனையினைப் பெற முடியும். சிந்தனையில் செலுத்தும் கவனம் நம்முடைய இலக்கின் செயல்பாட்டில் தெளிவை ஏற்படுத்துகின்றது, நம்மை அடுத்தகட்ட நகர்த்தலுக்கு அழைத்துச்செல்கிறது.

கவனமான சிந்தனை வேண்டும் என்பதெல்லாம் சரி, அதை எவ்வாறு பெறுவது அல்லது செயல்படுத்துவது என்பதையும் தெரிந்துக்கொள்ள வேண்டும் அல்லவா!. நமது சூழலுக்கோ அல்லது தேவைகளுக்கோ ஏற்ப நமது பணிகளுக்கு எவ்வாறு முன்னுரிமை கொடுப்பது என்பதை சரியாக திட்டமிட்டுக்கொள்ள வேண்டும். இதில் நமது தனிப்பட்ட செயல்பாடுகள், குடும்பம், வேலை, தொழில் மற்றும் குழு போன்றவை அடங்கும். நமது ஆற்றலுக்கு ஏற்பவோ, அதிக வருவாய் அல்லது வெகுமதி ஆகியவற்றுக்கு ஏற்பவோ நமது பணிகளுக்கு முன்னுரிமை கொடுத்து செயல்படலாம்.

ஆக்கப்பூர்வமான சிந்தனை!

சிந்தனையில் எந்தளவிற்கு கவனம் தேவையோ அதைவிட அச்சிந்தனை ஆக்க பூர்வமானதாக இருக்க வேண்டியது அவசியம் என்கிறார் ஆசிரியர். படைப்பாற்றலே நமது செயல்பாட்டிற்கு நாம் கொடுக்கக்கூடிய மதிப்புமிக்க மூலதனம் என்கிறார் வெல்மேன். நமது செயலைவிட, நாம் பெறுவதைவிட ஏன் நமது இலக்கினை விடவும் அதிக மதிப்புடையது ஆக்கப்பூர்வமான சிந்தனையின் படைப்பாற்றல். ஆக்கப்பூர்வ சிந்தனையாளர்கள் தோல்விகளைக் கண்டு ஒருபோதும் தங்களது செயல்பாட்டிலிருந்து பின்வாங்குவதில்லை. ஏனென்றால் அவர்களது படைப்பாற்றல் அந்த தோல்வியை சமன் செய்து அவர்களை தொடர்ந்து செயல்பட வைக்கின்றது. மேலும், அவர்கள் தங்களின் ஒவ்வொரு செயலிலும் அதற்கான மதிப்பை அதிகரித்துக்கொள்கிறார்கள். இதைவிட முக்கியம் ஆக்கப்பூர்வமான சிந்தனை நம்மை அதிகம் கற்றுக்கொள்ளத் தூண்டுகிறது.

ஆக்கப்பூர்வ சிந்தனை முக்கியமான ஒன்றே. சரி, அப்படியானால் அந்த படைப்பாற்றலை நமக்குள் எவ்வாறு கண்டறிவது என்ற கேள்வி எழும் அல்லவா!. அதற்கு முதலில் படைப்பாற்றலை தடுக்கும் காரணிகளை நம்மிடமிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்கிறார் மாக்ஸ்வெல். நான் ஆக்கப்பூர்வ எண்ணங்களைக் கொண்டவன் அல்ல, தோல்வியே இறுதியானது, வசதியில்லை, போதிய நேரமில்லை, இதை ஒருபோதும் செய்ய முடியாது, இது நடைமுறைக்கு சாத்தியமற்றது, கடினமானது போன்ற வற்றை நம் மனதிலிருந்து அடியோடு அகற்றவேண்டும். மேலும், சரியான கேள்விகளை கேட்பது, தகுந்த சூழ் நிலைகளை உருவாக்கிக்கொள்வது, செயலில் எண்ணத்தில் புதுமைகளை கையாள்வது ஆகியவையும் ஆக்கப்பூர்வமான சிந்தனைகளுக்கான வழிமுறைகளாகும்.

யதார்த்தமான சிந்தனை!

யதார்த்தமான சிந்தனைகளும் செயல்பாடுகளும் நமது பணியை சரியான திசையில் கொண்டுசெல்ல உதவிபுரிகின்றன. நமது செயலில் குறுக்கிடும் எதிர்மறையான ஆபத்து களை பெருமளவில் குறைக்கும் திறன் யதார்த்த சிந்தனைக்கு உண்டு என்கிறார் ஆசிரியர். இலக்கினையும் அதற்கான திட்டத்தினையும் சரியாக கணிப்பதற்கு இவை துணைநிற்கின்றன. மேலும், மாற்றத்திற்கான தூண்டுகோலாகவும், செயல்பாட்டின் பாதுகாவலனாகவும், சிக்கல்களின்போது சிறந்த நண்பனாக வும், நம்பகத்தன்மை அதிகரிப்பிற்கும் யதார்த்த சிந்தனையே பேருதவியாக இருப்பதாக தெளிவுபடுத்தியுள்ளார் ஆசிரியர்.

தன்னலமற்ற சிந்தனை!

புதியதொரு வழியில் நமது வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும் வல்லமை உடையது தன்னலமற்ற சிந்தனை. மற்ற வகை சிந்தனைகள் நமது தனிப்பட்ட வெற்றிக்கான ஆற்றலை கொடுக்கும் வேளையில், தன்னலமற்ற சிந்தனை அவற்றிலிருந்து வேறுபட்டு, ஒரு புதிய மாறுபட்ட பரிணாமத்தையும் பயன்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. நம்மை விட மற்றவர்களுக்கு முன்னுரிமை கொடுத்தல் மற்றும் அவர்களின் தேவைகளை சரியாக அறிந்திருத்தல் ஆகியவற்றின் மூலம் தன்னலமற்ற சிந்தனைகளை நம்மால் மேம்படுத்திக் கொள்ள முடியும். நம் மீதான மற்றவர்களின் மதிப்பை உயர்த்திக் காட்டுவது, நல்லொழுக்கங்களுக்கு ஊக்கமூட்டுவது, வாழ்க்கையின் தரத்தினை அதிகரிக்கச்செய்வது என இதன் பயன்கள் நமது வாழ்வின் பல நிலைகளிலும் பரவிக்கிடக்கின்றது.

சிந்தனைக்குப்பின் செயல்படுத்தப் படும் பணியே சீரிய வெற்றியைத் தேடித்தரும். ஒட்டுமொத்த செயல்பாட் டிற்குமான திட்டத்தினை சிந்தனையின் மூலமாக வரையறுத்துக்கொண்டால் எளிதில் வெற்றிபெற முடியும் என்பதை அறிந்துக்கொண்டு, சிந்தனையில் கவனம் செலுத்தி சிகரத்தை எட்டிப் பிடிப்போம்.

p.krishnakumar@jsb.ac.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x